ஒரு டைரக்டரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே ஒட்டு மொத்த படைப்பின் ஜீவனாகிறார். அப்படி இன்றும் நினைவில் வாழ்பவர் கேமராமேன் அசோக் குமார்
யர்லி மார்னிங். மிஸ்ட் எனப்படும் பனியின் ஈரம் போர்த்திய தாவரங்களும் புதர்களும் சாலையின் இருபுறங்களிலும் இன்னும் உறங்கிக்க்கிட்டிருக்குது. ஹீரோவும் ஹீரோயினும் ஸ்டில் அவுட்டில் ‘ஜாகிங்’ போறாய்ங்க. காலடி ஓசையின் ‘தட் தட்’ ஒலியின் பின்னணியில் ஒரு பூவைப் போல் மலருது ஒரு பாடல்.
‘பருவமே… புதிய பாடல் பாடு’. பனிப் படலத்தில் அமிழ்ந்து கிடக்கும் புல்வெளிப் பரப்பு, புதர்களுக்கு இடையில் படுத்திருக்கும் ஈரமான பாதைகள் என்று அழகாகக் காட்சிகள் விரியுது. அதிகாலையில் காணும் கனவு போன்ற அந்தப் பாடலில், மகேந்திரன், இளையராஜாவின் கற்பனையை உள்வாங்கிக்கொண்டு அத்தனை குளுமையாகப் படமாக்கியிருப்பார் இன்று குறிப்பிடப்படும் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.
தமிழகத்தில் 80-களில் பால்யத்தைக் கழித்தவர்கள் இன்னமும் 80-களில் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் அவிய்ங்களோட ரசனை உலகில் இளையராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா, கமல்ஹாஸன் போன்ற கலைஞர்கள் செலுத்திய ஆதிக்கம் என்று சொன்னால் அது மிகையல்ல. மகேந்திரன் படங்களின் பாடல் காட்சிகளும் பிற காட்சிகளும் அவற்றின் காட்சியமைப்புக்காகவும் ஒளிப்பதிவுக்காகவே இன்னிக்கும் சிலாகிக்கப்படுது.

‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘மெட்டி’, ‘நண்டு’ போன்ற படங்களின் பாடல் காட்சிகள் தமிழ் ரசிகர் களின் கண்களிலும் மனதிலும் தங்கிப்புட்டவை. அக்காலக் கட்டத்தில் மகேந்திரனின் கண்களாக இருந்து, அவரது படைப் புலகை உருவாக்கியவர் அசோக்குமார். அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் ரசனை வட்டம் அவர் இல்லாமல் முழுமையடையாது.
டைரக்டர் மகேந்திரனைப் பொறுத்தவரையில் அசோக்குமார் கிடைச்சிராட்டாலும் இன்னொரு கேமராமேனைத் தன்னுடைய படைப்பாற்றலின் நிலைக் கண்ணாடியாகத் தான் வரித்திருப்பார். அவரின் முதற்படமான முள்ளும் மலரும் படமே இதற்குச் சாட்சி. முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படம் எடுக்கும் போதே சில பல தயாரிப்புச் சிக்கல்கள் மற்றும் இவரும் சொந்தமாகப் படம் இயக்கும் முனைப்போடு கிளம்பி அடுத்த படமான உதிரிப்பூக்கள் படத்தில் அசோக்குமாருடன் மகேந்திரன் இணைய அச்சாரம் வைச்சுது.
தொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு என்று தொடர்ந்தது மகேந்திரன் – அசோக்குமார் கூட்டணி. இதில் நெஞ்சத்தைக் கிள்ளாதே அசோக்குமாருக்குத் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம்.
நண்டு படம் இயக்குநர் மகேந்திரனை மீறித் தயாரிப்பாளர் கைமா பண்ணிச் சிதைச்சிருந்தாலும் அந்தப் படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி, மஞ்சள் வெய்யில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ஏமாற்றாமல் இன்னும் அந்தப் படத்தின் பேர் சொல்ல வைக்கும். அதே போல் ஜானி படத்தின் தொழில்நுட்பச் சிறப்பில் அசோக்குமாரும் பங்கெடுத்துக் கொண்டார். அசோக்குமாரின் ஒளிப்பதிவுத்திறனை மகேந்திரனே கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் பாடல்கள் தரம் குன்றாது இந்தக் கூட்டணியால் மிளிர்ந்தன.
முதல் 3D திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தது இவருக்குக் கிட்டிய இன்னொரு மகுடம் எனலாம்.

அவுட்டோர் படப்பிடிப்புகளில் நடிகர் – நடிகை களின் தலைக்குப் பின்புறமிருந்து பொழியும் ஒளியைப் பயன்படுத்தி அவர் வடிவமைத்த காட்சி கள் ஒருவிதம் என்றால், அறைக்குள் புழங்கும் கேரக்டர்களின் முகங்களை இயல்பான ஒளியில் அவர் காட்சிப்படுத்திய விதம் இன்னொரு வகை.
‘ஜானி’ படத்தின் ‘என் வானிலே’ பாடலின் ஒளிப்பதிவை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மாலையின் மஞ்சளும் மெல்லிய இருளின் கருமையும் கலந்த நிறக்கலவையின் பின்னணியில், ஸ்ரீதேவி பியானோ வாசிக்க, மின்னும் தலைமுடியுடன் ரஜினி அதை ரசித்துக்கொண்டிருக்கும் சீனை யாரால் மறக்க முடியுமா? பாடலின் இடையிசை முடிந்து சரணம் தொடங்கும் தருணத்தில் கேமரா மலையிலிருந்து இறங்கி, ரஜினி – ஸ்ரீதேவி இருக்கும் அறைக்குள் நுழையும். அறையை அலங்கரிக்கும் பூக்களில் ஒன்றாக மெல்லிய புன்னகையுடன் பாடலைத் தொடரும் ஸ்ரீதேவி, பூமிக்கு வந்த தேவதையாகக் காட்சியளிப்பார். அந்த மந்திரத்தின் ரகசியம், அசோக்குமாரின் ஒளிப்பதிவு.

தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார், சில படங்களை இயக்கியுமிருக்கிறார். சில்க்கை வைத்து அவர் இயக்கிய ‘அன்று பெய்த மழையில்’, அன்றைய காலகட்டத்தில் ஒரு துணிச்சலான முயற்சி. பாலியல் பின்னணியிலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தும் இயக்கியும் இருக்கிறார். ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’, ராஜேஷ் வரின் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ (2003) வரை தொடர்ந்து இயங்கினார். கதையின் தன்மை கருதி தனது பாணியையும் மாற்றிக்கொள்ள அவர் தயங்கியதில்லை. பாண்டியராஜனின் ‘நெத்தியடி’ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்வார்; பரபரப்பான ‘வெற்றிவிழா’வுக்கும் பணியாற்றுவார்.
சிறந்த கலைஞர்கள் அவர்கள் காலத்தில் கவுரவிக்கப்படுவதில்லை என்ற கூற்று அசோக்குமார் விஷயத்திலும் உண்மையானது. அவரது இறுதிச் சடங்கில் ஓரிருவரைத் தவிர திரையுலகின் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ள வில்லை. அவரது மறைவு குறித்து மகேந்திரன், பிரதாப் போத்தன் தவிர வேறு எந்தப் பிரபலமும் பொதுவெளியில் பதிவுசெய்யவில்லை. இதுதான் கோலிவுட்டின் நிஜ முகம்
எனி வே ஆந்தை குழுமத்தின் சினிமா பிரஸ் கிளப் சார்பில் அசோக் குமார்-க்கு மனமார்ந்த நினைவஞ்சலிகள்
