இதெல்லாம் படம் இல்ல பாஸ் பா…ட…ம்!

0
758

வெற்றியடைந்த படங்களை விட மிக மோசமாக தோல்வியடைந்த படங்கள் தான் நமக்கு பெரிய படிப்பினைகளை தரும் என்பார்கள் சினிமா ஜீனியஸ்கள். அப்படி நமக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நிறைய படிப்பினைகளை இந்த ஆண்டு வாரி வழங்கிய படங்கள் இவை..

சாகசம்

பிரஷாந்தையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு நினைவுக்கே வருவதில்லை. ஆனாலும் அவர் நடித்த ஒரு படம் ஏகப்பட்ட பில்டப்களுடன் இந்த ஆண்டு வெளியானது. வெளியான பின்னர் தான் அது ஒரு ஹிட் அடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் என தெரிய வந்தது. அம்புட்டு ரகசியமா வெச்சிருந்தாங்களாம்… அந்த ஹிட் படம் எடுத்த டைரக்டர் மட்டும் இந்த ரீமேக்கை பார்த்திருந்தால் கண்ணீர் விட்டு அழுதிருப்பார். அந்த அளவுக்கு படத்தை நாசமாக்கி இருந்தார்கள். வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரிஜினல் படத்திலிருந்த சில காட்சிகளை அப்படியே வெட்டி இதில் சேர்த்தும் இருந்தார்கள். வேண்டா வெறுப்புக்கு பிள்ளையை பெத்து காண்டாமிருகம் என்று பேர் வைத்த கதையை தன் மகனுக்கே செய்து அழகு பார்த்திருந்தார் தியாகராஜன்.

ஜித்தன் 2

ஜித்தன் என்பது ரமேஷ், பூஜா நடிப்பில் வின்செண்ட் செல்வா இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஒரு படம். அந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்தியதை தவிர படம் முழுக்க ஒரே குப்பை தான். பேய் படங்களாக எடுத்து இந்தியாவை விட்டே பேயை விரட்டிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு பேயை ஒழிக்க கையில் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் தான் ஜித்தன் 2. படத்தை பார்த்தால் பேய்களே அப்பல்லோவில் போய் படுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும். அந்த அளவுக்கு கொடூர மொக்கையாக எடுத்து நம்மை சாகடித்தார்கள்.

இது நம்ம ஆளு

சிம்புவின் கேரக்டர் நன்றாக தெரிந்தும் கூட கரும்பு மெஷினில் துணிச்சலாக தலையை கொடுத்தார் பாண்டிராஜ். சிம்பு நயன் காதல் பிரேக்கப்புக்கு பிறகு ஜோடி சேரும் படம்.. பாண்டிராஜ் இயக்கம் என்று ஏகப்பட்ட பில்டப்களுடன் ஆரம்பிக்கப்பட்ட படம். ஆரம்பிக்கவே இரண்டு ஆண்டுகள் ஆனது. பின்னர் பிய்த்து பிய்த்து சிம்பு கொடுத்த ஒத்துழைப்பால் ’இது நம்ம ஆளு’ ’இது ஒரு மாதிரியான ஆளா’கி வெளியானது. படம் பார்த்தவர்களும் வரும்போது ஒரு மாதிரியாகி வந்தனர். இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆனதாக கேள்வி.

வாகா

இந்த ஆண்டு இரண்டு விஷயங்களில் காஷ்மீர் காமெடியாகி போனது. ஒன்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் பாடி ஆல் இண்டிய சூப்பர் சிங்கர் அவார்டை தட்டி சென்றார். இன்னொன்று காஷ்மீர் எல்லையில் நடக்கும் கதை என்று காஷ்மீரை வைத்து வாகாவில் காமெடி செய்து தயாரிப்பாளரையும் ரசிகர்களையும் ஸ்வாஹா செய்திருந்தார்கள். ரசிகர்கள் கைகளில் மட்டும் ஆளுக்கொரு துப்பாக்கி கொடுக்கப்பட்டிருந்தால் இந்த படத்தை பார்ப்பதற்கு பதிலாக எல்லையில் போய் குண்டடி வாங்கியே செத்திருப்பார்கள். அங்கே எல்லையிலே என்ற வைரல் வார்த்தைகளுக்கு ஒரு வகையில் ஆரம்பமாக அமைந்தது வாகா படத்தின் கதை.

அச்சம் என்பது மடமையடா

சிம்புவை நம்பினோர் கைகொடா கெடுவார் என்ற புதுமொழியை கவுதம்மேனனுக்கும் சிம்பு கற்றுக்கொடுத்த படம். முதல் பாதி முழுக்க சிம்பு காதலை சொல்வாரா இல்லையா என்று ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்தார்கள். ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உயிர் தப்பினால் போதும் என்று தியேட்டரையே விட்டு ஓடினார்கள். ‘’நீ டைரக்‌ஷன் பண்ணிப் பாரு… அப்ப புரியும்’’ என்று இரண்டாம் பாதியை சிம்புவை எடுக்க விட்டுவிட்டு கவுதம் வேடிக்கை பார்த்ததாகவும் அதன் விளைவே இது என்றும் அதிகாரபூர்வமில்லாத செய்திகள் தெரிவிக்கின்றன. பாடல்கள் மட்டும் ஆறுதலை தந்தன. அவற்றையும் இடைவேளைக்கு முன்பே முடித்துவிட்டதால் பாதி படத்துக்கு முழு காசு கொடுக்கணுமா? என்ற பஞ்சாயத்து எல்லா தியேட்டர் கவுண்டர்களிலும் எழுந்தது.