சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா – நடிகர் கருணாகரன்

நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரக் காத்திருக்கும் ‘அயலான்’ படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது என்பவர் இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சிவகார்த்திகேயனுடன் நான் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு காட்சியிலும் தான் மட்டுமே சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்காமல் தனது சக நடிகர்களுடனும் கலந்தாலோசித்து சிறப்பான அவுட்புட்டைக் கொண்டு வருவார் சிவா.

அதேபோல, இயக்குநர் ரவிகுமாரும் சிறந்த தொழில்நுட்பக்குழுவையும் புதிய ஐடியாவையும் இந்தப் படத்தில் கொண்டு வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவிகுமார் இருவரும் படத்தின் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை தான் எங்கள் பலம். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும். ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயினராக, குறிப்பாக குழந்தைகளுக்கான படமாக ‘அயலான்’ வந்துள்ளது” என்றார்.

‘அயலான்’ தவிர நடிகர்கள் கார்த்தி & அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ’96’ புகழ் பிரேம்குமார் இயக்கும் புதிய படம், நளன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார் கருணாகரன். இதுமட்டுமல்லாது, நாகசைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். மேலும், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்கும் புதிய படம், மிர்ச்சி சிவாவுடன் ‘சூது கவ்வும்2’ மற்றும் கருணாகரன் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘குற்றச்சாட்டு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவரது கைவசம் உள்ளது.