இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பெயர் வந்தாலே ரசிகர்களுக்கு கஜினி, ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற பிளாக்பஸ்டர் படங்கள் நினைவிற்கு வரும். அப்படி ஒரு இயக்குநர், இப்போது சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எடுத்திருக்கும் படம் தான் மதராஸி. இந்த கூட்டணி எப்படியிருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா? பார்க்கலாம்.
கதை சுருக்கம்
ரகு (சிவகார்த்திகேயன்), ஒரு விபத்தில் தனது மொத்த குடும்பத்தையும் இழக்கிறார். அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு வியாசர்பாடி மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை பூர்த்தியாவதற்குள் பல் மருத்துவர் மாலதி (ருக்மிணி வசந்த்) அவரை காதலிக்கிறார். ஆனால், ரகுவின் மனநிலைக்கு திடீர் மாற்றம் வர, அவர் விலகிச் செல்கிறார்.
இதற்கிடையில், வட மாநில கும்பல் (வித்யூத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல்) – தமிழ்நாட்டுக்குள் துப்பாக்கிகளை (containers மூலம்) கொண்டு வந்து வன்முறையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அவர்களை தடுக்க NIA அதிகாரி பிஜு மேனன், விக்ராந்த் களம் இறங்குகிறார்கள். ஆனால், 5 containers-இல் ஒன்றையே பிடிக்கிறார்கள்; மற்ற 4 containers தமிழ்நாட்டுக்குள் வந்துவிடுகிறது.
இந்நேரத்தில், காதலியிடம் பிரிந்து சோகத்தில் சாக வேண்டும் என விரும்பும் ரகுவை, பிஜு மேனன் suicide mission-க்கு பயன்படுத்துகிறார். அந்த mission வெற்றி அடைந்ததா? ரகு சாகிறானா? அல்லது எதிரிகளை அழிக்கிறானா? என்பதே படத்தின் கதை.

நடிப்பு & கதாபாத்திரங்கள்
சிவகார்த்திகேயன்:
பைத்தியம், காதல், காமெடி, ஆக்ஷன் – எல்லா உணர்வுகளையும் கச்சிதமாக நடித்திருக்கிறார். யாருக்கு என்ன நடந்தாலும் உயிரைக் கொடுத்து காப்பாற்றும் ரகுவின் பைத்தியக்கார தன்மையை மாஸாகவும் எமோசனலாகவும் செய்திருக்கிறார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார்.
ருக்மிணி வசந்த் படத்தின் கதையின் மையம் அவர் தான் அவர் ரோல் வலுவாக எழுதப்பட்டிருக்கிறது. சிவா ருக்மணி காதல் காட்சிகள் ஃபிரெஷ்ஷாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் வந்திருக்கிறது. ருக்மணியை இனி ரசிகர்கர்கள் கொண்டாடுவார்கள்
வித்யூத் ஜம்வால் அறிமுகமே செம்ம மாஸ். துப்பாக்கி படத்திற்குப் பிறகு இப்படத்தில் தான் அவர் சரியாகபயன்படுத்தபட்டிருக்கிறார். ஹாஸ்பிடலில் இருந்து தப்பிக்கும் காட்சியில் மிரட்டலாக நடித்துள்ளார். வில்லன் மாஸாக இருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
வில்லன்களாக வித்யூத் ஜம்வால் மற்றும் ஷபீர் கல்லரக்கல் இருவரும் பிரமாண்டமான வேடங்களில் வந்துள்ளனர். Opening fight-லேயே வித்யூத் மாஸ் காட்டுகிறார், ஆனால் கதையின் தன்மையால் சில இடங்களில் ஷபீர் அதிகம் நினைவில் நிற்கிறார். ஒரு கை இல்லாத வில்லனாக அவர் நடித்த விதம் தனித்துவமாக உள்ளது. பிஜு மேனன் NIA அதிகாரியாக நன்றாக நடித்திருக்கிறார். விக்ராந்த் சிறிய வேடத்தில் வந்தாலும் தன் பங்கை சிறப்பாக செய்துவிட்டார்.

படத்தின் பெரிய பலம் அதன் சண்டைக் காட்சிகள் தான். கெவின் மிஸ்ரா,திலீப் சுப்புராயன் ஆகியோரின் ஸ்டண்ட் காட்சிகள் புதிய கோணத்தில் மிரட்டலாக இருக்கிறது. கண்டெயினர் ஃபைட், இண்டர்வெல் பிளாக், ஃபேக்டரி ஃபைட் என எல்லாமே ரசிகர்களை கைதட்ட வைத்துவிட்டன. ஒளிப்பதிவாளர் சுதீப்பின் வேலை மிகப்பெரிய பிளஸ்.
அனிருத் பின்னணி இசை படத்திற்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது. குறிப்பாக மாஸ் காட்சிகளில் அவர் கொடுத்த பிஜிஎம் வில்லனுக்கு தந்துள்ள பிஜிஎம் அசத்தல். ஆனால் பாடல்கள் அந்த அளவுக்கு வேலை செய்யவில்லை என்பதே உண்மை. எடிட்டிங்கில் சில சிக்கல்கள் அப்பட்டமாகத் தெரிகின்றது. நீளும் ஃபைட் காட்சிகளில் தேவையில்லாத கட்ஸ் அதிகம், சில இடங்களில் கண்டினுயுடி குலைந்து போனது போல தோன்றுகிறது.
இருப்பினும், முருகதாஸ் டச் சில இடங்களில் மட்டும் தான் தெரிகிறது என்பது ரசிகர்களுக்கு சற்றே ஏமாற்றம். கஜினி, துப்பாக்கி, ரமணா மாதிரி ஒவ்வொரு காட்சியிலும் திடீர் சர்ப்ரைஸ், எமோஷான்ல் டச், வில்லன் ஹீரோ கேம் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.
மொத்தத்தில், மதராஸி ஒரு டிபிகல் கமர்ஷியல் எண்டர்டெயினர்.
மொத்த மதிப்பீடு: 3.25/5
