இயக்கம் – இளையராஜா கலியபெருமாள்
நடிப்பு – சிபி ராஜ், நிரஞ்சனா
பரபர திரில்லர் வந்து பல காலம் ஆகிவிட்டது. டென் ஹவர்ஸ் திரைப்படம் டிரெய்லர் வந்தபோதே மிக நன்றாக இருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி விட்டது.
10 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது தான் கதை.
கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்கின்றனர். அந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபி சத்யராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, அப்பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாகவும், அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்றுக் கொண்டிருப்பதாகவும் போலீஸுக்கு தகவல் வருகிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞர் அதே பேருந்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
பெண் கடத்தல் மற்றும் பேருந்தில் இளைஞர் கொலை, என இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டும், என்ற கட்டாயத்தில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்?
இது தான் கதை ?
அதிரடியாக ஆரம்பிக்கும் அதே ஜோரில் பறக்கிறது. பல குட்டி குட்டி ஐடியாக்களைக் கோர்த்து திரைக்கதையை சுவாரஸ்யபடுத்தியிருக்கிறார் இயக்குநர்.
காஸ்ட்ரோ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் சிபிராஜ். ஆக்சன் சண்டைக்காட்சிகள் இல்லையென்றாலும் போலீஸ் மிடுக்கு குறையாமல் நடித்துள்ளார். இண்டலிஜெண்ட் காவலதிகாரியாக அவர் கண்டுபிடிக்கும் விசயங்கள் நன்றாக உள்ளது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், மருத்துவராக நடித்திருக்கும் ஜீவா ரவி, பேருந்தில் கொலை செய்யப்படும் இளைஞராக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன், முருகதாஸ், திலீபன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
கதை முழுவதும் இரவில் நடந்தாலும் அதை மிக அழகாக படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக். ஒரு பஸ், தேசிய நெடுஞ்சாலை என அனைத்து காட்சிகளையும் குறைவான வெளிச்சத்தில் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை பரபர திரைக்கதையோடு பார்வையாளர்களை இணைத்து விடுகிறது.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், காட்சிகளை தொகுத்த விதம் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்கிறது.
ஐடியாவாக இருக்கும் எழுத்து படமாக்கியதில் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது.
ஆனாலும் யார் குற்றவாளி?, இரண்டு குற்றங்களுக்கு இடையே எதாவது தொடர்பு இருக்குமா? என்ற கேள்விகளுக்கான பதிலை யூகிக்க முடியாதபடி இயக்குநர் இளையராஜா கலியப்பெருமாள் திரைக்கதையை நகர்த்திச் சென்றுள்ளார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம் பிடிக்குமென்ப்வர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.