அரசியலுக்கு குட்பை… குழப்பத்தில் குஷ்பு?

குழப்பங்கள் குஷ்புவுக்கு புதிதல்ல. குழப்பி விட்டு அதில் இருந்து மீனைப் பிடிக்கும் அரசியலிலும் குஷ்பு கில்லாடி தான். ஆனால் இப்போது குஷ்புவுக்கு ஏற்பட்டிருப்பது குழப்பத்தை தாண்டிய தயக்கம்.

காங்கிரஸின் திடீர் அதிமுக பாசம்

கலைஞர் குடும்பமும், ஸ்டாலினும் என்ன நினைத்தாலும் சரி… குஷ்பு இன்னமும் கலைஞர் அபிமானியாகத் தான் இருக்கிறார். திமுக கைவிட்ட பின்பு கூட காங்கிரஸில் இணைந்தது திமுகவையோ கலைஞரையோ விமர்சிக்க கூடாது என்பதற்கு தான். இப்போது கூட கலைஞருக்கு உடல் நலம் இல்லை என்றதும் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. நோய்த்தொற்று காரணமாக யாரையுமே அனுமதிக்கவில்லை என்று காரணம் சொல்லிவிட்டார்கள்.

காங்கிரஸில் சமீபகாலமாக அதிமுகவுடன் நெருங்கலாம் என்ற போக்கு காணப்படுகிறது. காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசர் அதிமுக மீது பாசம் கொண்டவர். ஜெயல்லிதாவை நெருங்கும் பொருட்டே அவர் நியமிக்கப்பட்டார் என்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் தலைவரான பின்னர் திமுகவை விமர்சித்தார். அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசினார். நக்மா அதிகமாக மேடைகளில் காணப்படுகிறார். கட்சி சார்பில் பேச வைக்கப்படுகிறார். எனவே திமுக அபிமானியான குஷ்புவை ஒதுக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

பாஜக பாசம்

பாஜக கொண்டு வரும் பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் காங்கிரஸின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான குஷ்பு இந்த சட்டத்துக்கு முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். குஷ்பு ஒரு இசுலாமியர். எனவே அவருக்கு இதில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று பெண் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. ‘’அது அவரது சொந்தக் கருத்து’’ என்று திருநாவுக்கரசர் நழுவி விட்டார். ஆனால் காங்கிரஸின் சிறுபான்மை பிரிவினர் குஷ்புவுக்கு எதிராக புகார்ப் பட்டியலை தயார் செய்து ராகுலுக்கு அனுப்பியிருக்கிறார்கள். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். இதற்காக நாடு முழுதும் கையெழுத்து வேட்டை நடத்தப்போகிறார்கள்.

நடிப்பில் ஆர்வம்

சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தவர் அரசியலில் சின்ன பிரேக் எடுத்துக்கொள்ளலாம் என்று இப்போது நடிப்பில் ஆர்வம் காட்டுகிறார். தன்னை ஒதுக்குபவர்களுக்கு தான் முடங்கி விட மாட்டேன் என்று குஷ்பு தரும் பதிலடி என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். சன் டிவியில் நிஜங்கள் என்ற பெயரில் ஷோ பண்ணும் அவர் சினிமாவிலும் மீண்டும் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார். ஒரு படம் கமிட் ஆகி நடித்துக்கொண்டும் இருக்கிறார்.

பாஜகவில் சேர்வாரா?

அப்படித்தான் சொல்கிறார்கள் குஷ்புவுக்கு நெருக்கமானவர்கள். பாஜகவோடு ஏற்கெனவே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டார். நல்ல பதவிக்காக காத்திருக்கிறார் என்கிறார்கள் குஷ்புவோடு இப்போது நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள். பாஜகவும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று தான். குஷ்புவுக்கு மாநில அளவிலான பதவியை கொடுத்து கட்சியை வளர்க்க திட்டமிடுவார்கள். அப்படி ஒன்று நடந்தால் குஷ்பு கலைஞரையே எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு குஷ்புவின் மனது இடம் கொடுக்குமா? என்பதுதான் இப்போதைய கேள்வி. இது எல்லாமே வேண்டாம் அரசியலுக்கே குட்பை சொல்லிவிடலாம் என்றும் குஷ்பு யோசிப்பதாகவும் சொல்கிறார்கள்.

இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும்போதும் இதுபோன்ற குழப்பத்தில் இருக்கும்போதும் பெரிய முடிவுகள் எடுக்கமாட்டார் குஷ்பு. சில காலம் கழித்து தனக்கு சாதகமான காலகட்டம் அமையும்போது மட்டும் தான் முடிவுகள் எடுப்பார். இது அப்படி ஒரு சூழல் அமைவதற்காக குஷ்பு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் என்றே தோன்றுகிறது. மும்பையில் பிறந்த ஒரு பெண் தமிழ் சினிமாவில் நடிகையாகி பின்னர் அரசியலுக்கு வந்தது மட்டுமல்ல குஷ்புவின் சாதனை. அதன்பின் நடந்த ஒவ்வொரு சோதனையிலும் கலங்காமல் நின்று அரசியல் பண்ணுவது தான் குஷ்புவின் தனித்திறன். மீண்டும் ஒரு சவால் குஷ்புவை நோக்கி வந்திருக்கிறது. என்ன செய்கிறார் என்று பார்ப்போம்