விக்ரம் ‘சீயான்’ ஆக மாற உதவிய சேது படத்தின் போராட்டக் கதை!

விக்ரம் நடிச்ச சேது இதே டிசம்பர் 10ல்தான் ரிலீஸாச்சு அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேது பட தயாரிப்பின் ஃபிளாஷ் பேக் ஸ்டோரி

சேது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும், நீண்ட காலமாக திரையுலகில் தன்னை நிரூபிக்க கடினமாக போராடிக் கொண்டிருந்த விக்ரமுக்கு தமிழ் சினிமாவுலகில் ஒரு தனி அடையாளத்தைக் பெற்றுத் தந்த திரைப் படம் இந்த சேது.அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா இயக்கிய முதல் திரைப்படமும் சேது தான். தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு நடிகனாகவே இருந்த விக்ரம் தனது சினிமா வாழ்க்கையின் முதல் வெற்றியை ருசித்த படமிது . இந்த ஒரு வெற்றிக்காக விக்ரமின் காத்திருப்பு என்பது பெரிய பகீரத பிராயத்தனம். தன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி வாய்ப்பாக தன் கையில் எடுத்தது ‘சேது’ படத்தைதான்…!

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ராதிகாவைச் சந்தித்த விக்ரம், ‘நான் இப்போ ‘சேது’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். இந்தப் படமும் எனக்கு சரியா போகலைன்னா நீங்க எடுத்துட்டு இருக்கிற ‘சித்தி’ நாடகத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ன்னு கேட்டாராம். ஆனால் ‘சேது’ விக்ரமுக்குக் கொடுத்தது வரலாற்று வெற்றி. ஒன்பது ஆண்டுகால காத்திருப்புக்குக் கிடைத்த விஸ்வரூப வெற்றி. ..!

அப்போதைய முன்னணி தயாரிப்பாளர்கள் எல்லாம் இந்தப்படத்தை நம்பவில்லை. பிரிவியூஷோவிலேயே நூறுநாட்கள் ஓடியபடம் என்று சொல்லப்பட்ட படம் இது. தனது தயாரிப்பாளரிடம் நீங்களே இதை ரிலீஸ் பண்ணுங்க இந்த படம்‌ சரியா போகும் அப்படி போகலனா நான் வெற்று ஸ்டாம்ப் பேப்பரில் கையைழுத்து போட்டு தரேன் இதுக்கு அப்பறம் நான் சம்பாதிக்கும் அனைத்தும் உங்களுக்கே என்று கூறி படத்தை வெளியிட வைத்தார் பாலா …!

படம் ரிலீஸான ஒரு வாரம் வரை ஆடியன்ஸ் யாரும் படம் பார்க்க வரவில்லை . தியேட்டர்ல இருந்து படத்தை தூக்கும் திட்டத்தில் விநியோகஸ்தர்கள் முடிவு செய்த நேரத்தில் சில பல தமிழ் பத்திரிகைககள் படத்தை கொண்டாடின. அதன் பிறகுதான் படத்தைப் பார்க்க ரசிகர்கள் நிறைய பேர் தியேட்டருக்கு வர கிட்டத்தட்ட 300 நாளுக்கு மேலே படம் ஓடி தேசிய விருதினையும் தட்டிச் சென்றது …!தமிழ் சினிமா பல காதல்களை பார்த்து கொண்டு இருந்தாலும் ,இனியும் பல வகையான காதல்களை காட்டப்பட இருந்தாலும் காதல் படங்களில் தவிர்க்கவே இயலாத ஒரு படம் ” சேது “ (கட்டிங் கண்ணையா)

இன்னும் கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா அதிரடி காதல் திரைப்படமான சேதுவில் விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்தனர். இத்திரைப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். ”சீயான்” என்ற அடைமொழியும் இந்த படத்திற்கு பிறகு விக்ரமின் அடையாளமாக மாறிடுச்சு. சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என சென்னைக்கு ஓடி வந்து, பல கஷ்டங்களை சந்தித்து ,பாலு மகேந்திரா விடம் உதவி இயக்குனராக சேர்ந்து அவ்வாறு வாய்ப்பு கிடைத்த படங்களில் தனது முழு நேர அர்ப்பணிப்பை தந்தவர் பாலா.

“வண்ண வண்ண பூக்களில்” முதன் முதலாக டைட்டில் கார்டில் பாலாவின் பெயரை இணை இயக்குநராக போட்டார் பாலு மகேந்திரா அதுவரை அவர் யார் பெயரையும் இணை இயக்குநராக போட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த படத்தில் பாலாவின் உழைப்பை பார்த்த தயாரிப்பாளர் தாணு 85 ஆயிரம் ரூபாயை அவருக்கு சம்பளமாக தந்தார் . டைரக்டர் ,ஹீரோக்கு பிறகு அந்த படத்தில் பாலாவுக்குதான் அதிக சம்பளம்…! மறுபடியும் படத்திலும் பணியாற்றி விட்டு தன் ஒரு‌ படம் எடுக்க நினைப்பதாக தன் குருநாதரிடம் கூறி கதைக்கான களத்தை எழுத ஆரம்பித்தார் …!

“அணு அணுவாய் சாவதற்கு முடிவான பின் காதல் என்பது சரிதான்” -அறிவுமதியின் இந்த வரிகளில் பிறந்த கதைதான் ” சேது”. மேலும் பாலா ஏர்வாடி சென்று இருந்தபோது மனநிலை பாதித்த மக்களின் வாழ்வியலை கண்டு அதிர்ந்து போனார்.. தான் அங்கு சந்தித்த காட்சிகளையும் , அறிவுமதியின் அந்த வரிகளையும் வைத்து ஒரு கதையை உருவாக்கினார் …!

1990 களின் நடுப்பகுதியில் இப்படத்தின் ஸ்கிரிப்டை எழுதினார், இப்படத்துக்கு முன்னதாக அகிலம் என்று பெயரிட்டார், இப்படத்தில் தனது ரூம் மேட் விக்னே ஷுக்குதான் ஹீரோ ரோலுக்கு செலக்ட் செஞ்ஸ்ரீந்தார். விக்னேஷ் ஏனோ விலகிக் கொண்ட நிலையில் , பின்னர் அவர் ஜே.டி. சக்ரவர்த்தியை படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்தார் . அவர் ஸ்கிரிப்டை விரும்பினார், ஆனால் அவர் மற்றொரு பிராஜக்டில் சிக்கியதால் படத்தில் கமிட் ஆக முடியவில்லை.

இந்த படக் கதை பாலாவின் நண்பரின் நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, அவர் காதலித்து, மனதை இழந்து பைத்தியமாக ஆனவராம். ஒரு கட்டத்தில் ஆக்டர் முரளியுடன் பேச்சு வார்த்தை நடந்து முறிந்தது. இந்த கதை ரெடியாகி ஏழாண்டு கழிச்சு அதாவது 1997 ஆம் ஆண்டில், அறிமுக இயக்குனர் பாலா விக்ரமுக்கு முரட்டுத்தனமான சேது (சியான்) என்ற பாத்திரத்தை அதே பெயரில் வழங்கினார்.

நாயகியாக கீர்த்தி ரெட்டி ஆரம்பத்தில் கமிட் ஆனார், ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக ராஜேஸ்வரி புக் ஆகி பின்னர்தான் அபிதா சிக்கினார். இந்த ‘படத்தில் நடிப்பதற்காக 15 கிலோ உடல் எடையைக் குறைத்தார் விக்ரம். உடல் எடை மட்டுமல்லாமல் கண்கள், முகம், உடல்மொழி என அனைத்திலும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்து காட்டினார்.

அத்துடன் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த விக்ரம் அந்த பொழப்பை நிப்பாடி விட சொல்லி ஆர்டர் போட்டார். ஆம் அஜித்தின் அறிமுகப் படமான ‘அமரவாதி’யில் அவருக்குக் குரல் கலைஞராக செயல்பட்டவர் விக்ரம்தான். அஜித் மட்டுமல்லாமல் பிரபுதேவா (காதலன்), அப்பாஸ் (காதல் தேசம்,) ஆகியோருக்கும் குரல் கொடுத்து இருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட ஆஸ்கர் விருதுகளை வாரிக் குவித்த ரிச்சர்ட் அட்டபரோவின் ‘காந்தி’ திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்ற வடிவத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்குக் குரல் கொடுத்தவரும் விக்ரம்தான்.

ஒரு வழியாக படத்தின் ஷூட் ஏப்ரல் 1997 இல் தொடங்கி  படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்தது. காரணம் இப்படம் தொடங்கிய நேரமான 1997 ஆம் ஆண்டின் FEFSI வேலைநிறுத்தம் பூதாகரமானது. 1997 ஜூன் முதல் டிசம்பர் வரை தமிழ் திரையுலகில் படப்பிடிப்பே கிடையாது. கொஞ்ச பட்ஜெட் படமாக தொடங்கிய சேது இந்த காலகட்டத்தில் ஆன தளர்ச்சிகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாது..அந்த ஃபெப்சி வேலைநிறுத்தம் நிறுத்தப் பட்டபோது, ​​தயாரிப்பாளர் இந்த புராஜெக்டே வேண்டாமென்று வெளியேறினார், அப்போது பாலாவின் உதவியாளர் அமீர் சென்று தயாரிப்பாளரை திரும்பி வருமாறு கெஞ்சி அழைத்து வேண்டியிருந்தது,

படப்பிடிப்பு 1998 ஜனவரியில் மீண்டும் தொடங்கியது. மேலும் மெதுவான முன்னேற் றத்திற்குப் பிறகு, படம் இறுதியாக ஜூன் 1999 இல் தயாராக இருந்தது. ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய ஒரு டிஸ்டிரிபியூட்டர் கூட முன்வரவில்லை. கிட்டத்தட்ட 90 முறை ப்ரிவியூ ஷோ-வுக்கு பிறகுதான் படத்தை வாங்குபவரைக் கண்டு பிடிக்க முடிந்தது, ஆனால் சோகமான க்ளைமாக்ஸ் ஜனங்களுக்கு பிடிக்காது.. அதனால் அதை சுபமாக மாற்றி எடுங்கள் என்று சொன்னதை கேட்க பாலா ஏற்காததன் காரணமாக ரிலீஸ் மேலும் தள்ளி போன்து.

இந்த காலகட்டத்தில், பாலாவும் விக்ரமும் விக்ரமின் மனைவி ஷைலஜாவின் கையில் இருந்த நகை, பணத்தை எல்லாம் செலவு செய்து பத்திரிகைகளில் விளம்பரத்துடம் மீடியா ஷோ-வெல்லாம் போட்டனர், பல பத்திரிகைகள் நல்ல விமர்சனங்களைக் கொடுத்த நிலையிலும், படம் வாங்குவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை, அது முடிவடைந்தாலும் வெளியிடப்பட யாரும் முன்வராத நிலையில் இதே 10 டிசம்பர் 1999 இல் ஒரு புறநகர் அரங்கில் ஒரு நண்பகல் நிகழ்ச்சியில் ஓடத் தொடங்கியது, ஆனால் படிப்படியாக பார்வையாளர்களை வாய்மொழி விளம்பரம் மூலம் உருவாக்கி 100 நாட்களுக்கு மேல் சென்னை முழுவதும் பல சினிமா அரங்குகளில் ஓடியது. இப்படத்தின் வெற்றியின் விளைவாக விக்ரம் ரசிகர் மன்றம் எல்லா தெருக்களிலும் புதிதாக முளைத்ததெல்லாம் அதிசயம் என்ரும் சொல்லலாம்.

அடுத்த ஆண்டு, சேது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது, அதே நேரத்தில் பிலிம்பேர் விருதுகள் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருது களில் சிறந்த திரைப்பட பிரிவில் வெற்றிகளைப் பெற்றது. பாலா சிறந்த இயக்குனருக் கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும், சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.

மேலும் ஹீரோ விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் ஜூரிகளின் ஒரு தலைபட்சத்தால் மோகன்லாலிடம் தோற்றார். பின்னர் இதே படம் சல்மான் கான் நடித்த தேரே நாமாக இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது, இது வெற்றியாகவும், கன்னடத்தில் ஹுச்சாவாகவும் நடிகர் சுதீப்பிற்கு ஒரு பெரிய முன்னேற்றத்தை அளிச்சுதாக்கும்..

மொத்தத்தில் உண்மையான உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்பதற்கு இந்த சேது படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில் ட்ரெண்டிங்-கில் வருவதே சாட்சி.

நன்றி :கட்டிங் கண்ணையா (சினிமா பிரஸ் கிளப்)