சுப்ரமணியபுரம் பட நினைவுகள் குறித்து சசிகுமார்!

2008-ம் ஆண்டு இதே ஜூலை 4-ம் தேதி வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. சசிகுமார் டைரக்ட் & நடிச்சு, தயாரிச்சு இருந்தார். ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

எண்பதுகளின் மதுரையில் சுப்ரமணிபுரம் என்ற பகுதியில் நடப்பதாக சித்தரிக்கப்பட்ட திரைப்படம் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’. அதன் காட்சியாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக மட்டுமல்ல; திரைக்கதைக்காகவும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படம் உருவாக்கிய சலனமும் தாக்கமும் தமிழ் சினிமாவைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க வச்சது என்னவோ நிஜம்.இந்தப் படத்தை முடிச்சு வச்சிப்புட்டு ரிலீஸ் செய்ய அவர் பட்டப்பாடை விட சசிகுமாரிம் நண்பனாக இருந்த வீ.கே.சுந்தர் பட்ட மெனக்கெடல் இன்றைக்கும் நினைவில் உள்ளது..

இப்ப கொஞ்சம் பிகு பண்ணும் ஆர்டிஸ்ட் லிஸ்டில் சேர்ந்து விட்ட சசிகுமாரிடம் முன்னொரு காலம் நம்ம கட்டிங் கண்ணையா அடிக்கடி பேசுவது உண்டு. அந்த நினைப்பில் இப்போதும் ஒரு வாழ்த்து சொல்லி விட்டு பேசியதன் பிளாஷ் பேக் ரிப்போர்ட் இதோ:

இன்னிக்கும் எங்களுக்கு மதுரையில ஜவுளிக் கடை, புத்தகக் கடை எல்லாம் இருக்கு. அதனால் புள்ளை படிச்சிட்டு பிசினஸ் பக்கம் போவான்னு படிக்கச் சொன்னாங்க. எனக்கு நினைப்பெல்லாம் சினிமாதான். காலேஜ் முடிக்கும் போது எங்க சொந்தக்காரர் கந்தசாமி ‘சேது’ படத்தைத் தயாரிச்சார். அவர் சொல்லி பாலா அண்ணன்கிட்ட என்னை சேர்த்து விட்டார். அப்போதான் பாலா அண்ணன்கிட்ட அமீர் அண்ணன் அசிஸ்டென்டா வேலை பார்த்தார். அமீர் அண்ணன் ‘மௌனம் பேசியதே’ பண்ணும் போது நானும் அமீர் அண்ணன் கூடவே வந்துட்டேன். அடுத்து ராம் படத்துலயும் நான் அவர் கூடதான் வேலை செஞ்சேன். பிறகு தனியா படம் பண்ணலாம்னு யோசிச்ச போதுதான் ‘சுப்ரமணியபுரம்’ கதை ரெடியானது.

டைரக்டர் ஆகனுங்கிறது மட்டும்தான் என்னோட லட்சியமா இருந்துச்சு. 80இல் நடந்த கதை கொஞ்சம் பிளாக் ஒயிட்-ன்னு சொன்ன போது யாரும் முன் வரலை. அப்ப ஹீரோவா அறிமுகமான சாந்தனுகிட்டே கதையைச் சொன்னேன். ஆனா அவர் ஹீரோவா நடிச்ச படம் ரிலீஸானம் இந்த படம் பண்ணலாம்னு அவர் அப்பா பாக்யராஜ் சொன்னார். எனக்கு அவ்வளவு நாள் காத்திருக்க முடியாதுனு நானே பண்றதா முடிவு பண்ணிட்டேன். முதல் படம் சுட்டாலும் நமக்குத்தான்; யாருக்கும் பதில் சொல்லத் தேவை இல்லை. நம்ம பணத்தை தொலைக்கிறதை விட அடுத்தவங்க பணத்தை தொலைச்சா டபுள் வலி. அதனாலதான் நானே தயாரிப்பாளரா இறங்கிட்டேன். இந்த படம் தோல்வி அடைஞ்சா எவ்வளவு இழப்பு; அதை எப்படி சரி செய்வேன்; இப்படி எல்லாமே யோசிச்சு லிஸ்ட் ரெடி பண்ணிட்டுதான் படமே எடுத்தேன்.

இத்தனைக்கும் இந்த கதையை முதலில் அமீர் அண்ணன் கிட்ட சொன்னேன். பொறுமையா கேட்டுப்புட்டு அம்புட்டு பேருமே ரவுடியிசம் கதைதான் பண்றாங்க. நீ வேற கதை பண்ணுனு சொன்னார். ஆனா நான் உறுதியா இருந்தேன். பண்ணினா இந்த கதைதான் பண்ணனும். அதுல எது கிடைச்சாலும் ஓகே. அதுக்கப்புறம் என்னோட முடிவை மாத்திக்கிறேனு ரொம்ப உறுதியா இருந்தேன். பின்னே என்ன? எல்லோருமே ரவுடியிசம் படம் பண்றாங்க… அது எல்லாமே ஸ்டீரியோ டைப்பா, மாஸ் மட்டும்தான் அந்த ரவுடியிசத்துல இருக்கும். ஆனா கிராமத்துல வளர்ந்து வர்ற ஒருத்தன் எப்படி ரவுடியா இருப்பானு அவன் சூழ்நிலைக்கு ஏற்பதான் சொல்லணும். அவனுக்குப் போய் கூட பத்து ஆள், மாஸ் கெட்டப், டயலாக்னு வச்சா நல்லாயிருக்காது. கிராமத்துல ஒருத்தன் ரவுடியானால் லைவ்வா இப்படித்தான் இருப்பான்னு சொன்னதுதான் இந்தக் கதையோட பிளஸ். இல்லைனா ஒரு கொலையை எழுந்து நின்னு கைதட்டி ரசிக்க மாட்டான் ஒரு ரசிகன். நான் ரசிகனை மட்டும்தான் நினைச்சு படம் பண்ணேன். நம்பிக்கை துரோகத்தின் ஆழத்தைத் தொட்ட திருப்தி ஒவ்வொரு சீன்லயும் ரசிகனின் கைதட்டலில் தெரிஞ்சதை பதிமூனு வரும் கழிச்சும் ஃபீல் பண்ண முடியறது கொஞ்சம் நிறைவா இருக்குது.

இதை எல்லாம் தாண்டி அடிக்கடி சொன்னதுதான்.. ஆனாலும் இன்னிக்கும் சொல்லியே ஆகணும் : இந்தப் படத்தை ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்துடாய்ங்க. அதுனாலே படத்தை விற்பதற்கே பெரிதும் போராட வேண்டியிருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செலவு செஞ்சு சில தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாச்சு. அதிலும் பல தியேட்டர்களில் ரெண்டாவது நாளே படத்தை தூக்கிட்டாய்ங்க. ஆனால் மீடியாக்கள் படத்தைப் பற்றி உயர்வாக விமர்சனங்கள் எழுதின. அதன்பின்னர் படம் தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட்டு பெரிய வெற்றி பெற்றுச்சு. ஆக இந்த வெற்றிக்கு மீடியாக்கள் தான் காரணம்