கமல் எடுக்கவிருந்த பொன்னியின் செல்வனில் விக்ரம்

அமரர் கல்கியின் நாவலைத் தழுவி மணிரத்னத்தின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட `பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் நாவலை கமல் தொலைக்காட்சித் தொடராக எடுக்கத் திட்டமிட்டதாகவும், அதில் நடிப்பதற்காக அவர் தன்னை அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றிப் பேசிய விக்ரம், “நீண்ட நாள்களுக்கு முன், கமல் சார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, தான் பொன்னியின் செல்வனை எடுக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் அதைத் தொலைக்காட்சிக்காக எடுக்க விரும்பினார். அப்போது அவர் என்னிடம், ‘அதில் நீங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எந்த வேடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து நடிக்கலாம்’ என்றார். அதில் மூன்று வேடங்களில் ஏதாவது ஒன்றைச் செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் அவரிடம், முதலில் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் படிக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன்.

அதன் பின், ‘இக்கதையை டிவிக்காக எடுக்கப்போவதால் இதில் நடிப்பதைப் பற்றி நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு நடிகனாக நான் இதைச் செய்ய மாட்டேன்’ என்று கமல் சார் என்னிடம் கூறியிருந்தார். அடுத்த நாள், நான் அவரிடம் திரும்பி வந்து, ‘பொன்னியின் செல்வன்’ பெரிய திரைக்கு வரும் வரை காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நடிப்பதற்காக நான் எப்போதும் ஒருவரின் மனதில் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.