காற்றின் மொழி’ திரைப்பட படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் ராதா மோகன் – ஜோதிகா கூட்டணி ஏற்கனவே ‘மொழி’ என்ற  வெற்றிப் படத்தை கொடுத்திருந்த நிலையில் ஜோதிகா கதாநாயகியாக நடித்து அதே ராதா மோகன் இயக்கி வந்த ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

36 வயதினிலே மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா, தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் உள்ளிட்ட கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களிலேயே நடித்து வருகிறார். ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ திரைப்படமும் அதே பாணியில் உருவாகிவருகிறது. இது பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும். ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்க, இவர்களுடன் லக்‌ஷ்மி மஞ்சு, மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், உமா பத்மநாபன், குமரவேல், மோகன் ராமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்தை போப்ட்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடேட் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஜி.தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

காற்றின் மொழி ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்து விடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காகப் படத்தில் நடிக்கும் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் மொத்தமாக கால்ஷீட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் பத்து நாள்களுக்கு முன்பாகவே படக்குழு படப்பிடிப்பை முடித்துள்ளது. இறுதி நாள் படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் உணர்ச்சிபூர்வமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அது முடிந்ததும் இரவு 1 மணிக்கு படக்குழுவினர் கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பை போலவே இறுதிக்கட்டப் பணிகளும் முழுவீச்சில் நடைபெறவுள்ளது. ஆன்லைன் எடிட்டிங் மூலம் காட்சிகள் படமாக்கப்படும் போதே படத்தொகுப்பு பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆகஸ்ட் 6ஆம் தேதி டப்பிங் பணிகள் தொடங்க உள்ளன. படத்தொகுப்பு நிறைவடைந்த உடன் மிக்ஸிங் பணிகள் நடைபெறும். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க உள்ளனர். செப்டம்பர் மாதம் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.