சொதப்பலில் முடிந்ததா மலேசியா ஸ்டார் விழா…!? 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் உட்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.  வழக்கம்போல நடிகர்கள் அஜீத், விஜய், சிம்பு,  சந்தானம், ஜெய் உட்பட சிலர் கலந்து கொள்ளவில்லை.

நட்சத்திர ஆடல் பாடல் விழாவுக்கு முன்னதாக நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. விழா நடந்த புக்கிஜாலி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அமரலாம். ஆனால், கிரிக்கெட் போட்டிகளின்போது பெரும்பாலான கேலரிகளும் ரசிகர்கள் இல்லாமல் காலியாகவே இருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் இருவரும் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்த பிறகு ஒன்றாக கலந்து கொண்ட முதல் சினிமா விழா என்பதால் கண்டிப்பாக அரசியல் ஏதாவது பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதேபோல, பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஒன்றாக ஒரே இடத்தில் கூடி விழா நடத்துவது என்பதால் விழா அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே ரஜினி, கமல் விழா அரங்கிற்கு அழைத்து வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி இருவரும் அந்த மைதானத்திற்கு சொகுசு ஹெலிகாப்டரில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் வந்த ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தபடி இறங்கியபோது மைதானத்தில் இருந்த காலரியின் 90 சதவீத பகுதிகள் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டதை கண்டு இருவருமே கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம், விழா நடத்தியவர்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியிருந்தது மிக முக்கிய காரணம். அதோடு, ஆடல் பாடலுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த நடிகைகள், நடிகர்கள் யாரும் அந்த விழாவில் நிகழ்ச்சியில் பங்கு பெறாதது மிக முக்கியம்.

சாதாரணமாக ஒரு நிறுவனம் விருது வழங்கும் விழாவோ அல்லது கலை நிகழ்ச்சியோ நடத்தினால் எந்த அளவுக்கு நிகழ்ச்சிகள் இருக்குமோ அந்தளவுக்குக் கூட நிகழ்ச்சிகளின் தரம் இல்லை என்கிறது அங்கே சென்று திரும்பிய சினிமா பிரபல வட்டாரம்.

மொத்தத்தில் நிகழ்ச்சி பெரும் சொதப்பலில் முடிந்தாலும் நடிகர் சங்கம் எதிர்பார்த்ததை விட நிதி மட்டும் விளம்பர நிறுவனங்களில் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதன் முதல்படியாக சென்னையில் உள்ள பிரமாண்டமான துணிக்கடை நிறுவனம் விழா மேடையிலேயே இரண்டரை கோடி ரூபாய்க்கான் காசோலையை கொடுத்தது. அந்த காசோலையை ரஜினியும், கமலும் இணைந்து வந்து வாங்கிக் கொண்டார்கள்.

இது தவிர அந்த துணிக்கடை நிறுவனம்தான் நடிகர் சங்க நிர்வாகிகளின் போக்குவரத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

ஏராளமான விளம்பர நிறுவனங்கள் ஸ்டார் விழாவுக்கு பெருமளவு நிதி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது. சில நிறுவனங்கள் பணமும் அளித்திருக்கிறது. பல நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். நட்சத்திர கிரிக்கெட் போட்டியையும், ஸ்டார் கலை நிகழ்ச்சியையும் ஒளிபரப்பும் உரிமையை ஒரு தனியார் சேனல் பெருந்தொகைக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது.

ஆனால், கலை நிகழ்ச்சிகளில் பெரும் சொதப்பலும், பெரிய அளவில் ஆடல் பாடல் இல்லாததால் போட்ட ஒப்பந்தத்தின்படி அந்த தனியார் சேனல் பேசிய பணத்தை கொடுப்பார்களா என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

மலேசியாவில் கால் வைத்த நிமிடத்தில் இருந்து விழா முடியும்வரை நடிகர் சங்க செயலாளர் விஷால் கடும் டென்ஷனிலேயே இருந்ததாக அவரோடு பயணித்தவர்களே வருத்தப்படுகிறார்கள். இந்த டென்ஷனுக்கு காரணமே… சென்னையில் இருந்து புறப்பட்டு போய் மலேசியாவில் இறங்கிய சங்க உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்குமே சொன்னபடி அங்கே எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லையாம்.

அதைப்போல விழா நிகழ்ச்சிகளிலும் பல சொதப்பல்கள் இருந்ததாலும், ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்த்தபடி வராததாலும், விளையாட்டு நடக்கும்போது நடிகர் ஆரி காலில் காயம் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது என பல சம்பவங்களால் பரபரப்பாக முடியவேண்டிய நட்சத்திர விழா ரொம்ப சாதாரணமாக முடிந்திருக்கிறது.

இதற்கு முன்பு நடிகர் சங்கம் பெரும் கடனில் இருந்தபோது அப்போது விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது அவர் தலைமையில் இதேபோல ஒரு நட்சத்திர கலை விழாவை மலேசியாவில் நடத்தி நிதி திரட்டினார். அப்போது விழா அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது, எதிர்பார்த்ததை விட நிதி திரண்டு நடிகர் சங்க கடனையும் விஜயகாந்த் அடைத்து சங்கத்தில் நிதியை மிச்சம் வைத்தார்.

இப்போது நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது நிர்வாகம் இருக்கும்போதே நடிகர் சங்கத்தை கட்டி அதில் இருந்து ஒரு பெரும் வருமானத்தை நிரந்தரமாக வரும்படி செய்து விட வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் இந்த மலேசியா நட்சத்திர விழா. ஆனால் இது சொதப்பலில் முடிந்தது சோகம்தான்.

கோடங்கி