மகாராஜா தமிழ் சினிமாவின் பொக்கிஷம் !!

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, விஜய்சேதுபதியும் இயக்குநர் நிதிலனும்.. இந்தப்படம் உங்களுக்கு ஒரு அனுபவம் தரும், பல சர்ப்ரைஸ்கள் படத்தில் இருக்கிறது, தயவு செய்து அதை வெளிப்படுத்தி விடாதீர்கள், முதல் முறை பார்க்கும் அனைவருக்கும் அந்த அனுபவம் கிட்டட்டும் என்றனர்.
இந்தப்படம் பார்த்த போது கிடைத்தது ஒரு பேரனுபவம்.. எனக்கு விருமாண்டி பார்த்த போது அதன் உருவாக்கத்திலும், அபிராமி இறப்பு முதலாக பல காட்சிகளில் எனக்கேற்பட்ட பாதிப்பும், இந்தப்படத்திலும் பல இடங்களில் கிடைத்தது.
சமீபத்தில் தமிழ் சினிமா பழைய மாதிரி இல்லையே என்று ஏற்பட்ட அத்தனை ஏக்கத்தையும், போக்கியிருக்கிறான் மாகாராஜா.
கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்க வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஒவ்வொரு பாத்திரங்களும் எப்படி அணுகப்பட வேண்டும். அதை எல்லாம் எப்படி ரசிகனுக்கு தர வேண்டும் என்றெல்லாம் பாடமெடுத்திருக்கிறது. இந்தப்படம்.
இதற்குமேல் படிக்காதீர்கள்..
தனது மகளை காப்பாற்றிய குப்பைதொட்டியை திருடர்கள் திருடிவிட்டதாக போலீஸுக்கு போகிறான் ஒரு சாதாரண சவரத்தொழிலாளி. அவனை பைத்தியமாக பார்க்கும் போலீஸ், அவன் லட்சக்கணக்கில் பணம் தருகிறான் என்றவுடன் நிமிர்ந்து உட்காருகிறது. இதெல்லாம் எதனால் என்று ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது அத்தனை ஆச்சர்யங்கள்.
அத்தனை நடிகர்களும் அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்கள். என்னை அதிகம் ஆச்சர்யப்பட வைத்தவர் சிங்கம் புலி எதிர்பார்க்கவே இல்லை.
மலையாளத்தில் Iratta என்றொரு படம் வந்தது ஒரு க்ரைம் திரில்லர் அத்தனை அடுக்குகளோடு, அத்தனை விவரமாக எழுப்பட்டு, அது ஒவ்வொரு அத்தியாயமாக விரியும்போது, தமிழில் இந்த மாதிரி எழுத்தெல்லாம் சாத்தியமா எனத் தோன்றியது.. அதை மிஞ்சியிருக்கிறார் நிதிலன்.
ஒரு திரைப்படம் பல அனுபவங்கள் தரும். சிரிக்க வைக்கும், அழ வைக்கும், நம்மை உற்சாகப்படுத்தும் ஆனால்…
ஒரு படம் ஒரு கதையாக மட்டுமல்லாமல், அது பல தளங்களி, பல அடுக்குகளாக பலர் வாழ்க்கையை, பாத்திரங்களின் நியாயங்களோடு விரியும்போது.., அதன் ஆச்சரியங்களை திரையில் படைப்பாளி கட்டுப்படுத்தும் போது, அது ஒரு பேரனுபவமாக மாறிவிடுகிறது. நோலன் காட்டும் வித்தை கூட, இந்த இடம் தான். அத்தோடு அந்த படைப்பாளிகள் காட்டும் பாத்திரங்களின் உணர்வுகள் மிக முக்கியம்.
இந்தப்படத்தில் மூன்று டயலாக்குகள்..
இந்த வலி ஆறிடும்.. நான் இதிலிருந்து வெளிய வந்துடுவேன் ..
கைகளினால் அளவை வரைந்து.. கண்ணீர் மல்க.. சொல்லும் சார் லட்சுமி சார் …
இல்ல அது என் பொண்ணு..❤️
நிதிலன் ஒரு அற்புதமான வரலாற்றில் நிற்கும் படைப்பை தந்துள்ளார். 🥰