‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!’’ -ஒவ்வொரு வார்த்தையாக திரையில் ஒலிக்க.. ஒலிக்க.. தமிழ்நாடே கையை தூக்கி இரண்டு இளைஞர்களிடம் சரண்டர் ஆனது. ஒவ்வொரு வசனத்தையும் திருக்குறளைப்போல மனப்பாடம் செய்து ஒப்பித்தது. தமிழகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த திரைப்படம் உருவாக்கியது. அந்த வசனங்கள் அரை நூற்றாண்டுகளுக்கு பின்னும் தமிழகமெங்கும் அன்றாடம் எங்காவது நினைவு கூறப்படுகிறது. பராசக்தி படத்துக்கு இந்த நாளோடு எழுபத்து இரண்டு வயதாகிவிட்டது.
1952ஆம் ஆண்டின் தீபாவளி தினம் அன்று. சிவாஜி கணேசனுக்கு அதுதான் முதல் படம். வசனம் எழுதியிருந்த மு. கருணாநிதிக்கு அது ஏழாவது படம். தமிழ்நாட்டில் படம் வெளியான திரையரங்குகளில் எல்லாம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்காக அந்த நேரத்தில் கருதப்பட்ட மதுரை தங்கம் திரையரங்கத்தில் முழுமையாகக்கூட கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. முதல் படமாக பராசக்தி வெளியானது. சுமார் 2,500 பேர் அமரக்கூடிய இந்தத் திரையரங்கில், படிகளிலும் உட்கார்ந்து படத்தைப் பார்த்தார்கள்.
முன்னதாக படம் 2000 அடிகள் எடுக்கப்பட்ட பின்,படத்தைப் பார்த்த ஏவி மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு திருப்தியளிக்கவில்லை. கே.ஆர்.ராமசாமி அல்லது டி.ஆர்.ராமச்சந்திரனை நாயகனாக்கி படத்தை எடுக்கச் சொன்னார். ஆனால், தயாரிப்பாளர் மறுத்துவிட்டார். ‘அவர் ஒல்லியாக இருப்பதால் அப்படிச் சொல்கிறீர்கள். அவர் உடலை தேற்றினால் சிறப்பாக இருப்பார்’ என்று கூறி, அதற்காகவே ஒருவரை நியமித்தார். அவர் உடல்நன்றாகத் தேறிய பின் படப்பிடிப்புத் தொடங்கியது. அப்போது சிவாஜியின் நடிப்பைப் பார்த்துவிட்டு ஏவிஎம் செட்டியார் பாராட்டியிருக்கிறார்.
சிவாஜி கணேசன், பண்டரிபாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி, கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, குமாரி கமலா உட்பட பலர் நடித்திருந்தனர். மாருதி ராவ் ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.சுதர்சனம் இசை அமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. ‘புது பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே…’, ‘கா கா கா’ உட்பட பாடல்கள் ஹிட்டாயின.
சாதாரண கதையைக் கொண்ட படம்தான்.ஆனால், தனது திரைக்கதை, வசனத்தால் பரபரப்பாக்கி இருந்தார் மு.கருணாநிதி. அதுவரை பாடல்களில் மயங்கிக் கிடந்த ரசிகர்கள், வசனங்களுக்கு மயங்கத் தொடங்கியது இந்தப் படத்தில் இருந்துதான். சாதி, மதம், சமூக சமத்துவமின்மையை கேள்விகேட்ட இந்தப் படத்தின் வசனங்கள் கூர்மையாக இருந்தன.இதில் இடம்பெறும் நீதிமன்ற காட்சிக்கும் கோயிலுக்குள் சிவாஜி பேசும் வசனத்துக்கும் பலத்த வரவேற்புக் கிடைத்தது. இதில் இடம்பெற்ற நாத்திக கருத்துகளுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அது, படத்துக்கு விளம்பரமாக மாறி, மெகா வெற்றி பெற்றது.திராவிட உணர்வு , சுயசிந்தனை, மூட பழக்கவழக்கங்கள் ஒழிப்பு போன்ற சமுதாய அக்கறைகளை பரப்ப திரைப்படத் தோட்டத்தில் விதைக்கப்பட்ட விதை இந்த திரைப்படம். இதனை தொடர்ந்து தான் சமுதாய சிந்தனையுடன் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த பராசக்தி திரைப்படம் 1000 அடிகளுக்கு மேல் தயாரித்த பின் அதை போட்டு பார்த்த அதன் தயாரிப்பாளர் ஏவிஎம் செட்டியார் அவர்களுக்கு புதுமுக நடிகர் கணேசனின் மீது அவ்வளவு திருப்தி இல்லை ஆகவே K.R.ராமசாமி அவர்களை வைத்து மீண்டும் இதை படமாக்கலாம் என்றார். ஆனால் படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான P.A.பெருமாள் அவர்கள் “என் தங்கை” நாடகத்தில் நடித்த இந்த கணேசன் தான் நடிக்க வேண்டும் படத்தை முழுசாக எடுத்து முடித்து பார்ப்போம் என்று கணேசனின் மீது நம்பிக்கை வைத்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. நமக்கு ஒரு நடிகர் திலகம் கிடைத்தார்.
இந்த படத்தில் நடிப்பதுக்காக இளைஞர் கணேசன் வாங்கிய மாத சம்பளம் Rs.250. இந்த பராசக்தி திரைப்படம் ஆன்மீகவாதிகளையும் அக்ரஹாரங்ளையும் எந்த அளவுக்கு தாக்கியது என்பது படம் பார்த்தவர்கள் அறிவார்கள். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி. முதல்வர் ராஜாஜி . அவருக்கு இந்த திரைப்படத்தின் மீது முழு திருப்தி இல்லை இருந்தும் திரைப்படம் மக்களுக்காக எடுக்கபடுவது அவர்களே அதை பார்த்து நல்லது கெட்டது தெரிந்து கொள்ளட்டும் என்று திரைப்படத்தை வெளியிட அனுமதித்தார்.
ஆகவே திரைப்படம் 17 அக்டோபர் 1952 ஆம் ஆண்டுதீபாவளி நாளன்று வெளியீடு கண்டு மாபெரும் வெற்றி பெற்றது. இளைஞர் கணேசன் முதன் முதலில் கேமரா முன் நின்று நடித்த திரைப்படம் “பூங்கோதை” என்ற திரைப்படமே. ஆனால் பராசக்தி முதலில் வெளியீடு கண்டதால் அது அவரது முதல் படம் ஆனது. பூங்கோதை அவரது ஆறாவது படமாக வெளியீடு கண்டது.
பராசக்தி என்பது வெகுமக்கள் வழிபடும் கடவுளின் பெயர். ஒரு கடவுளின் பெயரை வைத்து ஆன்மீக நம்பிக்கை உள்ள மக்களை திரையரங்கிற்கு அழைத்து வந்து கடவுளுக்கு எதிராக அல்ல கடவுளின் பெயரால் சிலர் நடத்தும் அக்கிரமங்களுக்கு எதிராக ஆன்மீகவாதிகளுக்கு எடுத்த பட ஸாரி பாடமிது என்றால் மிகையல்ல.