சர்கார் – திரை விமர்சனம்!

0
301

சர்கார் படத்தின் டைட்டில் கார்டுகள் போடுமுன் ஒரு ஸ்லைட் போடுகிறார்கள்.. அந்த ஸ்லைடில், “தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான வாக்கை கள்ள ஓட்டாக அடுத்தவன் போடு வது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்த்து, தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி ‘சர்கார்’ என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன். இதே கற்பனைக் ‘கரு’ ஒரு உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் உதித்தது. எனக்கு முன்பே எங்களது தென்னிந்திய திரைபட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதே கருவை அவரும் சிந்தித்து எனக்கு முன்பே பதிவு செய்திருந்தபடியால் வளர்ந்து வரும் உதவி இயக்குநர் வருண் என்கிற ராஜேந் திரனை பாராட்டி, அவர் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில், இதை பதிவு செய்து ஊக்குவிக் கிறேன். திறமையுள்ள ஒரு சக உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றிருந்தது.

இப்படி ஒரு கார்டு போட காரணமாக இருந்த கள்ள ஓட்டு சமாச்சாரம் குறித்து பல பேர் பல வடிவங் களில் பதிவு செய்து இருக்கிறார்கள். ஒரு நண்பர் சொன்னது போல் ஆரம்ப காலத்தில் ஓட்டு என்பது மூன்று வகைப்படும். நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு. இன்றைக்கு இது நான்கு வகை யாக மாறியிருக்கிறது. நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு, இல்லாத ஓட்டு, போட விரும்பாத ஓட்டு. இதில் பின்னிரண்டை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு விஜய் என்னும் மாஸ் ஹீரோ-வை வைத்துக் கொண்டு பிழிந்தெடுக்க முயன்றிருக்கிறார் முருகதாஸ்..ஆனால் அதில் முழுக் கிணறை தாண்ட தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எடுத்துக் கொண்ட கதையென்னவோ துப்பாக்கி,கத்தி பாணியில் கொஞ்சம் சமூக அக்கறை உள்ள சமாச்சாரம்தான். அதாவது தேர்தலை வைத்து புழைப்பு நடத்தும் அரசியல்வாதி. அதே சமயம் தன் ஆள்காட்டி விரலில் போடப்படும் மையான ஓட்டு என்னும் வாக்கை விலைக்கு விற்கும் ஜனங்களையும் ,மக்கள் சக்தி என்றால் என்ன? அது வென்றாலென்னவாகும் என்று சொல்ல வந்திருக்கிறார். அதை ஆரம்பம் முதல் அட்டகாசமாக சொல்ல ஆரம்பித்து இண்டர்வெல்லில் ஒண்ணுக்கு போய் விட்டு வந்த பிறகு ஒரு வித சலிப்போடு கதையை நகர்த்தி போய் முடிக்கிறார்.

ஆனால் சமகால அரசியலில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை சகலருக்கும் புரியும் அடை மொழியோடு கொஞ்சம் ஓப்பனாக சொல்லியதற்கு ஏ.ஆர்.முருகதாஸையும் அதற்கு அனுமதித்த விஜய் & சன் பிக்சர்ஸ்ஐ பாராட்டியே தீர வேண்டும் . குறிப்பாக கோமலவள்ளியாகிய ‘பாப்பா’ அடைமொழியுடன் வில்லித்தனம் செய்யும் வரலஷ்மி, ஆளும் அரசியலில் கோலோச்சும் இரட்டையர்களில் அந்த நம்பர் டூ (ராதாரவி)வின் கேரக்டர் எல்லாம் செம.

கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு அமர்களம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் மட்டும் தனிக் கவனத்தை ஏற்படுத்தியது. மற்ற பாடல்கள் கதை ஓட்டத்தை தடை செய்யும் விதத்தில் சொருகியதாலோ என்னவோ ஒட்டவில்லை. ஆனால் பின்னணி இசை படத்திற்கு ரொம்ப யூஸ்புல்லா இருந்தது.

மொத்தத்தில் விஜய் என்னும் மந்திரவாதியை வைத்து என்ன வித்தைக் காட்டினாலும் ரசிக்கலாம் தான். ஆனால் அவரை நிறைய பேச வைத்து வித்தை காட்டுவது குறைந்து விட்டதால் மேஜிக் ஷோ முழு திருப்தி தரவில்லை|

மார்க் 2.5 / 5