சிவாஜி மணி மண்டப விழாவில் ஓ பி எஸ் , ரஜினி, கமல் பேச்சு முழு விபரம்!

சிவாஜி மணிமண்டபத்தை திறந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, “புரட்சித்தலைவி அம்மா, சென்னை, அடையாறில் நடிகர் திலகத்துக்கு மணி மண்டபம் அமைக்க 2.80 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் உத்தரவிட்டார். அம்மாவின் ஆணைக்கிணங்க, மணிமண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்ததையடுத்து, நடிகர் திலகத்தின் பிறந்தநாளில் மணிமண்டபம் திறப்பு விழா நடத்தப்படுவது, அவருடைய புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக அமையும் எனும் உயர்ந்த எண்ணத்தோடு, அவரது பிறந்த நாளான 01.10.2017 அன்று தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா நடத்திட முதல்- அமைச்சர் உத்தரவிட்டார். திரைப்பட உலகம் பெருமை கொள்ளும் வகையிலும், மேலும் வளர்ச்சி அடைய பல்வேறு சலுகைகளை அளித்து, தமிழ்த் திரைப்படத்தொழில் நிலைத்து நின்று எழுச்சி பெற வழிவகுத்தவர் புரட்சித் தலைவி அம்மா.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு ரூ.10 கோடி மானியமாக வழங்கி இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை இந்தியாவிலேயே முதன் முதலாக, தமிழ்நாடு அரசின் சார்பில் 2013 ஆம் ஆண்டு சென்னையில் மிகச் சிறப்புடன் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவரும் புரட்சித்தலைவி அம்மா தான்.

தரமான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கவும், புதிய திறமையாளர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டு தங்கள் திறமையினை வெளிப்படுத்த ஏதுவாகவும், குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை 1993 ஆம் ஆண்டு 2 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாகவும், 2004 ஆம் ஆண்டு அதனை மீண்டும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்ச ரூபாயாகவும் உயர்த்தி, திரை உலகை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியவர் புரட்சித்தலைவி அம்மா.

பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ராஜா சாண்டோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன் ஆகிய அரும்பெரும் கலைஞர்களின் பெயர்களில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலைத் துறை வித்தகர் விருதுகள் வழங்கி வந்த நிலையில், அம்மா, நடிகர் திலகத்தின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் “நடிகர் திலகம் சிவாஜி விருதினை” அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், சமூகப் பொறுப்புடன் தரமாக சிறிய முதலீட்டில், திரைப்படங்களை தயாரித்து வெளியிடுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலான மானியம் மற்றும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரிக்கும், சிறந்த குறும் படங்களுக்கான விருதுகள், ஆகியவற்றை விரைந்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புரட்சித் தலைவி அம்மா ஆணையிட்டதுடன், “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், விரைவில் மிகப்பெரிய விழா எடுத்து வழங்கப்படும்” என்று சட்டப்பேரவையிலும் அறிவித்தார்.

அம்மாவின் ஆணைக்கிணங்க, 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகையர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரை “திரைப்பட விருதுகள்” பெற தேர்வு செய்தும், 2007 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டிற்கான திரைப்பட மானியம் பெறுவதற்கான தமிழ்த் திரைப்படங்களை தேர்வு செய்தும், 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த தொடர்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரை “சின்னத்திரை விருதுகளுக்கு” தேர்வு செய்தும், 2008-09 முதல் 2013-14 ஆம் ஆண்டு வரையிலான எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்திட்ட குறும்படங்களுக்கு “குறும்பட விருதுகள்” பெற தகுதியானவர்களைத் தேர்வு செய்தும், அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்திடும் வகையிலும் தமிழ்த் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் உற்சாகமும், உத்வேகமும் பெறுகின்ற வகையிலும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து விருதுகளும், சென்னையில் சிறப்பான முறையில் விழாவெடுத்து, மிக விரைவில் வழங்கப்படும். இவ்வளவு பெருமைமிக்க நடிகர் திலகத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, அவரது புகழ் நாடெங்கும் பரவிடும் வகையில் நடிகர் திலகத்தின் மணிமண்டபம் திறப்பு விழா புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசிகளுடன், சீரோடும் சிறப்போடும் அம்மாவின் அரசின் சார்பில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொண்டு, நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தினை திறந்து வைப்பதில் அந்த குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உணர்வோடு மகிழ்ச்சி அடைகிறேன்.நடிகர் திலகத்தின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நின்று தமிழகத்திற்கு மட்டுமல்ல அகில உலக திரையுலகத்திற்கும் பெருமை சேர்க்கும் என்று கூறி, எனது உரையை நிறைவு செய்கிறேன்” என்றார்.

விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது, “ஓ.பி.எஸ். ரொம்ப அதிர்ஷ்டசாலி அது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது.
இப்படித்தான் நடிக்க வேண்டும். இப்படித்தான் வசனம் பேசவேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பு, வசன உச்சரிப்பில், நடையில், பாவைனையில் ஒரு புரட்சியையே உண்டாக்கிய அவரை தமிழ் ரசிகர்கள் மட்டும் ரசிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள நடிகர்களும் இந்த மாதிரி ஒரு நடிகரை பார்க்க முடியாது, அப்படி நடிக்கவும் முடியாது என்று சொல்லி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகர் சிவாஜி.

அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினார்களா? சிலை வைத்தார்களா? நடிகராக மட்டும் இருந்திருந்தால் மணிமண்டபம் கட்டியிருக்க மாட்டார்கள். அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி. ஏன் அவருக்கென்று மணிமண்டபம், ஏன் அவருக்கென்று சிலை என்று சொன்னால் நடிப்பு துறையில் இருந்து, அவரது நடிப்பு ஆற்றலில் இருந்து சுதந்திரத்துக்கு பாடுபட்ட வரலாற்று நாயகர்களையும், அவர்களுடைய வரலாற்றை யும் படமாக்கி அவர்களின் கதையை தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சென்று சேர்த்தவர்.சிவபுராணம், கந்த புராணம், போன்ற படங் களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த் தவர். அதனால் தான் அவருக்கென்று இந்த மணி மண்டபம்.

கடவுள் மறுப்பு கொள்கை உச்சத்தில் இருந்த போது நெற்றியில் விபூதிபோட்டு தன்னுடைய நடிப்பு ஆற்றலை மட்டுமே நம்பி உச்சத்தை தொட்டார் சிவாஜி. அதற்காக இந்த மணிமண்டபம்.நாம் இறந்த பிறகு மண்ணுடன் மண்ணாய் செல்வதை பார்க்கிறோம். இறந்த பிறகு சாம்பலாவதை பார்க்கிறோம். ஆனால் பல கோடியில் ஒருவர் தான் இறந்த பிறகு சிலையாக போவார்கள். அவரவர் வீட்டில் சிலை வைத்துக் கொள்ளலாம். அது இல்லை. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிலை. அப்படிப்பட்ட ஒரு மகானுடன் நாம் பழகி இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை.

இது அரசியல், சினிமா துறை இரண்டும் கலந்த ஒரு விழா. சிவாஜி நடிப்பில் மட்டும் இல்லை அரசியலிலும் அவர் அவரது ஜூனியர்களுக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்து விட்டு சென் றிருக்கிறார். அவர் அரசியலில் நின்று அவரது தொகுதி யிலேயே தோற்றுபோய் விட்டார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதில் ஒரு செய்தி சொல்லிவிட்டு போயிருக்கிறார். அரசியலில் இருந்து வெற்றியடைய வேண்டும் என்றால் சினிமா, பெயர், புகழ், செல்வாக்கு இருந்தால் மட்டும் போதாது. அதற்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது. அது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன். தெரிந்தாலும் எனக்கு சொல்ல மாட்டார். ஒரு வேளை 2 மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ?

இல்லண்ணே. நீங்கள் திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்ட சொல்லணும். சொல்லுங்க. நான் திரை யுலகில் உங்களுக்கு தம்பி என்று சொன்னால் என்கூட வா சொல்கிறேன் என்கிறார்.இது ஒரு அருமையான விழா. இந்த மணி மண்டபத்தை கட்டிக்கொடுத்த அமரர் புரட்சித்தலைவிக்கு திரையுலகம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு அந்த சிலையை உருவாக்குவதற்கு காரணமான கலைஞருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர் களுக்கு நன்றி சொல்கிறேன். இந்த மணிமண்டபம் உருவாவதற்கும் சிலை உருவாவதற்கும் சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு ஆகியோரின் விடா முயற்சி தான் காரணம். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்”இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் கமல்ஹாசன் பேசிய  போது, “மாநில, தேசிய-ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் சிவாஜி. ஒருவேளை நான் சினிமாவுக்கு நடிக்க வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன். அப்படி பார்த்தாலும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளே வர அனுமதி கிடைக்காவிட்டாலும், வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஆக இந்த விழாவுக்கு எப்படியும் நான் வந்திருப்பேன். யார் தடுத்தாலும் வந்திருப்பேன். அரசியல் எல்லை, தேசிய-ஆசிய எல்லையெல்லாம் கடந்த இந்த நடிகருக்கு அரசு சொல்லும் நன்றி அறிவிப்பு என்று தான் நான் கருதுகிறேன். நம் வாழ்க்கையை மேம்படுத்திய அவரது கலைக்கு நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் நன்றி அறிவிப்பு இது.

பிரபு பேசும்போது எத்தனை முதல்வர்கள் மரியாதை செய்வதற்கு முன் வந்தார்கள் என்பதை பெயர் பட்டியலிட்டு குறிப்பிட்டார். நான் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தாக வேண்டும். மதிப்பார்கள் என்பது உறுதி.

அதற்கு யாரையும் நாம் வற்புறுத்தியோ, கிள்ளியோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னால் நடக்கும். தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். எப்போதும் இந்த கலைஞனை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர் அடியொற்றி தவழ்ந்த குழந்தைகளில் நானும் ஒருவன். பிறகு அதே நடையில் நடக்க வேண்டும் என்று முயன்று தடுமாறிய பல்லாயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன். அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக மட்டுமே இங்கு எனது தன்நிலை மறந்து, என்நிலை மறந்து நான் ஒரு கலை ரசிகன் என்கிற முறையில் வந்திருக்கிறேன்.

எத்தனையோ நடிகர்கள் பேசிப்பேசி பார்த்து தோற்றவர்கள். பேசித் தோற்றவர்கள் என்று சொல்லும் போதெல்லாம் என்னைச் சொல்வது போலவே எனக்கு தோன்றும். இன்றும் முயன்று கொண்டிருக்கிறோம். அதுபோல் நடிக்க வேண்டும் என்று, அதுதான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நடிகர் திலகத்துக்கு நன்றி சொல்ல இங்கு வந்திருக்கிறேன். அதற்கு அனுமதி அளித்த கலை உலகிற்கும், அரசிற்கும், அரசியலுக்கும் நன்றி” என்று அவர் பேசினார்.