தயாரிப்பு: விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன்
Advertisement
இயக்கம் : கணேஷ் சந்திரா
நடிப்பு: அஜய் தீஷன், தனுஷா, ஷியரா, சுனில், லட்சுமி மஞ்சு, பாண்டியராஜன்
ஒளிப்பதிவு : கணேஷ்
இசை: விஜய் ஆண்டனி
வெளியான தேதி : பிப்ரவரி 13, 2026
நேரம் : 2 மணிநேரம் 12 நிமிடம்
ரேட்டிங் : 2/5
இன்றைய ஜென் Z தலைமுறையின் காதல், உறவு சிக்கல்கள், சமூக வலைதள தாக்கம் ஆகியவற்றை முழுமையாக மையமாக வைத்து உருவான ஒரு நவீன காதல்–பொழுதுபோக்கு படமாக பூக்கி அமைந்துள்ளது. கதையின் ஆரம்பமே நாயகன் அஜய் மற்றும் நாயகி தனுஷா இடையேயான கடுமையான சண்டையுடன் தொடங்குகிறது. பல வருடங்கள் காதலித்து, திருமணம் வரை செல்லலாம் என்ற கனவுடன் இருந்த இவர்களின் உறவு, ஒரு கண நேர கோபத்தில் எல்லை மீறி வன்முறையாக மாறி, அதைக் காணொளியாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடப்படுவதால், இவர்களின் தனிப்பட்ட பிரச்சனை சமூக பிரச்சனையாக மாறுகிறது. அந்த வீடியோ வைரலாகி, இருவரும் “கண்டெண்ட்” ஆக மாற்றப்படும் சூழல், இன்றைய சமூக ஊடக யதார்த்தத்தை நக்கலாக சுட்டிக்காட்டுகிறது.
பிரேக்-அப்புக்குப் பிறகு, காதல் வலியிலிருந்து தப்பிக்க இன்றைய இளைஞர்கள் நாடும் எல்லா வழிகளையும் இருவரும் முயற்சி செய்கிறார்கள். சாப்பாடு, ஷாப்பிங், பைக் ட்ரிப், ஜிம், ஆன்மிகம் என வாழ்க்கையை “ரீசெட்” செய்யும் முயற்சிகள், நகைச்சுவையோடும், ட்ரெண்ட் டச்சோடும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அஜயின் கதாபாத்திரம், புதுக் காதல், சின்ன சின்ன ஆசைகள், மேட்ரிமோனி தேடல் என ஒரு இன்றைய நகர்ப்புற இளைஞனின் மனநிலையை பிரதிபலிக்கிறது. சில இடங்களில் அவரது நடிப்பில் ஒரே மாதிரியான ரியாக்ஷன் தெரிந்தாலும், வேகமான காட்சியமைப்பும், எடிட்டிங்கும் அதை பெரிதாக தெரிய விடாமல் காப்பாற்றுகிறது.
அதே நேரத்தில் அறிமுக நடிகை தனுஷா, தனது கதாபாத்திரத்தை மிக இயல்பாக செய்துள்ளார். பிரேக்-அப்பை மறக்க சாப்பாடு, ஷாப்பிங் என தன்னை திசைதிருப்பிக் கொள்ளும் காட்சிகளும், ஆன்மிக குருவுடன் வரும் சீன்களும் நல்ல எங்கேஜ்மென்டை கொடுக்கின்றன. குறிப்பாக, மேட்ரிமோனி மூலம் பொருத்தம் தேடும் காட்சிகளில், ஆண்களும் பெண்களும் காதலை எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக காட்டிய விதம் படத்தின் முக்கிய ஹைலைட். இவை அனைத்தும் இன்றைய ட்ரெண்ட் எடிட்டிங், ரீல்ஸ் கலாச்சாரம், பாப் கலாச்சார ரெஃபரன்ஸ்களுடன் சேர்ந்து, இளம் ரசிகர்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன.

படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் பெரிய பலம். காட்சிகள் பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆகவும், நவீனமாகவும் உள்ளன. பாடல்கள் விஜய் ஆண்டனி ஸ்டைல் வைப் கொடுத்தாலும், வரிகளில் பெரிதான அர்த்தம் இல்லாதது சற்று ஏமாற்றம் தருகிறது. படத்தின் மொத்த அணுகுமுறை, காதல், வலி, சமூக பொறுப்பு போன்ற விஷயங்களை ஆழமாக அலசாமல், “எங்கேஜ் செய்ய வேண்டும்” என்பதற்காக மட்டுமே நகர்வது. அதனால் சில இடங்களில் 30 விநாடி இன்ஸ்டா ரீல்ஸை இரண்டு மணி நேரம் தொடர்ந்து பார்த்த உணர்வு வருவது உண்மை.
மொத்தத்தில், பூக்கி ஒரு ஆழமான காதல் படமாக இல்லாவிட்டாலும், பெரிய அழுத்தமில்லாமல், லைட்டாக பொழுதுபோக்கிற்காக பார்க்கக்கூடிய, ஜென் Z ரசிகர்களை குறிவைக்கும் நவீன காதல் அனுபவமாக அமைந்துள்ளது.
