அப்பல்லோ மர்மம் பற்றி இனி அப்படியே மறந்து விடுவார்கள் – டி. ராஜேந்தர் வேதனை!

சிம்புவின் ‘சரஸுடு’ பட ரிலீஸ் வேளைகளில் ஆந்திரா, தமிழ்நாடு என பரபரப்பாக இருக்கிறார் டி.ராஜேந்தர்.. ஆம்.. பாண்டிராஜின் டைரக்சனில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த ‘இது நம்ம ஆளு’ படம் தான் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற பெயரில் வரும் செப்-15ல் ரிலீஸாக இருக்கிறது. அதற்காக தமிழ்ப்படத்தை அப்படியே டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள் என நினைத்துவிடவேண்டாம். இந்தப்படம் உருவாகும்போதே தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகி வந்தது.. இங்கே தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகள், தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கப்பட்டுள்ளன..

அதுமட்டுமல்ல, தமிழில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்த சிம்பு எழுதிய பாடல் ஒன்றை, டி.ராஜேந்தர் சுந்தர தெலுங்கில் எழுதியுள்ளார். ‘முன்ன மன்மதா.. நின்ன வல்லபா.. நேனு சரஸுடு” என சிம்புவின் ஹிட் படங்களின் பெயர்கள் எல்லாம் அந்தப்பாட்டில் இடம்பெறுகின்ற னவாம். இந்தப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தெலுங்கு படமான இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விளக்கு அளித்துள்ளன. இந்தப்படத்தை முதன்முறையாக ஆந்திரா முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறார் டி.ராஜேந்தர்.

இந்தப்படத்தின் புரமோஷனுக்காக நேற்று ஹைதராபாத்தில் முகாமிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், இன்று சென்னையிலும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.. இந்த சந்திப்பின்போது மேற்கூறிய சிம்புவின் ‘சரஸுடு’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட டி.ராஜேந்தர், அப்படியே அனிதா தற்கொலை விவகாரம், நீட் தேர்வு, அதிமுக பொதுக்குழு என அரசியல் பக்கம் திரும்பி அனல் பறக்கும் கருத்துக்களையும் தெரிவித்தார்.

காவிரி பிரச்சனை, ஜி.எஸ்.டி என தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளில் மத்திய அரசை வலுவாக எதிர்த்த வீராங்கனை தான் அம்மா (ஜெயலலிதா). அப்படித்தான் அவர் இருக்கும் வரை நீட் தேர்வை தமிழ்நாட்டு பக்கம் அனுமதிக்கவில்லை.. காரணம் இப்படி அனிதா போல ஒரு மாணவி தனது உயிரை இழந்துவிட கூடாது என்பதற்காக.. அடித்தட்டுமக்கள், ஏழை மக்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக, கனவாக போய்விடும் என்பதால் தான் தொடர்ந்து நீட்டை எதிர்த்தார்… அது அம்மா ஆட்சி..

ஆனால் இன்று நீட்டின இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு ஆட்சி நடத்துகிறார்கள்.. இது அம்மாவை ஏமாத்துகின்ற சும்மா ஆட்சி.. யாராலோ ஆட்டுவிக்கப்படும் பொம்மை ஆட்சி.. கிட்டத்தட்ட 88 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக்கொண்டு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் இதை வலுவாக எதிர்க்கவில்லை.. நீட் தேர்வை அனுமதிக்க ஏன் கையெழுத்து போட்டீர்கள் என மு.க.ஸ்டாலினால் தைரியமாக கேட்க முடியவில்லையே ஏன்..? ஏனென்றால் இரண்டு கட்சிகளின் தலைக்குமேலும் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது.

மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் இதெல்லாம் தமிழகத்திற்குள் வர காரனமானவர்கள் தான் இன்று, நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மங்கலம் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.. நீட் தேர்வை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டவர்கள் தான் தமிழகத்திற்கு மட்டும் விளக்கு கேட்பதைக் நாடகமாடுகிறார்கள்.

இந்த போலியான அரசியல்வாதிகளை மக்கள் நம்பவில்லை. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு எல்லாவற்றிலும் மாணவர்களும், இளைஞர்களும் தான் களமிறங்கி போராடுகிறார்கள். நான் மோடி அரசை குறை சொல்லவில்லை.. இங்கே உள்ளவர்கள் ஏன் அவர்களுக்கு அர்ச்சனை செய்து, பூஜை செய்து சேவிக்கிறார்கள்..? மடியில் கனம் இருப்பதால் தானே..?

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தபோது அது அவர்களின் உட்கட்சி விவாகரம் என்பதால் அதை நான் எதிர்க்கவில்லை.. ஆனால் அதே சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டபோது அது வேண்டாம், அந்தம்மா ஆக முடியாது, இது அவரை சிக்க வைக்கும் சூழ்ச்சி என முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.. அதை கேட்டிருந்தால் இருந்திருக்கலாம் குளுகுளு அறையில்.. கேட்காததால் இன்று அந்தம்மா இருக்கிறார் சிறையில்.

இப்போது பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் போட்டார்களே, அதில் அம்மாவை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து அவர் மரணத்தை தழுவிய நாள் வரை என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்போம் என தீர்மானம் போடவில்லையே.. இதற்காக கமிஷன் அமைக்க வேண்டும், உண்ணாவிரதம் இருப்பேன் என சொன்ன ஓ.பி.எஸ் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டார். அப்பல்லோ மர்மம் பற்றி இனி அப்படியே மறந்துவிடுவார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை ஏன் தீர்மானம் இயற்றவில்லை.. அதேசமயம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா இருந்த இடத்தில் வேறு யாரும் பொதுச்செயலாளராக இருக்க தகுதியானவர் இல்லை என தீர்மானம் போட்டார்களே .. அது ஒன்றுதான் உண்மை.

பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிராக குரல் கொடுத்த மகளிர் அமைப்புகள் அனிதா விவகாரத்தில் வாய்மூடிக்கொண்டு இருப்பது ஏன்..? ஏனென்றால் பீப் விவகாரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது சிம்புவுக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை.. காஞ்சிபுரம் கோவிலுக்கெல்லாம் சென்று இறைவனின் துணையோடு தான் அதை ஜெயித்தேன்..

 

ரஜினி, கமல் எனது இனிய நண்பர்கள்.. அவர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம்.. ஜனநாய நாட்டில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அப்பா வருவேன், இப்ப வருவேன் என பில்டப் கொடுக்காமல் அதை உடனடியாக செய்யவேண்டும்..

 

மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வியும் நானும் நெருங்கிய நண்பர்கள்.. மணிரத்னமும் எனது நண்பர்தான். செப்-2ஆம் தேதி குருபெயர்ச்சி தினத்தன்று மணிரத்னம் தன்னை வந்து பார்க்க சொன்னதாக சிம்பு என்னிடம் சொன்னார்…. ரஜினி, கமல் என பெரிய நடிகர்களை வைத்து இயக்கியவர், ஆஸ்கர் விருது வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தியவர்  அந்தவகையில் இயக்குனர் மணிரத்னமும் குரு ஸ்தானத்தில் இருப்பவர் தான்.. உனக்கு சரியாக பட்டால் போய் பார்த்துவிட்டு வா.. என அனுப்பினேன்.. அதற்கப்புறம் நடந்த விஷயங்கள் எனக்கு இன்னும் அப்டேட் ஆகவில்லை.

 

இதோ மீண்டும் சரஸுடு’ பட வேலைகளுக்காக ஆந்திரா கிளம்புகிறேன்.. திரும்பிவந்ததும் நீட் உள்ளிட்ட பிரச்சனைகளில் எனது போராட்டத்தை துவங்குவேன் என கூறியபடி ஆந்திரா கிளம்பினார் டி.ராஜேந்தர்.