ஜனனிக்கு பாராட்டு விழா நடத்திய பிரம்மா குமாரிகள் சங்கம்!

0
434

ஐந்து வயதிலிருந்து இசை பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் எஸ்.ஜே.ஜனனி. கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவியான இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளை நடத்தியுள்ளார். பிரபா என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இளமணி விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது, சமீபத்தில் கூட கலைமாமணி விருது என இந்திய விருதுகள் பலவற்றுக்கு சொந்தக் காரர் இந்த எஸ்.ஜே.ஜனனி. தற்போது இவரே இசையமைத்து பாடிய, புதிய உலகம் மலரட்டுமே என்கிற பாடலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் “க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்” (Global Peace Song Awards) அமைப்பு “உலக அமைதிப் பாடல் விருதினை வழங்கியுள்ளது.

உலகெங்கும் அமைதியை பரப்பும் விதமாக நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பங்கு பெற்றன. அதில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட, பகிரப்பட்ட பாடல் என்கிற அடிப்படையில் இந்தப்பாடல் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது..

மேலும், கலிபோர்னியாவில் உள்ள “ப்ராஜக்ட பீஸ் ஆன் எர்த்” (Project Peace On Earth) என்கிற அமைப்பு இவரை உலக அமைதி இசை தூதுவர்களில் ஒருவராகவும் அந்த அமைப்பின் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் நியமித்துள்ளது. பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழக மாணவியான ஜனனிக்கு தற்போது விருது பெற்றுத்தந்துள்ள இந்தப்பாடல், பிரம்மா குமாரிகள் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம் அமைப்பின் சென்னை நுங்கம்பாக்கம் கிளை சார்பாக நேற்று அக்-20ஆம் தேதி சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் எஸ்.ஜே.ஜனனியை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடத்தி கௌரவித்தனர்.

இந்த விழாவில் ஓய்வுபெற்ற டிஜிபியும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜன் ஐபிஎஸ், பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்பியுமான இல.கணேசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இசையமைப்பாளர் தினா, பிரபல மூத்த நாதஸ்வர வித்துவான் கலைமாமணி எஸ்.ஆர்.ஜி ராஜண்ணா, பாரதிய வித்யாபவன் இயக்குனர் கே.என்.ராமசாமி, தொழிலதிபரும் ஸ்ரீ தியாக பிரம்மகான சபா தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, கவிஞரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான கலைமாமணி முனைவர் ஸ்ரீகவி மற்றும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் நுங்கம்பாக்கம் கிளை பொறுப்பாளரான தெய்வீக சகோதரி பி.கே.சித்ரா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எஸ்.ஜே.ஜனனியை வாழ்த்தியும் பாராட்டியும் பேசினார்கள்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும்போது, “ஜனனியின் இசைத்திறமையை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.. அவர் எங்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் இன்னும் அதிகம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்” என்றார்.

இல.கணேசன் பேசும்போது, “ஒருவர் விருது வாங்குவது முக்கியம்தான். ஆனால் அந்த விருது பெற்றவரை மனதார பாராட்டுவது என்பது அதைவிட முக்கியம். அந்த வகையில் பிரம்மா குமாரிகள் சங்கம் ஜனனிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்ததை நாம் பாராட்ட வேண்டும்.. மற்ற நாடுகளில் இசை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம். ஆனால் நம் நாட்டில் அதுவே இறைவனின் பாடல்.. பண்பாட்டின் ஒரு அங்கம்.. ஆண்டவனை காணவேண்டும் என்றால் காட்டின் உள்ளே போய் மரத்தடியில் அமர்ந்து தியானம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை.. இசை மூலமாகவும் அதை சாதிக்க முடியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியது நம்நாடு தான். பிறவியிலேயே இசைக்கலைஞரான ஜனனியை பார்க்கும்போது ஒருவேளை இவர் முற்பிறவியிலும் ஒரு இசை கலைஞராக இருந்து இருக்கலாம் என்றும் அதன் தொடர்ச்சியாகவே இந்த பிறவி அமைந்திருக்கும் என்கிற எண்ணமும் ஏற்படுகிறது. உலகளாவிய அளவில் இவர் பெற்றிருக்கும் விருது சாதாரண விஷயம் அல்ல.. அதனாலேயே இந்த விருது சிறப்பு பெற்றிருக்கிறது.. ஜனனிக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட இன்னும் பல விருதுகள் தேடி வரும் என்பது உறுதி” என்றார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் ஆர்.நடராஜன் பேசும்போது, “நோக்கம் உயர்வாக இருந்தால் விருதுகள் தானாக தேடிவரும்.. அப்படித்தான் ஜனனியின் நோக்கம் உயர்வாக இருந்ததால், இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. பிரம்மா குமாரிகள் அமைப்பு எப்போதும் நல்ல விஷயங்களுக்காக என்னை தேடி வர தயங்கியதே இல்லை.. காவல்துறை ராணுவம் தான் அமைதியைக் கொண்டுவர முடியும் என நாங்கள் பேசிக்கொள்வது உண்டு.. ஆனால் மக்களிடம் அமைதியை வலியுறுத்தி, எங்களுக்கான வேலையை வெகுவாக குறைத்து எங்களுக்கு பெருமை தேடித்தருவது பிரம்மா குமாரிகள் போன்ற அமைப்புகள் தான்.. ஜனனியின் அனைத்துக் கச்சேரிகளுக்கும் நான் சென்று விடுவது வழக்கம்.. அவர் பாடும் தமிழ் பாடல்கள், குறிப்பாக பாரதியார் பாடல்களை கேட்கும்போது எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.. அந்த அளவிற்கு ஒரு உணர்வுப்பூர்வமான இசை பயணத்தை ஜனனி மேற்கொண்டிருக்கிறார்” என பாராட்டினார்.