’ரெட்ரோ’ திரை விமர்சனம் !!

இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் – சூர்யா , பூஜா ஹெட்கே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர்
இசை – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – 2D எண்டர்டெயின்மெண்ட் – ஜோதிகா, சூர்யா.

மாறுபட்ட களங்களில் நல்ல படைப்புகளை தொடர்ந்து தரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம். கங்குவாவின் தோல்வியில் இருந்து அவரை மீட்டெடுத்துள்ளதா? பார்க்கலாம்

காதலுக்காக வன்முறை அனைத்தையும் விட்டுவிட்டு அமைதியாக வாழ நினைக்கும் ஒருவனை, அந்த வன்முறை துரத்தி கொண்டே இருக்கிறது. அந்த வன்முறை தனக்குள் ஏன் இருக்கிறது என்பதை அவன் கண்டுபிடிப்பதும் அதில் இருந்து விலகுவதும் தான் ரெட்ரோ.

ஒரு கேங்க்ஸ்டர் கதையாக ஆரம்பித்த ஒரு கதை, அடிமை மீட்பு என்ற புள்ளியில் முடிகிறது. வித்தியாசமான கதையை கட்டமைத்த கார்த்திக் சுப்புராஜ், முதல் ஆக்ட்டில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து, இரண்டாவது ஆக்ட்டில் குழப்பத்திற்குள் சென்று, மூன்றாவது ஆக்ட்-ல் பாதி நிறைவோடு வெளியேறுகிறார்.

சிறப்பான காட்சிகள், சிறப்பான நடிப்பு, சிறப்பான இசை, சிறப்பான ஒளிப்பதிவு என அனைத்திலும் படம் சிறந்து விளங்கினாலும், ஒரு முழுமையடையாத நிலையில் படம் இருக்கிறது.

சூர்யாவின் நடிப்பு தான் முழு படத்தையும் தாங்கி நிற்கிறது. அவருடைய கோபமும், வன்முறையும், அதனுள் இருக்கும் காதலும் தான் படத்தின் அடிநாதமே,.. அதை அதி அற்புதமாக அவர் நிறைவேற்றி இருக்கிறார். 15 நிமிடத்திற்கு நீளும் ஆரம்ப காட்சியில் கோபம், விரக்தி, சோகம் ஆற்றாமை, ஆக்சன் அத்தைணையும் கொட்டி அசத்தியிருக்க்கிறார்.

குறிப்பாக தனக்கு சிரிப்பு ஏன் வரவில்லை என்று கண்ணாடி முன் நின்று, தன்னை தானே கேள்விக்கேட்டு, அவர் சிரிக்க முயற்சிக்கும் காட்சியெல்லாம், எழுத்திலும் சரி நடிப்பிலும் சரி தமிழ் சினிமாவிற்கு புதிது.

பூஜாவின் நடிப்பு இந்த படத்தோடு இணைந்தோடுகிறது. சூர்யா மற்றும் பூஜாவின் கெமிஸ்ட்ரி அற்புதமாக இருக்கிறது.

வித்தியாசமான கதைகளத்தையும், திரைக்கதை அமைப்பையும் தமிழ் சினிமாவிற்கு கொடுக்க கார்த்திக் சுப்ராஜும், சூர்யாவும் முயற்சித்து இருக்கிறார்கள். அது முழுமையடையாத ஒன்றாக இருந்தாலும், இது வரவேற்க பட வேண்டிய முயற்சி.

 

error: Content is protected !!