இயக்குநர் சி.வி ராஜேந்திரன் காலமானார்-

இளமை இயக்குநர் என்றும் இவரைக் குறிப்பிடுவதுண்டு. பிரபல இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். போதிய பயிற்சிக்குப் பின் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு அதில் வெற்றி நடை போட்டவர்.

முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம். இப்படம் 1967-இல் வெளிவந்தது. செங்கல்பட்டின் அருகிலுள்ள ”சித்தமூர்” என்ற சிறிய கிராமமே இவரது சொந்த ஊர். இயக்குநர் ஸ்ரீதருக்கும் இதுவேதான் சொந்த ஊர். ஸ்ரீதர் இவரது அத்தை மகன். இயக்குநராவதற்கு முன் திருவள்ளூரிலுள்ள அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். அரசுத் தேர்வாணையம் நடத்திய தேரிவிலும் கலந்துகொண்டு அதிலும் வெற்றிபெற்றார். இந்த நேரத்தில் வேலைக்கான காலக்கெடு முடிந்துவிட கொஞ்ச நாட்கள் வேலையில்லாமல் இருந்தபோது ஸ்ரீதர் இவரைத் திரைத்துறைக்கு அழைத்தார். பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதிய அனுபவம் மட்டுமே இவருக்குத் தகுதி. எனினும் இதையே தகுதியாக ஏற்றுக்கொண்டு ஸ்ரீதர் இவரைத் தேர்வு செய்திருப்பார் போலும். ஆனால் ஸ்ரீதரின் எதிர்பார்ப்பிற்குக் குந்தகமின்றி பின்னாளில் பெரிய இயக்குநராகிவிட்டார் இவர்.

ஸ்ரீதரிடம் இருந்தபோது “மீண்ட சொர்க்கம்”, “கலைக்கோவில்”, “கொடி மலர்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “நெஞ்சிருக்கும் வரை” போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். ”காதலிக்க நேரமில்லை” படத்தின் போது அசோஸியேட் டைரக்டரானார். “அனுபவம் புதுமை” படத்தில் தான் முதன்முதலாக ஸ்லோமோஷன் காட்சிகளை அமைத்தவர் இவர். ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா நடிக்க வைத்து இவர் இயக்கிய “நில் கவனி காதலி” என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பிரபல இயக்குநர் தாபி.சாணக்யா இயக்கத்தில் விஜயா-வாஹினி தயாரிப்பில் “வாணி ராணி” படம் 5 ரீல்கள் முடிவடைந்திருந்த போது அவர் திடீர் மரணமடைந்தபோது அப்படத்தினை இயக்கிக் கொடுத்தவர் இவர்.

கே.பாலாஜியின் மிகப் பெரிய வெற்றிப் படமான “ராஜா”, “நீதி”, “உனக்காக நான்”, “என் மகன்” போன்ற படங்களையும் இயக்கியவர். அதுபோல் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் “கலாட்டா கல்யாணம்”, “சுமதி என் சுந்தரி”, சிவாஜி, ஸ்ரீதேவி, பிரபு, ராதா நடித்த “சந்திப்பு”, ஆகிய படங்களை இயக்கினார். இம்மூன்றுமே வெற்றிப்படங்கள். மொத்தமாக 60 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான்கு படங்கள் சம்பளமே வாங்காமல் இயக்கியவை. அதற்குக் காரணம் தாம் தொடர்ந்து படங்களை இயக்கமுடியும் என்ற நம்பிக்கையினாலே என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் வெளிவந்த “சங்கிலி” என்ற திரைப்படத்தில் தான் இளைய திலகம் பிரபுவை அறிமுகம் செய்தார்.

1993-லிருந்து 4 வருடங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சிவாஜி கணேசனை தனது சொந்தப் படமான “ஒன்ஸ்மோர்” படத்தில் நடிக்க வைத்தார். இப்படத்தில் விஜய், சரோஜாதேவி, மணிவண்ணன், சிம்ரன் ஆகியோரும் நடித்திருந்தனர். இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஜெய்சங்கர், லக்ஷ்மி, நாகேஷ், ஆர்.முத்துராமன் நடித்த “வீட்டுக்கு வீடு” ஒரு நகைச்சுவைப் படம். இப்படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவை சிவாஜி புரடக்‌ஷன்ஸ் தயாரித்த “கலாட்டா கல்யாணம்” படத்தில்தான் முதன் முறையாக சிவாஜிகணேசனுடன் இணைந்து நடிக்க வைத்தார். அதனால் சிவாஜியை உயரத்தில் நிறுத்தி, கீழிருந்து பல படிகள் ஏறி அவரைச் சென்றடைவது போன்று ஒரு பாட்டு வைத்திருப்பார். அந்தப் பாட்டு தான் “நல்ல இடம் நீ வந்த இடம்” என்று ஆரம்பிக்கும். அதாவது இத்தனைப் படிகள் நீ ஏறி வந்திருந்தாலும் ‘நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய்’ என்று சொல்லும் பாட்டு. இதை அந்தக் காலத்தில் ரசிகர்கள் புரிந்துகொண்டு ரசித்தார்கள். புதுமையான கதைகளை இயக்கிக் கொண்டிருந்தவர் இவர்.

இந்தியில் “ஆராதனா” என்ற பெயரில் வெளியாகி பாடல்களுக்காகவே பெரும் வெற்றி பெற்ற “ஆராதனா”வைத்தான் “சிவகாமியின் செல்வன்” என்ற பெயரில் இயக்கினார். இந்தியில் “ருப் தேரா மஸ்தானா” பாட்டில் ரசிகர்கள் மயங்கினார்கள் என்றால் தமிழில் ‘எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது” பாட்டில் கிறங்கிப் போனார்கள் ரசிகர்கள். இவரது 32 படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விசுவநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தொலைக்காட்சிகளில் பல தொடர்களையும் இயக்கியிருக்கின்றார். முதன் முதலாக நா.பார்த்தசாரதியின் “குறிஞ்சி மலர்”’ தொடரை இயக்கினார். இத்தொடரில் கதாநாயகனாக நடித்தவர் மு.க.ஸ்டாலின். இவர் இயக்கிய “கோகிலா எங்கே போகிறாள்” இன்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது இவருக்குக் கிடைத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது “கலைமாமணி’’ விருது கொடுத்து கௌரவித்தார்.

இவருக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் என்ற இரு வாரிசுகளும் உள்ளனர்.