16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

மிழ் சினிமாவை மண் மணம் வீசும் கிராமத்து வாழ்வியலுக்கு எடுத்து சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் சகாப்தம் தொடங்கிய 16 வயதினிலே திரைப்படம் இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் ஆகுது.

கோலிவுட்டில் முதன் முதலில் என்ற வார்த்தையை பல்வேறு விஷயங்களில் செஞ்சு காட்டிய படம்தான் 16 வயதினிலே. அந்தக் காலத்துலே நம் தமிழ் சினிமாக்கள் அம்புட்டு, ஷூட்டிங்கும் அரங்குகளிலேயே எடுக்கப்பட்டு வந்துச்சு. அப்பாலே அந்த அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முறையாக முழுப்படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றால், அது 16 வயதினிலேதான்.இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமிப்பா பேசப்பட்டுச்சு. ‘இதெப்படி இருக்கு?’ என்று காட்சிக்குக் காட்சி இவர் சொல்லும் வசனம்… பஞ்ச் வசனம்… ரஜினி பஞ்ச் வசனம் பேசிய வகையிலும் முதல்படம். ஸ்ரீதேவி அப்படியொரு அழகு தேவதையாக நாயகியானதும் இதுவே முதல் படம். எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகையாக இருந்தாலும் காந்திமதிக்கு அப்படியொரு நடிகையாகக் கிடைத்த வாய்ப்பில் இதுவே முதல் படம். டாக்டராக நடித்த சத்யஜித்துக்கும் முதல் படம். ‘ராமன் எத்தனை ராமனடி’ போன்ற பல படங்களில் வந்துபோனாலும் ‘பத்தவச்சிட்டியே பரட்டை’ என்று பஞ்ச் வசனத்துடன் நமக்கு கவுண்டமணி கிடைத்த வகையிலும் முதல் படம்.

இப்பட ரிலீஸூக்கு பின்னரே ஏறக்குறைய எல்லா இயக்குநர்கள் பார்வையும் கிராமங்கள் பக்கம் திரும்பியது தனிக்கதை . மேலும், இப்படத்தின் சாயலில் ஏராளமான சினிமாகள் எடுக்கப்பட்டன. பாரதிராஜா என்ற ஒற்றை மனிதனின் சினிமா வேட்கைக்கு சரியான தீனி போட்ட படம்தான் இந்த 16 வயதினிலே.‌

படம் ஆரம்பிச்சதும் சோகத்துடன் காத்திருக்கும் நாயகி.ஃபளாஷ்பேக் விரிஞ்சதும் குதூகலத்துடன் ஓடிவரும் நாயகியில் இருந்தே படமும் ஓடத்தொடங்கும். நாயகி மயிலு, அவளின் அம்மா குருவம்மா. ஊரின் சூரத்தனக்காரன் பரட்டையன். ஊருக்கே உதவி செய்யும் வேலைக்காரன் சப்பாணி. நாகரீக வாசனையுடன் பட்டணத்தில் இருந்து ஊருக்கு வரும் டாக்டர். இவர்களைக் கொண்டுதான் மொத்தப் படத்தையும் கொடுத்திருப்பார் பாரதிராஜா. மொத்தக் கதாபாத்திரத்திலும் அவரே வாழ்ந்திருப்பார்.

இப்பட அனுபவம் குறிச்சு பாரதிராஜாகிட்டே கேட்டப் போது சொன்ன சேதி இதோ :

” நான் நைன்த் ஸ்டேண்டர்ட் படிச்சுக்கிட்டு இருந்தச்சே எங்க பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு கேர்ள் படிச்சாள். அவதான் என் கனவுலக் பிரதேசத்தின் ‘மயில்’. அவளைத்தான் நான் உயிருக்கு உயிராகக் காதலிச்சேன். என் நிஜவாழ்வில் நான் துரத்தித் துரத்தி காதலித்த அந்தப் பெண் பரிசுத்தமான என் காதலை நிராகரிச்சுட்டு, என்னை நிர்கதியா நிற்க விட்டுட்டு போயிட்டா. உண்மையான வாழ்க்கையில் சப்பாணியாக நானும், மயிலாக அவளும் இருந்தபோது என்னைவிட்டுப் பிரிஞ்சு போயிட்டாள். அதனால்தான், சினிமாவில் சப்பாணி, மயிலின் காதலை நிறைவேத்தி வைச்சேன்.

முதல்லே இப்படத்தில் மயில் ரோலுக்கு ரோஜாரமணியையும், சப்பாணி கேரக்டருக்கு நாகேஷையும் செலக்ட் செஞ்சு முடிவும் செஞ்சோம். ஆனா எனக்கென்னவோ எங்க ஊரில் நான் காதலிச்ச ரியல் மயிலின் சாயல் கொஞ்சம்கூட ரோஜாரமணிக்குப் பொருந்தாததால், யாரை சூஸ் செய்றது -ன்னு தெரியாம நான் தவிச்சுக்க்கிட்டிருந்தேன். அப்போ மலையாளத்தில் ஐ.வி.சசி படத்தில் நடிச்சுக்கிட்டிருந்தார், ஸ்ரீதேவி. நெக்ஸ்டா பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்திலும் ஒப்பந்தமாகி நடிச்சிக்கிட்டிருந்த ஸ்ரீதேவி போட்டோப் பார்த்தவுடனேயே இவதான் நான் தேடிக்கொண்டிருக்கும் மயிலு -னு முடிவு செஞ்சிட்டேன்.

இதுக்காக ஸ்ரீதேவி வீடு தேடி போய் கதை சொல்லப் போனேன். ’16 வயதினிலே’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கிச் சொன்னேன். ஸ்ரீதேவியின் கண்கள் என்னை என்னவோ செய்தது கடைசிக் காட்சி சொல்லும் வரை அவர் கண்கள்மீது நிலை குத்தி நின்ற என் கண்களை என்னால் கழற்றவே முடியல்லை. படத்தின் முழுக்கதையையும் சொன்னபிறகு, எனது நிபந்தனைகளை ஶ்ரீதேவியிடமும், அவரது அம்மாவிடமும் சொல்ல ஆரம்பிச்சேன். என் மயிலு அச்சு அசலான கிராமத்து நாயகி… அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று நான் சொன்னவுடனே ‘என்ன சார் சொல்றீங்க…’ ன்னு அப்படியே ஷாக் ஆயிட்டார், ஶ்ரீதேவி. அடுத்தாப்லே மேக்கப் வேண்டாம், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் -முன்னு நான் சொல்லச் சொல்ல அம்மா, மகள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள் அலை அலையாய் தோன்றி மறைஞ்சுது.

ரொம்ப யோசனைப் பொறகு ஒரு வழியாக ’16 வயதினிலே’ படத்தில் நடிப்பதற்கு ஶ்ரீதேவி ஒப்புக்கொண்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஶ்ரீதேவி என்று நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாய்ங்க. அப்போ என் முதலாளி ராஜ்கண்ணு ’16 வயதினிலே’ படத்தை முதலில் பிளாக் & ஒயிட்டிலே எடுத்தால் போதும் என்று சொன்னார். அதன்பின் ஸ்டார்கள் கமிட் ஆன பிறகு கலர்ப்படமாக தயாரிக்க விரும்பினார். கர்நாடகத்தில் உள்ள ஒரு வில்லேஜூக்குப் ஷூட் செய்ய போனோம். அங்கே தங்குவதற்கு எந்த வசதியும் இல்லை. கமல், ஶ்ரீதேவிக்கு மட்டும் தனித்தனி ரூம் கிடைச்சுது . நானும், ரஜினியும் வராண்டா ஒன்றில் பாய் விரிச்சுப் படுத்துக்கிட்டோம்.

அப்பவே ரஜினிக்கு ரெஸ்டே கிடையாது 24 மணிநேரமும் ஏதாவது ஒரு ஷூட்டில் இருப்பார். என்னுடைய ஃபேவரைட் ட்ரெஸ் வெள்ளைத் தாவணியில் ‘செந்தூரப்பூவே…’ பாடலைப் பாடும்போது அந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஶ்ரீதேவி உதட்டசைத்து நடிச்சப்போ ரொம்ப ஹேப்பி ஆயிட்டேன். அந்தப் பாடலை பாடியதற்காக ஜானகிக்கு தேசிய விருது கிடைச்சது தனிக்கதை. பொதுவாக படப்பிடிப்புக்கு நடிக்க வரும் நடிகைகள், எப்போது பேக்கப் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்து இருப்பாய்ங்க. அதன்பின், அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்குப் பறந்துடுவாய்ங்க. ஶ்ரீதேவி இதற்கெல்லாம் விதி விலக்கானவர், ’16 வயதினிலே’ படப்பிடிப்பு நடந்த இடங்களைப் பார்த்துவிட்டு நகராமல் ‘எனக்கு இந்த இடமெல்லாம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு சார், என்னால பிரியிறதுக்கு மனசே வரலியே…’ என்றபடி ஸ்தம்பித்துப்போய் கதறி அழ ஆரம்பிச்சுட்டார். அவருடைய அம்மா எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவரை ஆசுவாசப்படுத்த முடியாமல் தவிச்சுப்போயிட்டார்.

கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு சின்ன வீட்டில் படமாக்கப்பட்ட காட்சி. ‘மயிலு ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாயி மட்டும் வளர்க்கல, இந்தச் சப்பாணியத்தானே வளர்த்தா…’ என்று வசனம் எழுதிய கலைமணி, கமல்ஹாசனோடு பிரமாதமாக நடித்த மயிலு இப்போது உயிரோடு இல்லை. நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன், மனசு கஷ்டமாக இருக்கிறது. ’16 வயதினிலே’ படத்தை இயக்கும்போது கமல்ஹாசன் பெரிய நடிகர். அவருக்குச் சம்பளம் 29,000 ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9,000 ரூபாய், ரஜினிக்கு 3,000 ரூபாய் கொடுத்தோம். அப்ப ரஜினி ரூ. 5000 ஆயிரம் கேட்ட்டார். மூன்றாயிரம் ரூபாய் பேசி, 2.500 ரூபாய் கொடுத்தோம். இன்னிக்கும் ரூ.500 பாக்கி இருக்கிறது, கமலுக்கும்-ஸ்ரீதேவிக்கும் இளநீர் கொடுப்பாய்ங்க, ரஜினிக்கு அது கூட தந்ததில்லை
மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட திரைப்படம் ’16 வயதினிலே’.”அப்படீன்னார்

இவ்வளவு மெனக்கெட்டு எடுத்த இப்படத்துக்கு எல்லா நல்ல படங்களைப் போலவே சோதனைகள் காத்துக்கொண்டு இருந்தது. 16 வயதினிலே படம் முடிஞ்ச பிறகு அந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஆனால், டிஸ்ட்ரிபியூட்டர்கள் எவரும் இந்தப் படத்தை வாங்க முன்வரலை. என்னதான் புகழ் பெற்ற நடிகர்கள், இளையராஜா என பிரமாண்டமாக திரைப்படம் அமைஞ்சாலும், கமல்ஹாசன், படத்தில் சப்பாணி என்ற ரோலில் நடிச்சது பெரும் எதிர்மறை எண்ணத்தை அவிய்ங்க மனசில் விதைச்சுடுச்சு.

பெண்கள் மனம் கவர்ந்த நாயகன் சப்பாணி வேடத்தில் வருவதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றும், இந்த திரைப்படம் வெற்றி பெறுமா என்பதுமான தயக்கம்தான் காரணமாக இருந்துச்சு. அதுனாலே , யாரும் இப்படத்தை வாங்க முன்வரவில்லை. ஆனாலும், மனம் தளராத புரொடியூஸர் ராஜ்கண்ணு சொந்தமா படத்தை ரிலீஸ் செஞ்சார்.

அதைத் தொடர்ந்து, படம் வெளியாகி 175 நாள் ஓடி மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பெற்றுச்சு.எங்கு பார்த்தாலும் 16 வயதினிலே பற்றிய பேச்சுதான். அந்த அளவு மக்கள் மனதில் இடம் பிடித்து மாபெரும் வெற்றி பெற்றது இப்படம். ரஜினி மற்றும் ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சுது. அதேபோல கமல்ஹாசன் நடிப்பை பார்த்து மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்துட்டாய்ங்க.

இந்த ‘16 வயதினிலே’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா ?-னு யாரையாவது கேட்டா கோபமாகிடுவாய்ங்க. ‘எத்தினி முறை’ -ன்னு சேர்த்துக்கிட்டா, சந்தோஷமாகி பதில் தருவாய்ங்க. அத்தனை முறை பார்த்திருந்தாலும் இன்னிக்கும் டிவியில் பார்த்தாலும் அப் படம் அதிர்வலையை ஏற்படுத்தும். மனம் கனக்க வைக்கும். சோகத்தில் ஆழ்த்தும். தூங்கவிடாமல் பண்ணும். டாக்டரைப் பார்த்தால் கோபவார்கள் பரட்டையனைப் பார்த்தால் ஆவேசமாவார்கள் மயிலைப் பார்த்தால் இரக்கப்படுவார்கள் சப்பாணியைப் பார்த்தால் பரவசமாவார்கள்.இப்படியெல்லாம் செய்ய வைக்கும் ‘16 வயதினிலே’1977ம் ஆண்டு, இதே செப்டம்பர் மாசம் இதே 15ம் தேதி ரிலீஸாச்சு அந்த ‘16 வயதினிலே’ . படம் வெளியாகி 47 வருஷங்களாகிவிட்டன. ஆனாலும் சப்பாணி, மயிலு, பரட்டை, குருவம்மா என அம்புட்டு பேர்களும் ‘என்றும் 16’ என ரசிக மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்ங்க இல்லையா?