‘தரமணி’ படத்துக்கு A சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

இன்று வெளியாகியுள்ள தரமணி போஸ்டர்களில், தணிக்கைக் குழுவினரை ரொம்ப லாவகமாக குத்திக் காட்டியுள்ளனர். ஆம். ’கற்றது தமிழ்’ ராம் படைத்துள்ள  தரமணி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. காரணம் படத்தில் பெண் மதுவருந்துவது போல காட்சிகள் உள்ளதாம். இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்துவிட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா… ராம்தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன்தான் என்பேன்,” என்று பாராட்டினார்.

ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மதுவருந்தும் காட்சி உள்ளதாகக் கூறி ஏ சான்றுதான் தர முடியும் என்று கூற, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் இயக்குநர் ராம், “எந்தக் காட்சியையும் நீக்க முடியாது.. நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க,” என உறுதியாக நின்றிருக்கிறார்கள். இப்போது ஏ சான்றிதழுடன்தான் வெளியாகிறது தரமணி.

ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு யு அல்லது அதிகபட்சம் யு ஏதான் வழங்குகின்றனர்.இதைக் குறிப்பிட்டுதான் இன்று போஸ்டரில் ‘ஆண் ‘ரா’வாக மது அருந்தினால் யு/ஏ… பெண் ‘ரா’வாக அருந்தினால் ஏ! ஆக தரமணி ஏ! என்று குறிப்பிட்டுள்ளனர்.தரமணி படத்தை ராம் இயக்கியுள்ளார். இரு தேசிய விருதுகள் பெற்ற ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியாகிறது!

எக்ஸ்ட்ரா தகவல்:

இந்தப் படம் பற்றி இயக்குநர் ராம் சொன்ன தகவலிது:.

“தரமணி’ என்னுடைய மூன்றாவது படம். இது முழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய முதல் படம். காதலுக்கே உரிய கவிதை இதில் உண்டு. வயதைப் பொருட்படுத்தாத மாபெரும் இளமையும் உண்டு. அடிக்கடலில் நீச்சலிடும் சாகசமும் உண்டு. மலையில் இருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு. அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு. ஆண் – பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு. கடலினும் பெரிய காதலை இப்படி எல்லாவகையிலும் இந்த ஒரு கதைக்குள் முடிந்தவரை நிஜமாக வைத்திருக்கிறேன்.

அந்த நிஜம் உங்களுக்கு கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அந்த நிஜம் உங்களைக் காதல் வயப்படுத்தும். அந்த நிஜம் உங்களை நிச்சயமாக பயமுறுத்தும். ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், அந்த நிஜம் உங்களை நீங்கள் காதல் கொண்டவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லும், மன்றாடச் சொல்லும், முத்தம் கொடுக்கச் சொல்லும்.. கட்டிப் பிடித்துக் காமத்தைக் கடந்து போகச் சொல்லும். இதுவே தரமணி.