டைட்டானிக் – திரைப்பட விமர்சனம் !

காதல் கதைகளும் காமெடியும் கலந்த பயணம்… ஆனால் காலம் கடந்த கதைக்களம் படத்தின் வேகத்தைக் குறைக்கிறதா?

 

கலையரசன் நடிப்பில், எம். ஜனகராமன் இயக்கத்தில், சி.வி.குமார் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘டைட்டானிக்’. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப்போன இந்தத் திரைப்படம், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது திரையரங்குகளுக்கு வந்திருக்கிறது.

கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட், அஷ்னா ஜவேரி, ராகவ் விஜய், மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காயத்ரி மற்றும் இயக்குநர் பாலாஜி மோகன் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். இசை – நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு – பல்லு, படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால் மற்றும் இக்னேஷியஸ் அஸ்வின்.

திரைப்படத்தின் கதைக்களம் மூன்று மனிதர்களின் காதல் அனுபவங்களைச் சுற்றிப் பயணிக்கிறது.

ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக்கொள்ளும் மூன்று நண்பர்கள், தங்களுடைய காதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் பள்ளிப் பருவத்தில் மலர்ந்த காதலைப் பற்றிப் பேசுகிறார். மற்றொருவர் கல்லூரிக் காலக் காதலை நினைவுகூர்கிறார். மூன்றாவது நபர் வேலைக்குச் சென்ற பிறகு சந்தித்த காதல் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

இந்த மூன்று காதல் கதைகளின் வழியாக, காதலுக்குப் பின்னால் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் எனப் பல விஷயங்களை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

நடிகர்களின் பங்களிப்பு எப்படி?

கலையரசன் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை இயல்பாகச் செய்திருக்கிறார். குறிப்பாக காதல் தொடர்பான குழப்பங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கிறது.

காளி வெங்கட் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் கவனம் ஈர்க்கிறார். ராகவ் விஜய்யும் புதுமுகமாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். மூன்று கதாபாத்திரங்களுமே ஓரளவுக்கு நன்றாகவே அமைந்திருக்கின்றன.

கயல் ஆனந்தி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அஷ்னா ஜவேரி, மதுமிதா, காயத்ரி உள்ளிட்ட நடிகைகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக எப்படி?

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு எனத் தொழில்நுட்ப ரீதியான விஷயங்கள் அனைத்தும் ஓரளவுக்கு சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை படத்திற்குப் பலம் சேர்க்கிறது. பல்லுவின் ஒளிப்பதிவும் படத்தின் காட்சிகளுக்கு அழகூட்டுகிறது.

படம் வெளியாகத் தாமதமானாலும், காட்சியமைப்புகளிலும் தொழில்நுட்பத் தரத்திலும் முற்றிலும் பழைய திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு ஏற்படவில்லை. ஒரு ஃப்ரெஷ்ஷான திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் சில இடங்களில் கிடைக்கிறது.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்ன?

இந்தப் படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே அதன் காலகட்டம்தான்.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, 2022-ல் வெளியாக வேண்டிய திரைப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. அந்தத் தாமதத்தின் தாக்கம் திரைக்கதையில் தெளிவாகத் தெரிகிறது.

பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் சென்ற பிறகு உருவாகும் காதல் என மூன்று விதமான காதல் அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தும், அவற்றை இன்றைய தலைமுறையுடன் முழுமையாகப் பொருத்திப் பார்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்படவில்லை.

பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருந்தால் இந்தக் கதைக்களம் ரசிகர்களிடம் இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கக்கூடும். ஆனால் இன்றைய திரைப்பட ரசிகர்களின் ரசனைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் நகைச்சுவையும் சுவாரஸ்யமும் இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

படத்தில் கதாபாத்திரங்கள் சிரிக்கிறார்கள், காமெடி செய்கிறார்கள். ஆனால் திரையரங்கில் அமர்ந்திருக்கும் நமக்கு அந்தச் சிரிப்பும் நகைச்சுவையும் முழுமையாகக் கடத்தப்படுவதற்கு நேரம் எடுத்துக்கொள்கிறது. பல இடங்களில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதும் திரைக்கதையின் பலவீனமாக இருக்கிறது

படத்தின் தொழில்நுட்பத் தரமும் நடிகர்களின் பங்களிப்பும் நன்றாக இருந்தாலும், திரைக்கதையின் சுவாரஸ்யம் இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதே முக்கியமான குறையாக இருக்கிறது.

இறுதியாக…

காதல், நட்பு, நகைச்சுவை என ஒரு ஜாலியான கமர்ஷியல் திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குநர் எம். ஜனகராமன் முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில் சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஆனால் இந்தக் கதையை இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றியிருந்தால், இன்றைய காலகட்டத்திலும் ரசிகர்களை முழுமையாகக் கவர்ந்திருக்க முடியும்.

தாமதமாக வெளியானாலும் ஒரு ஃப்ரெஷ்ஷான அனுபவத்தைக் கொடுக்க முயற்சிக்கும் திரைப்படம். ஆனால் அந்த ஃப்ரெஷ்னஸை முழுமையாக ரசிகர்களுக்குக் கடத்தத் தவறியிருக்கிறது இந்த டைட்டானிக்.

சராசரி காதல் காமெடி திரைப்படம்