65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள்!

0
429

மத்திய அரசால் சினிமாப் படங்களுக்கு வழங்கப்படும்    65-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை தில்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘டு லெட் ‘ தேர்வாகியுள்ளது. சிறந்த திரைப்பட பின்னணி இசை, பாடல் இசைமைப்புக்கான இரு விருதுகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த பின்னணி பாடகருக்கான விருது க்கு கே.ஜே. ஜேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதுக்கு மறைந்த ஹிந்தி நடிகர் வினோத் கன்னாவும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் தேர்வாகியுள்ளனர். இந்த முறை தமிழப் திரைப்படத் துறைக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் தலைமையில் தேசிய திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஆராதனா பிரதான், உஷா கிரன் கான், அனந்த் விஜய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, 2017-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை வெளியிட்டனர். அதில் தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக அசாமி மொழியில் வெளியான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ தேர்வாகியுள்ளது.

மறைவுக்குப் பிறகு ஸ்ரீதேவிக்கு விருது: சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு நடிகை ஸ்ரீதேவி தேர்வாகியுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘மாம்’ ஹந்தி திரைப்படத்திற்காக இந்த விருது அவரது மறைவுக்குப் பிறகு கிடைத்து  உள்ளது.  ரவி உத்யவார் இயக்கிய இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். சிறந்த நடிகருக்கான விருது ‘நகர் கிர்தன்’ பெங்காலி படத்தில் நடித்த ரித்தி சென்னுக்கு கிடைத்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருது: சிறந்த இயக்குநர் விருது மற்றும் சிறந்த திரைக்கதை (தழுவல்) எழுதியதற்கான விருது ‘பயநாகம்’ மலையாள மொழி படத்திற்காக இயக்குநர் ஜெயராஜுக்கு கிடைத்துள்ளது. க்ரைம் த்ரில் கதையம்சம் கொண்ட ‘மாம்’ திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர். ரஹ்மான், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதுக்கும், தமிழிலில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் சிறந்த பாடல் இசை அமைத்ததற்கான தேசிய விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘காற்று வெளியிடை’ படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் நான்கு பாடல்களை வைரமுத்துவும், 1 பாடலை மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர்.

ஏற்கெனவே, ‘ரோஜா’, ‘மின்சாரக் கனவு’, ‘லகான்’ , ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய படங்களுக்காக ஏ.ஆர். ரஹ்மான் தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது, இரு விருதுகள் பெறுவதன் மூலம் ஆறு முறை தேசிய விருது பெறும் இசையமைப்பாளர் என்ற கௌரவத்தைப் பெற்றவராகிறார்.

டு லெட் தேர்வு: பிராந்திய மொழிப் படங்களைப் பொருத்தமட்டில், ‘டு லெட்’ தமிழ்ப் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் உருவான இப்படம், 30 நாள்களில் வாடகைக்கு வீடு தேடி குழந்தையுடன் அலையும் இளம் தம்பதியினரின் குடும்பச் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை மையப்படுத்திய கதைக் களத்தில் மனை வணிக வளர்ச்சி, அதன் காரணமாக நடுத்தர குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என தற்கால யதார்த்த நிலையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே உள்நாடு, வெளிநாடுகளில் பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் இப்படம் திரைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை இயக்கிய செழியன், ஏற்கெனவே ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘ பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ‘விஸ்வசபூர்வம் மன்சூர்’ எனும் படத்தில், ‘போய் மறஞ்ச காலம்’ எனும் பாடலைப் பாடியதற்காக கே.ஜே. ஜேசுதாஸுக்கும், சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் ‘வான் வருவான்…’ பாடலைப் பாடியதற்காக ஷஷா திரிபாதிக்கும் கிடைத்துள்ளது. இவர் முதல் முறையாக தேசிய விருது பெறுவது குறிப்பிடத்தக்கது. யேஜுதாஸுக்கு இது எட்டாவது தேசிய விருதாகும்.

சிறந்த குழந்தை கலைஞருக்கான விருது ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ அசாமி திரைப்படத்தில் நடித்த பனிதா தாஸுக்கும், சிறந்த பிரபல படத்திற்கான விருதும், சிறந்த சிறப்பு எஃபக்ஸ்ட்ஸுக்கான விருதும் ‘பாகுபலி 2’ படத்திற்கு கிடைத்துள்ளது.

அதிக விருதுகள்: மலையாள மொழி திரைப்படக் கலைஞர்கள் இம்முறை அதிக விருதுகளைப் பெற்றுள்ளனர். ‘ தொன்டிமுத்தலம் த்ரிக்சக்ஷியம்’ படத்தில் நடித்த ஃபதத் ஃபாசில் சிறந்த துணை நடிகருக்கான விருதையும், சிறந்த திரைக்கதை எழுதியதற்கான விருது (மூலம்) சஞ்சீவ் பழூருக்கும் கிடைத்துள்ளது.

இந்த விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பேசுகையில், ‘ஹிந்தி திரைப்படத் துறையை விஞ்சும் அளவுக்கு பிராந்திய மொழிகளில் அற்புதமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பாராட்டத்தக்க வகையில் கடின உழைப்பை வழங்கி நல்ல பல திரைப்படங்களை படைப்பாளிகள் உருவாக்கியுள்ளனர்’ என்று பாராட்டினார்.