‘துப்பறிவாளன்’ தியேட்டர் வசூலில் விவசாயிகளுக்கு உதவி: விஷால் முடிவு

துப்பறிவாளன்’ வெளியாகியுள்ள திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம், விவசாயிகளுக்கு வழங்க விஷால் முடிவு செய்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘துப்பறிவாளன்’ தமிழகமெங்கும் இன்று (செப்டம்பர் 14) வெளியாகியுள்ளது. இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் நந்தகோபால் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில், ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் வசூலிக்கப்பட்டு விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார்.

அதன்படி, ‘துப்பறிவாளன் ‘ படத்தின் திரையரங்க வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

தமிழகமெங்கும் 350-க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘துப்பறிவாளன்’ திரையிடப்பட்டுள்ளது. அதில் எத்தனை காட்சிகள் திரையிடப்படவுள்ளதோ, அத்தனை காட்சிகளிலும் விற்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்து ஒரு ரூபாய் வசூலித்து விவசாயிகள் நலனுக்கு கொடுக்கப்படவுள்ளது.