மிருணாள் சென் காலமானார்.

இந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள் சென் தனது திரைப்படங்களின் மூலம் பல புதுமையான சமூக கருத்துக்களை விதைத்ததுடன், மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கைமுறையையதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங்கியவர்.

வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் (தற்போது வங்கதேசம்) 1923-ல் பிறந்தார். தந்தை வழக்கறிஞர். விடுதலைப் போராட்ட வீரர்களை விடுவிக்கும் வழக்குகளிலேயே அதிகம் ஆஜர் ஆனதால், சுமாரான வருமானம்தான் கிடைத்தது. கொல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார் மிருணாள் சென்.

படித்து முடித்தவுடன் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதி வேலை கிடைத்தது. அதில் அதிக நாள் நீடிக்கவில்லை. சினிமா குறித்து பல புத்தகங்களைப் படித்தார். திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார்.

கல்கத்தா ஃபிலிம் ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார்.

கம்யூனிசமும் சினிமாவும் இவரது இரண்டு கண்கள். தனது ஆரம்பகால திரைப்படங்களில் கம்யூனிசக் கொள்கைகளை வெளிப்படுத்தினார்.

இவரது முதல் திரைப்படமான ‘ராத் போர்’ வெற்றி அடையவில்லை. 2-வது திரைப்படமான ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ இவருக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 3-வது திரைப்படம் ‘பைஷே ஷ்ரவன்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததோடு, இவருக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. (தகவல் : கட்டிங் கண்ணையா)

இவர் இயக்கிய ஏக் தின் ப்ரதி தின், புவன் ஷோம், காந்தர் உள்ளிட்ட படங்கள் பலதரப்பட்டவர்களின் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களாகும்.

இவரது இயக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின்போது இந்திய பெண்ணுக்கும், புலம் பெயர்ந்த சீன நாட்டைச் சேர்ந்தவருக்கும் இடையிலான அன்பை அரசியல் பின்னணியுடன் சொல்லும் வகையில் சித்தரிக்கப்பட்டது ‘நீல் ஆகாஷெர் நீச்சே‘ என்ற திரைப்படம். இப்படத்தை இந்திய அரசு அப்போது தடை செய்து உத்தரவிட்டது. சுதந்திர இந்தியாவின் அரசு தடை செய்த முதல் திரைப்படம் இப்படமாகும்.

இதன்பின்னரும், அரசியல் கருத்துக்களை முன்வைத்தே பல திரைப்படங்களை எடுத்தார். இதனிடையே இந்தியாவின் ஐந்தாயிரம் ஆண்டு வரலாற்றை இயக்கித் தருமாறு இந்திய அரசு வேண்டிக்கொண்டதன் அடிப்படையில் ‘மூவிங் பெர்ஸ் பெக்டிவ்ஸ்‘ என்ற ஆவணப்படத்தை மிருணாள் சென் இயக்கினார்.

உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

2004-ல் சுயசரிதை (‘ஆல்வேஸ் பீயிங் பார்ன்’) எழுதினார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கவுரவ உறுப்பினராக இருந்தார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.