வெற்றி நடிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. நாம் அன்றாடம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு விஷயத்தின் பின்னால், இவ்வளவு பெரிய சர்வதேச வணிகமும், அதைக் கட்டுப்படுத்தும் மாஃபியா நெட்வொர்க்கும் இயங்குகின்றன என்பதை வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர்.
தலைமுடி என்ற கருப்புத் தங்கம்!
மனிதர்களின் தலைமுடி உலகம் முழுவதும் பெரும் வணிகப் பொருளாக விற்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய தலைமுடிக்கு சர்வதேச சந்தையில் இருக்கும் மதிப்பையும், அதன் பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய கொள்ளை வணிகத்தையும் மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வணிகத்தின் பின்னணியில் இருக்கும் மாஃபியா கும்பலிடம் ஒரு குடும்பத்தின் தந்தை சிக்கிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக மகன் மேற்கொள்ளும் போராட்டம்தான் படத்தின் மையக்கதை.
ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபடும் மூன்று பேர், ரகசியமாக இயங்கும் அண்டர்கிரவுண்ட் கேங்கில் இருக்கும் இரண்டு பேர், அழகான குடும்பம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் கதை நகர்கிறது. இப்படி நான்கைந்து வெவ்வேறு கோணங்களில் கதையைச் சொல்லியிருப்பது படத்திற்கான சுவாரஸ்யமான அடித்தளமாக அமைந்துள்ளது.
வித்தியாசமான கதை… பலவீனமான திரைக்கதை!
தமிழில் வெளியான ‘நான் மகான் அல்ல’, ‘பொல்லாதவன்’ போன்ற திரைப்படங்களின் பாணியில் ஒரு சிறப்பான கிரைம் த்ரில்லராக உருவாகும் அத்தனை சாத்தியக்கூறுகளும் இந்தக் கதையில் இருக்கின்றன. கதையின் அடிப்படை, கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் தனித்துவம் எனப் பல விஷயங்களில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால், அந்த அளவுக்கான சுவாரஸ்யத்தைத் திரைக்கதையில் கொண்டு வரத் தவறியிருக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்கள், அவற்றின் பின்னணி, அவற்றுக்கு இடையிலான தொடர்புகள் என நிறைய தகவல்களைச் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள். இதனால் கதையின் வேகம் குறைகிறது.
குறிப்பாக, இடைவேளை வரை படம் பெரிய அளவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய பலவீனம். குடும்பம், ஹீரோ, ஹீரோயின் எனத் தேவைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் சில காட்சிகளும் கதையின் ஓட்டத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.
உண்மையில், படத்தின் கதை இடைவேளைக்குப் பிறகுதான் தொடங்குகிறது என்று சொல்லலாம். அதன்பிறகு வரும் விசாரணை, தேடல், தந்தையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எனப் பல காட்சிகள் இருந்தாலும், அவற்றிலும் எதிர்பார்த்த பரபரப்பும் விறுவிறுப்பும் இல்லை.
நடிப்பில் அனைவரும் சிறப்பு!
படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்களின் நடிப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெற்றி, இந்தப் படத்திலும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக, தனது தந்தையைத் தேடிச் செல்லும் காட்சிகளில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.
நாயகி பிரியாலயாவுக்கு படத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. ஒரு சில காட்சிகளில் வந்து, ஹீரோவுடன் ஒரு டூயட் பாடலில் இடம்பெற்று, பின்னர் காணாமல் போகிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பின்னணியையும் குணாதிசயங்களையும் உருவாக்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
அபிராமி வெங்கடாசலம் காவல்துறை ஆய்வாளராக வருகிறார். கம்பீரமான தோற்றம், மிடுக்கான உடல்மொழி என அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. ஆனால், அவர் மேற்கொள்ளும் விசாரணை எந்த அளவுக்கு முன்னேறுகிறது, அதன் மூலம் என்ன கண்டுபிடிக்கப்படுகிறது என்பது தெளிவாக வெளிப்படவில்லை.
மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இறுதியாக…
நமக்குத் தெரியாத ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்துவதுடன், வித்தியாசமான பின்னணியில் ஒரு கிரைம் த்ரில்லரை உருவாக்க முயன்றிருக்கும் இயக்குநரின் எண்ணம் பாராட்டுக்குரியது. கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்திலும், நடிகர்களிடமிருந்து சிறப்பான நடிப்பைப் பெற்றிருப்பதிலும் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால், இவ்வளவு சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், ஒரு நல்ல பரபரப்பான த்ரில்லர் திரைப்படமாக ‘பிளாக் கோல்டு’ உருவாகியிருக்கும்.
மொத்தத்தில், வித்தியாசமான கதைக்களம், சிறப்பான நடிப்பு இருந்தும் திரைக்கதையின் சுவாரஸ்யக் குறைவால் முழுமையாகக் கவரத் தவறுகிறது இந்த ‘பிளாக் கோல்டு’.
