யாத்திசை திரைவிமர்சனம்

யாத்திசை திரைவிமர்சனம்

இயக்கம் – தரணி ராசேந்திரன்
நடிகர்கள் – குரு சோமசுந்தரம், சுபத்ரா, செம்மலர் அன்னம், சேயோன், சக்தி
இசை – சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு – மகேந்திரன் கணேஷ்
தயாரிப்பு – கே ஜே கணேஷ்

தமிழில் வரலாற்று படங்கள் மிக அரிது அதிலும் ராஜா காலத்தை காட்டும் விதத்தில் நம் முன்னோர்களின் வரலாறு பற்றி துளி உண்மை இருந்ததில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் விதத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான பதிவாக வந்திருக்கும் படம் தான் யாத்திசை.

எயினர் என்ற மறைக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வியலையும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இடை சங்கப் பாண்டியர்களில் புகழ் பெற்ற மன்னனான ரணதீரனின் வாழ்க்கை வரலாற்றையும், மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ‘யாத்திசை’.

இதுவரை வெளிவந்த மன்னர் காலத்து படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்துள்ளது. நிலப்பரப்பு, கோட்டை, மொழி, ஆடை – அணிகலன்கள். ஆயுதம், போர், உணவு போன்ற அனைத்தும் ஏழாம் நூற்றாண்டை மிகச்சரியாக பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளது. அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் முதல் படத்திலேயே இப்படி ஒரு பதிவை ஆழமாக பதித்திருப்பது மிகவும் பாராட்டுக்குறியது. பாண்டிய பேரரசுக்கும், சிறு குழுவுக்குமான மோதல்தான் படத்தின் கதை.

பாண்டிய மன்னன் அரிகேசரியின் முதுமையைக் காரணமாக வைத்து, அவர்களை வீழ்த்த தயாராகிறார்கள் சேரர்கள்.அவர்களுக்கு ஆதரவாக சோழர்கள், வேளிர்கள், சிறு குழுக்கள் உடன் நிற்க, அரிகேசரியின் மகனான ரணதீரன்(சக்தி) பாண்டிய படைக்கு தலைமை ஏற்கிறான்.
போரில் பாண்டியர்கள் வெற்றி பெற, சோழர்களுக்கு ஆதரவாக நின்ற எயினர்கள் பாலை நிலத்துக்கு விரட்டப்படுகின்றனர். சேர, சோழர்களே ரணதீரனை கண்டு அஞ்சிய சூழலில், எயினர்கள் குலத்தில் பிறந்த கொதி (சேயோன்) பாண்டியர்களை விரட்டி அடிக்கிறான்.கொதியின் இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது, அவனின் வெற்றி நீடித்ததா? இல்லையா? என்பதற்கான விடை சொல்வதே படத்தின் மீதிக் கதை.

கதை மிக ஆழமாக இருந்தாலும் படத்தில் உணர்ச்சிவயமிக்க காட்சிகள் இல்லை.

இந்த படத்தின் முக்கியமான பலம் நடிகர்கள் தேர்வு. குரு சோமசுந்தரம், சுபத்ரா, செம்மலர் அன்னம் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள்.கொதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சேயோன் படத்தை முழுவதுமாக தக்க வைத்துள்ளார். ரணதீர பாண்டியனாக நடித்திருக்கும் சக்தி கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சித நடிப்பை வழங்கியுள்ளார். மேலும் எயினர் இனத்துப் பூசாரியாக வரும் குரு சோமசுந்தரத்தை அடையாளமே காண முடியவில்லை. தேவரடியார்களாக நடித்துள்ள ராஜலட்சுமி, வைதேகி ஆகியோரும் ரசிக்கும்படி நடித்துள்ளனர்.

சக்ரவர்த்தியின் பின்னணி இசை காலத்தை ஓரளவு காலத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. போர் காட்சிகளில் இசைக்கு மேலும் முயற்சி செய்திருந்தால் படம் இன்னும் நம் மனதில் பதிந்திருக்கும், ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை ஆகிய மூன்று நிலப்பரப்பை அழகாக காட்சிப் படுத்தியுள்ளார்.சண்டைக் காட்சிகளின்போது, படை வீரர்களைப் பல்லாயிரக் கணக்கில் காட்டிவிட்டு, அவர்கள் மோதும்போது ஏதோ ஐநூறு ஆயிரம் பேர் சண்டை இடுவது போன்ற உள்ளது. ஒளிப்பதிவாளரின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது. அவரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மகேந்திரன் கணேசனுக்கு வாழ்த்துகள்.

நூற்றாண்டு காலத்தை கண்முன் கொண்டுவர ஒரு புதிய குழு உழைத்திருக்கும் உழைப்பு பிரமிப்பை தருகிறது.

மேலும் இந்த படத்தில் ஏழாம் நூற்றாண்டு பேசப்பட்ட தமிழ் மொழி பேசியுள்ளனர் அது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது இப்படி இருந்ததா தமிழ். படத்திற்கு Motion graphics கைகொடுத்த அளவிற்கு சவுண்ட் மிக்ஸ்ஸிங் கை கொடுக்கவில்லை. டப்பிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கலை இயக்குநரின் பணி பாராட்டத்தக்கது. குடியிருப்பு, அரண்மை போன்றவவற்றை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்.

படத்தின் கதையின் நோக்கம், இடைவேளைக்கு பிறகு வரும் ஸ்லொமோஷன் காட்சிகளை குறைத்திருக்கலாம்.

குறைந்த பொருட்செலவில் புதிய குழுவுடன் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த யாத்திசை எதுவும் முடியும் என்ற நம்பிக்கை தருகிறது.

யாத்திசை தமிழ் சினிமாவிம் முக்கியமான படைப்பு