விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

விக்ரமாதித்தன் வேதாளம் இதிகாசத்தை அட்டகாசமாக போலிஸ், ரௌடி கதையாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புதுமை தான் படத்தின் மிகப்பெரும்பலம். ஓரம்போ , குவாட்டர் கட்டிங் என்ற இரு படங்களுக்குப் பிறகு 7 வருட உழைப்பில் வந்திருக்கும் புஷ்கர் காய்த்திரியின் படம் விக்ரம் வேதா. படத்தின் ஒரு ஃபிரேம் கூட வீணாக்காமல் அத்தனை அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஒரு படத்தின் பாதி வெற்றி அந்தப்படத்தின் நடிகர்கள் தேர்வில் இருக்கிறது. மாதவன், விஜய் சேதுபதி மட்டுமல்லாது படத்தில் வரும் ஒவ்வொரு சிறு கதாப்பாத்திரமும் அழகாக தேர்ந்தெடுத்து கையாளப்பட்டிருக்கிறது.

தனக்கு சரியென்பதை துணிச்சலாக செய்யும் போலீஸ் அதிகாரி ஒரு ரௌடியை என்கவுண்டர் பண்ண அலைகிறார்கள். ரௌடி கூட்டதின் ஒரு என்கவுண்டருக்குப் பின் தானே போலிஸைத் தேடி வரும் ரௌடி பொலீஸ் மாதவனிடம் விளையாடும் வேதாள விளையாட்டுத்தான் விக்ரம் வேதா. சமீப காலத்தில் இத்தனை தெளிவாக, இவ்வளவு துல்லிய விவரங்களுடன் வந்திருக்கும் திரைக்கதை இது தான். விஜய் சேதுபதி சொல்லும் கதையும் அந்த கதையில் இருக்கும் விடுகதைக்கு மாதவன் விடை தேடி அலைவதும் அவ்வளவு அட்டகாசமாக வந்திருக்கிறது.

ஒரு போலிஸ், ரௌடி கதையாக அல்லாமல் நல்லவன், கெட்டவன் யார்?, நியாயம் தர்மம் எது ? போலிஸ் ரௌடிக்கு இடையிலான கோடு அழிந்து இருவருக்கும் இருக்கும் மனித உணர்வுகள் தான் முக்கியம் என்பதாய் மனதுக்குள் விவாதங்களை கிளப்புவதில் தான் இந்தப்படம் வேறு தளத்தை அடைந்திருக்கிறது.

மாதவனுக்கு இறுதிச்சுற்றுக்கு பிறகு இது அட்டகாசமான தேர்வு. அசால்டான போலீஸாக அறிமுகமாகி ஒவ்வொரு கதையை கண்டுபிடிக்கும் போதும் அவர் மாறும் மாற்றத்தில் அவர் நடிப்பு அபாரம். நம் உணர்வைகளை ஏந்தி வந்திருக்கிறார். விஜய் சேதுபதி வேதா எனும் ரௌடியாக பின்னியெடுக்கிறார். ஒரு கத சொல்லவா சார் எனும்போது தியேட்டர் அதிர்கிறது. பல இடங்களில் ரசிகர்களை ஆரவாரப்படித்துவது அவர் தான். வரலட்சுமி, கதிரும் தங்கள் பாத்திரங்களை அழுத்தமாக செய்திருக்கிறார்கள்.

வசனங்கள் ஒவ்வொன்றும் அற்புதம். வாலிருந்தா பூனையும் எலியும் ஒண்ணாயிடுமா? , எல்லோருக்கும் எமோசன்ஸ் ஒண்ணுதானே சார். எளிமையான வசனங்கள் மனதில் ஏற்படுத்த்தும் கேள்விகள் அதிகம்.

இசை அபாரம் படம் முழுதும் வரும் அந்த பின்னனி இசை வெளியில் வந்தும் காதை விட்டுப் போகவில்லை. கேமரா படத்தின் கலரை மனதுக்குள் செலுத்தி விடுகிறது. டெக்னிகலாக ஆர்ட், சவுண்ட் டிசைன் , கேரகடர் டிசைன் என அனைத்திலும் இந்தப்படம் புகுந்து விளையாடியிருக்கிறது. வித்தியாசமான படங்கள் வருவதற்கு இந்தப்படம் ஒரு அடித்தளம்.

விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

இந்தப்படத்தின் குறை என்பது பற்றி இப்போது சின்னதாய் சொல்லிவிடலாம்.

வாழ்வியல் புஷ்கர் காயத்திரியின் ஆரம்பத்தில் இருந்து இருக்கும் பிரச்சனை. அவர்கள் ஹாலிவுட்டில் படித்தவர்கள் அங்கே பொருந்திபோகும் கதைகள் தான் அவர்கள் ஸ்டைல்.

இந்தப்படத்தின் வாழ்வியல் நம் மண்ணோடு ஒத்துப்போவதில்லை. இந்தக்கதையை எந்த மாற்றமும் இல்லாமல் அமெரிக்காவில் எடுத்து வைத்து விடலாம். எதையும் எங்கேயும் மாற்றத் தேவையே இல்லை. திரைக்கதை சட்டத்திற்குள் மாட்டி எந்த நுண்னுனர்வு இல்லாது இருக்கும் கதாப்பத்திரங்கள். போலிஸ், வக்கீல பொண்டாட்டி சண்டைகள். விஸ்கியில் அறிமுகமாகும் காதல். வீட்டில் பைக் செட் வைத்திருக்கும் ஹீரோ. செவன் பட கிளைமாக்ஸில் வரும் வில்லன் அறிமுகம் இதில் வில்லன் அறிமுகமாக வந்திருக்கிறது. தம்பி இறந்த பிறகும் காமெடி செய்து சுத்தும் ரௌடி எப்படி சாத்தியம்? இப்படி நிறைய கேள்விகள் இருந்தாலும் தமிழில் வரும் படங்களில் மிக மிக முக்கியமான படைப்பு ” விக்ரம் வேதா”.

கதிரவன்