எனக்கு கல்யாணம்? ஆ- விஷால் ரியாக்‌ஷன்!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், நடிகர் சங்க பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் களத்திலும் அவ்வப் போது கருத்து கூறி வரும் விஷாலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது குறித்து ஆமோதித்து போட்டி கொடுத்ததாகவும் பின்னர் அதை மறுத்து ட்விட் போட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்திகள் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

திருமணம் பற்றி ‘அயோக்யா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷாலிடம் கேட்டபோது , “எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சய தார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும்.

இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமண தேதியை இந்தவார இறுதியில் அறிவிப்போம். அனிஷா ரெட்டியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. எங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இது தெரிந்துவிட்டது. திருமணத்துக்கு தயாராகிவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும்” என்றார்

இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டி – பத்மஜா தம்பதியின் மகள் அனிஷாவின் புகைப்படத்தை தெலுங்கு இணையதளங்கள் வெளியிட்டுள்ளன.

ஆனால் திருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விஷால், “எனது திருமணத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன. எனது சொந்த வாழ்க்கை இது. திருமணம் பற்றி நானே முறையாக அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார். . அந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் “எனது திருமணம் குறித்து இதுபோன்ற தவறான செய்திகள் எப்படி வெளிவருகின்றன தெரியவில்லை. தவறைத் திருத்திவிடுங்கள். இது நியாயமே இல்லை. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை. எனக்கு திருமணம் நிச்சயமானால் நானே அதை முறைப்படி அதிகாரபூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.