சுந்தரப் பாடகி பி.சுசிலாவுக்கு பாராட்டு விழா!

தமிழில் ‘ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘மன்னவனே அழலாமா’, ‘பேசுவது கிளியா’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘வளர்ந்த கலை’, ‘அனுபவம் புதுமை’, ‘தாமரை கன்னங்கள்’, ‘மறைந்திருந்துப் பார்க்கும்’ போன்ற பலப் பாடல்களை தன்தேன் சிந்தும் குரலால் வழங்கி வான் எட்டும் புகழைப் பெற்றவர் கானகுயில் பாடகி சுசீலா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக் குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது.

1953 -ல் “பெற்றதாய்” படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழி களில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

அப்பேர்பட்டவர் சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அவரின் அதி தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார். இவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுவிற்கு ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தி இருக்கிறார். பொதுவாக ரசிகர்கள் கைதட்டுவார்கள் சில பேர் பால் அபிஷேகம் செய்வார்கள் ஆனால் இவரோ பாராட்டு விழா நடத்துகிறார் என்றால் சுசீலா அவர்களின் புகழ் வானுயர்ந்ததே.

அமே மாதம் 19-ஆம் தேதி அன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை