சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளி வந்து இருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா ?
1000 வருடத்திற்கு முந்தைய காலம், நிகழ் காலம் என இரண்டு கால கட்டத்தில் நடக்கும் கதை.
அறிவியல் ஆராய்ச்சி கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான் அவன் கோவாவில் பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை தேடி வருகிறான், அவனுக்கும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு எனும் போது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் கதை விரிகிறது. அந்த காலகட்டத்தில் சூர்யாவுக்கும் அந்த சிறுவனுக்கும் என்ன நடந்தது.
அந்த சிறுவனை கொல்ல துரத்துபவர்கள் யார்? நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் அந்த சிறுவனை சூர்யா காப்பாற்றுகிறாரா ? என்பது தான் படம்
கங்குவா திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம். படம் விசுவல் டிரீட், கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் வரலாற்று காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
யாரும் தனி நடிகர்களாக தெரியவில்லை. சூர்யா, பாபி டியோல், நட்டி, போஸ் வெங்கட் என அனைவரும் வரலாற்று கதாபாத்திரமாகவே தோற்றமளிக்கிறார்கள். பெரும் படையுடன் சேர்ந்து போர் செய்து இருக்கிறார் இயக்குனர் சிவா. அசாத்திய உழைப்பும், கனவும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. குறிப்பாக படத்தில் 3D தொழில்நுட்பத்தை மிக அழகாக கையாண்டு இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வரும் 3D காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
படத்தின் இன்னொரு பலம் புரிந்து கொள்ளும் படியான வசனங்கள். படம் வரலாற்று படமாக இருந்தாலும், அவர்கள் பேசும் வசனங்கள் காளகேயர்களை போல புரியாத படி இல்லாமல், நாம் எளிதாக புரிந்து கொள்ளும் படி, அதே நேரத்தில் அந்த கதையில் இருந்து விலகாத படியும் இருக்கிறது.
பாடல்களை பொறுத்தவரை, இது டிஸ்பி-க்கு என்றே எழுதப்பட்ட கதை போல இருந்தது. குறிப்பாக நெருப்பு பாடல். சூர்யா, டிஸ்பி, நடன இயக்குனர், இயக்குனர் என அனைவரும் சேர்ந்து செதுக்கிய உச்சம் நெருப்பு பாடல். அந்த பாடலில் இருக்கும் பிரம்மாண்டம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
இந்த படத்திற்கு சூர்யா அசராது உழைத்து இருக்கிறார். அவர் ஒற்றை ஆளாக படத்தை கட்டி தூக்குகிறார். இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதையை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் அவர் பிரதிபலிக்கிறார். இந்த படத்தில் அவரது கண்களை அதிகமாக நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர். கங்குவா காதபாத்திரத்திற்காக அவர் காட்டிய நடிப்பும், அவரது உடல் மொழியும் அபாரம்.
கேமரா வேகமாக ஓடிக்கோண்டே இருக்கிறது, திரைக்கதை வேகத்தில் எந்த சமபவமும் மனதில் ஒட்டவில்லை, டெக்னிக்கில் காட்டிய உழைப்பை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்
எல்லாவற்றையும் கடந்து, கங்குவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.