ஒரு திரைப்படத்தின் தலைப்பே அதன் மீதான ஆர்வத்தைத் தூண்டிவிடும். அந்த வகையில், ‘ஜான் டோ’ (John Doe) என்ற பெயரிலேயே சுவாரஸ்யத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது இந்தத் திரைப்படம். ஆங்கிலத் திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். பொதுவாக அடையாளம் கண்டறியப்படாத ஆண் நபரையோ, அடையாளம் தெரியாத உடலையோ குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பெயர்தான் ‘ஜான் டோ’. இந்தப் படத்தின் கதைக்களத்திற்கும் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
மதுமிதா எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் ஷோபு யார்லகட்டா தயாரித்துள்ளனர்.
இரண்டு விசாரணைகள்… ஒரு மர்மமான முடிச்சு!
கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கிராமத்திற்கு ஒரு குடும்பம் புதிதாகக் குடிபெயர்கிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் சிறுவன் ஒருநாள் திடீரென காணாமல் போகிறான். அவனைத் தேடி குடும்பத்தினர் ஒருபுறம் அலைந்து கொண்டிருக்க, அதே பகுதியில் ஏரிக்குள் கார் விழுந்து ஏற்படும் விபத்தில் உயிரிழக்கும் ஒரு சிறுவனின் அடையாளத்தைக் கண்டறிய கேரள எல்லைப் பகுதியில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி விசாரணையில் இறங்குகிறார்.
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெயர் என்ன? அவன் எந்த ஊரைச் சேர்ந்தவன்? அவனுடைய பின்னணி என்ன? என்ற கேள்விகளுடன் போலீஸ் அதிகாரி ஒருபுறம் விசாரணையைத் தொடர, காணாமல் போன சிறுவனைத் தேடும் முயற்சி மறுபுறம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு விசாரணைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இடத்தில் வரும் இடைவேளைக் காட்சி யாரும் எளிதில் கணிக்க முடியாத ஒரு திருப்பமாக அமைந்திருக்கிறது. அதற்குப் பிறகு இந்த வழக்கின் பின்னணியில் குழந்தைகளைக் குறிவைத்துத் தொடர்ந்து கொலைகள் செய்து வரும் ஒரு சைக்கோ கொலையாளி இருப்பது தெரியவருகிறது. அந்தக் கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலைகளைச் செய்கிறான்? என்பதைக் கண்டுபிடிக்கும் பயணமாகத் திரைக்கதை அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது.
திரைக்கதையும் இயக்கமும் – படத்தின் மிகப்பெரிய பலம்!
ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படத்திற்குத் தேவையான அடிப்படை அம்சங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் படத்தின் முதல் காட்சியிலிருந்தே ஒரு பரபரப்பான சூழலை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மதுமிதா.
இதுவரை உலக அளவில் வெளியாகியுள்ள பல்வேறு க்ரைம் மற்றும் சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களின் திரைக்கதை பாணியை நினைவுபடுத்தும் வகையில், கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது, ஒவ்வொரு காட்சியிலும் புதிய முடிச்சுகளை உருவாக்குவது, அவற்றுக்கான தடயங்களை ஆங்காங்கே விதைப்பது என மிகவும் கவனமாகத் திரைக்கதையைக் கையாண்டிருக்கிறார்.
ஒருபுறம் காணாமல் போன குழந்தையைத் தேடும் தாயின் தவிப்பு, அந்தக் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சினைகள், அக்கம் பக்கத்து வீடுகளில் கிடைக்கும் தடயங்கள் என உணர்வுபூர்வமான காட்சிகள் நகர்கின்றன. இன்னொரு புறம், விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத சிறுவனின் பின்னணியைத் தேடும் காவல்துறை விசாரணை விறுவிறுப்பாகச் செல்கிறது.

இந்த இரண்டு கதைக்களங்களையும் தனித்தனியாக நகர்த்தி, பின்னர் ஒன்றோடொன்று இணைக்கும் விதம் திரைக்கதைக்கு நல்ல பலத்தைக் கொடுத்திருக்கிறது. எந்த இடத்திலும் அதிகப்படியான குழப்பம் இல்லாமல், அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, இடைவேளைக் காட்சி படத்தின் மிகப்பெரிய பலம். அதுவரை நாம் பார்த்துக் கொண்டிருந்த கதையின் கோணத்தையே மாற்றும் வகையில் அமைந்திருக்கும் அந்தத் திருப்பம், இரண்டாம் பாதியின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது.
இரண்டாம் பாதியில் சில தடுமாற்றங்கள்!
முதல் பாதியில் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பை இரண்டாம் பாதி முழுமையாகத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதுதான் படத்தின் முக்கியமான குறை.
கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய சில இடங்களில், இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு இடையிலான காதல், தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகள் போன்றவை திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன. இத்தகைய காட்சிகள் இல்லாமலேயே கதையை இன்னும் விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்க முடியும்.
குறிப்பாக, சைக்கோ கில்லர் கதைகளில் அதன் பின்னணியும், கொலைக்கான காரணமும், குற்றவாளியின் மனநிலையும் மிகவும் முக்கியமானவை. யார் அந்தக் கொலையாளி என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், அவர் ஏன் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்கிறார் என்பதற்கான காரணத்தையும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் விளக்க வேண்டும்.
அந்த வகையில், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஓரளவுக்குத் திருப்தியளிக்கிறது என்றாலும், கொலையாளியின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் இன்னும் வலுவாக நிறுவியிருக்கலாம். கொடுக்கப்படும் காரணத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தைப் பாதிக்கும் அளவுக்கு அது மோசமாக இல்லை.
