சினிமாவால் கலாச்சாரச் சீரழிவா? முட்டாள்தனமான பேச்சு! – ஓவியா காட்டம்!

கடந்த ஓரிரு வாரமாக சோஷியல் மீடியாக்களின் தனிக் கவனத்தைப் பெற்ற 90 எம் எல் படத்தில் வெகு ஜன சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. படம் பார்த்தால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்று சொல்வது முட்டாள்தனம் என்று நடிகை ஓவியா கூறி உள்ளார்.

அனிதா உதீப் இயக்கத்தில் காமெடி கலந்து உருவாகியுள்ள படம் ‘90 எம்.எல்’ (90 ML).‘விசில்’ படத்தில் வரும் ‘அழகிய அசுரா’ பாடலைப் பாடியவர் அனிதா உதீப். இவர் ஏற்கெனவே ‘குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கியுள்ளார். தன் சினிமா கேரியர் பின்னணி பாடகியாகத்தான் தொடங்கியதால் படத்தின் டைட்டிலில் அனிதா உதீப் என்பதற்குப் பதிலாக அழகிய அசுரா என்றே குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் ஓவியா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். படத்தில் ப்யூட்டி பார்லரில் வேலை பார்க்கும் துணிச்சலான ஒரு பெண்ணாக ஓவியா வருகிறார்.

சிம்பு இசை, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என படக்குழு தொழில்நுட்ப ரீதியில் பலமாக உள்ளது. தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற ‘90 எம்.எல்’ (90 ML) படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அந்த ட்ரெய்லரில் வரும் காட்சிகள், வசனங்கள் முழுக்க ஆபாசமாகவும், இரட்டை அர்த்த வசனம் கொண்டதாகவும் இருப்பதாக நெட்டிசன்களும், தமிழ் சினிமா ஆர்வலர்களும் விமர்சித்ததால் பலத்த சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் சர்ச்சைக்குப் பதில் அளிக்கும் வகையில் ஓவியா தன் ட்விட்டர் பக்கத்தில், ”பழத்தைச் சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள். முழுப்படத்தையும் பார்க்கும் வரை காத்திருங்கள். ட்ரெய்லரைப் பார்த்து முழுப் படத்தையும் தீர்மானிக்காதீர்கள்” என்று தெரிவித்து இருந்தார். ஓவியாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் படம் குறித்தும், சர்ச்சைகள் குறித்தும் நடிகை ஓவியா தனியார் இணையதள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், 90 எம்.எல். ட்ரெய்லர் பார்த்த பிறகு அதன் மீதான சர்ச்சைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? தன்னை பின்பற்றுபவர்களை ஓவியா தவறாக நடத்துவதாகவும் விமர்சிக்கிறார்களே? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இது வெறும் சினிமாதான். இந்தப் படத்தில் வெகுஜன சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. படம் பார்த்தால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்று சொல்வது முட்டாள்தனம். நான் சரக்கு அடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதில்லை. நான் சமூக பொறுப்புள்ள பெண் தான். படத்துக்கும் என்னுடைய உண்மையான வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இந்தப் படத்தில் நான் நடிக்காமல் இருந்திருந்தால் மற்ற நடிகைகள் நடிக்க தயங்கி இருப்பார்கள். நான் புதிது புதிகாக முயற்சி செய்பவள். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய இமேஜ் கெட்டுப்போய்விடும் என்று நினைத்து கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில்லை. இந்தப் படத்தில் நான் நடித்திருப்பது நெகட்டிவ் கதாபாத்திரம் தான். என்னுடைய கதாபாத்திரத்துக்கு நான் உயிர்கொடுக்கவில்லை என்றால் விமர்சியுங்கள். ஆணாதிக்க மனநிலையோடு 90 எம்.எல் படத்தைப் பார்க்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.