ரெட் லேபிள் – திரைப்பட விமர்சனம் !!

 

கல்லூரி அரசியல், கடந்த கால நிழல், கொலை – இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்தால் என்ன ஆகும்? அதற்கான பதில்தான் ‘ரெட் லேபிள்’.

கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், எஜமான் போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குநர் R. V. உதயகுமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் முழுக்க முழுக்க வில்லன் அவதாரத்தில் திரும்பி இருப்பது படத்தின் முதல் கவன ஈர்ப்பு. பிரபல எழுத்தாளர் பொன் பார்த்திபன் எழுதிய திரைக்கதையை, K. R. வினோத் குறைந்த பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளார்.

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறும் மாணவர் தலைவர் தேர்தலே கதையின் மையம். அந்தத் தேர்தலை அராஜகமாக கைப்பற்ற முயலும் எம்.எல்.ஏ-வின் மகன், அதற்கு எதிராக நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முயலும் முன்னாள் மாணவர் தலைவர் லெனின் – இவர்களுக்கிடையிலான மோதல்தான் கதை. இந்த சூழலில் கல்லூரி வளாகத்திலேயே ஒரு கொலை நடக்க, கதை முழுமையாக கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாதையில் திரும்புகிறது. அந்தக் கொலைக்கும் லெனினுக்கும் என்ன தொடர்பு? அவர் கடந்த காலத்திலிருந்து தப்பித்தாரா, அல்லது மீண்டும் அதிலேயே சிக்கினாரா? என்பதே திரைக்கதையின் பரபரப்பு.

நாயகன் லெனின், அறிமுக நடிகர் என்ற உணர்வு வராத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கல்லூரி மாணவர் காலமும், அதன் பிந்தைய அமைதியான வாழ்க்கையும் – இரண்டுக்கும் இடையிலான உடல் மொழி மாற்றம் பாராட்டுக்குரியது. நாயகி அஸ்மின், கவர்ச்சியை விட யதார்த்தமான தோற்றத்திலும் அளவான நடிப்பிலும் கவனம் செலுத்தி, கதைக்குத் தேவையான வலுவைச் சேர்க்கிறார்.

படத்தின் மிகப் பெரிய பலம் ஆர்.வி. உதயகுமார். கொங்கு தமிழில், குரலை உயர்த்தாமல், உட்கார்ந்த இடத்திலிருந்தே வில்லத்தனம் செய்யும் அவரது நடிப்பு ‘ஆஹா’ சொல்ல வைக்கிறது. மகனை அனைவர்முன் அடித்து, பின்னர் தனிப்பட்ட முறையில் ஆறுதல் சொல்லும் காட்சி, சாதாரண கல்லூரி தேர்தலுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் அழுத்தங்களை தெளிவாகப் புரிய வைக்கிறது. அதே நேரத்தில் அனுமோகன், கோவை தமிழ் கலந்த நகைச்சுவையால் படத்திற்கு இலகுவான தருணங்களை வழங்குகிறார். “இவரை தமிழ் சினிமா இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாமே?” என்ற எண்ணம் வரும் அளவுக்கு அவரது பங்களிப்பு கவனிக்கத் தக்கது.

ஒற்றை லொக்கேஷனில் நகரும் கதை என்றாலும், எடிட்டிங் சஸ்பென்ஸ் உணர்வை நன்றாக தக்க வைத்துள்ளது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதையின் வேகத்துக்கு துணை நிற்கின்றன. இருப்பினும், பொன். பார்த்திபன் எழுதிய சில முக்கியமான காட்சிகளை காட்சிப்படுத்தலில் இயக்குநர் முழுமையாகப் பிடிக்க முடியாமல் திணறியிருப்பது மைனஸ். குறிப்பாக கல்லூரி விழாவில் காதலன்–காதலி தப்பிச் செல்லும் காட்சி, எழுதப்பட்ட அளவுக்கு திரையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எடிட்டிங் சிறப்பாக இருந்தாலும், ஒளிப்பதிவு சில இடங்களில் சராசரியாகவே இருக்கிறது.

மொத்தத்தில், சில தொழில்நுட்ப குறைகள் இருந்தாலும், புதியவர்கள் ஒன்று சேர்ந்து செய்துள்ள நேர்மையான முயற்சி என்பதற்காக ‘ரெட் லேபிள்’ பாராட்டுக்குரியது. மலையாள சினிமாவைப் போல, ஒருவர் எழுத மற்றொருவர் இயக்கும் ஆரோக்கியமான அணுகுமுறைக்கு இந்த படம் ஒரு நல்ல ‘க்ரீன் சிக்னல்’. எழுதிய அளவிற்கு காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்ற குறை இருந்தாலும், ஒரு பரபரப்பான கல்லூரி-கிரைம் த்ரில்லராக ‘ரெட் லேபிள்’ ரசிகர்களை ஒருமுறை கண்டிப்பாக பார்க்க வைக்கிறது.

error: Content is protected !!