வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ நாடகம் தமிழ் சினிமாவாகிறது!

வில்லியம் ஷேக்ஸ்பியரின் கதைகள்தான் உலக சினிமாவுக்கே இன்றுவரை வழி காட்டி. அவரின் கதைக்கு, காட்சிக்கு, கதாபாத்திரங்களுக்கு, வசனத்திற்கு மயங்காதவர்களே கிடையாது. அப்பேற்பட்ட வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படமாகிறது.

இப்படத்திற்கு  ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு  திரை வடிவம் கொடுத்து  இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் இயக்குநர் அனீஸ். இவர் ஏற்கெனவே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கியவர்.

இந்தக் கதைக்காக சுமார் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்து திரை வடிவம் கொடுத்துள்ளார் அனீஸ். ஃபர்பிள் ப்ரேம்ஸ்(Purple Frames) தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘96′ புகழ் ஷண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, மு.காசி விஸ்வநாதன் படத் தொகுப்பை கவனிக்கிறார்.

இரண்டு முக்கிய  கதாபாத்திரங்களின் ஒன்றில் நடிகர் சதீஸ் நீநாசம் அறிமுகமாகிறார். பரபரப்பாக பேசப்பட்ட கன்னட படமான  ‘லூஸியா’ படத்தில் நடித்து பிரபலமான இவர் கன்னடத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருகிறார். இன்னொரு கதாபாத்திரத்தில் சரண் சஞ்சய் நடிக்கிறார். இவர், சுசீந்திரன் இயக்கி வரும் ‘ஏஞ்சலீனா’ படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்துக்கு கூடுதல் சிறப்பாக, அனன்யா ராஜேந்திரகுமார் என்ற ஒன்பது வயது சிறுமியை  பாடல் ஆசிரியையாக அறிமுகப்படுத்துகிறார்கள்.    லண்டனில் வசிக்கும் இவரின் தமிழ் ஞானமும், சங்க இலக்கிய அறிவும், ஏற்கனவே பாடல்களாலும் கவிதைகளாலும் யுடியூபில் வெளியாகி  உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுபவர் என்பது குறிப்பிடத் தக்கது.

WhatsApp Image 2018-11-30 at 9.55.27 PM 

‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் டைட்டில் லோகோவை  வரும் டிசம்பர் 8-ம் தேதி சுவிட்சர்லாந்தில்,  ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ‘தங்க தமிழ் குரல் ரியாலிட்டி ஷோ’வில் வெளியிடுகிறார்கள்.

120 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும்  இந்த நிகழ்ச்சியை ஒன்பது வயது சிறுமியான அனன்யா ராஜேந்திரகுமாரே  தொகுத்து வழங்குகிறார்.

“உலக தமிழர்களால் கவனிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ டைட்டிலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நானும், இசை அமைப்பாளர் ஜிப்ரான், நடிகர்  சரண் சஞ்சய்  மூவரும் கலந்து கொள்கிறோம். இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பதிவாகும்…” என்கிறார் இயக்குநர் அனீஸ்.