பறந்து போ எத்தனை அழகானதொரு படம் !!

 

இயக்குநர் ராமின் இயக்கத்தில் தமிழ்ப்படம் சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் வெளிவந்திருக்கும் படம்.

 

வெற்றிமாறன் ஒரு பேட்டியில், இப்போது திரைப்பட கல்வி கற்கும் மாணவர்களின் டாப் ஃபேவரைட் இயக்குநர்களில், எல்லோர் லிஸ்டிலும் ராம் இருக்கிறார் எனச் சொல்லியிருந்தார். அந்தளவு மிகப்பெரிய தாக்கத்தை ராம் ஏற்படுத்தியிருக்கிறார்.

உலகம் முழுக்க திரைக்கதை என்பதே 36 ஒன்லைன் மூலம் உருவக்கப்படுவது தான், எல்லாப்படத்தின் திரைக்கதையும் ஒரு ஃபார்மேட்டுக்குள் அடங்கி விடும். ராம் அங்கு தான் மாறுபடுகிறார். அவர் கதைகளை ஒரு ஃபார்மேட்டுக்குள் அடக்க முடிவதில்லை, அவர் சொல்லும் கதை எப்படி பயணிக்கும் என்பது அவருக்கே தெரியாது.. என்ன கதை சொல்வார் என தெரியாமல் ஆச்சரியமான உலகிற்குள் செல்ல அவரை நம்பிக் காத்திருக்கலாம்…
பறந்து போவிலும் அதே தான்..

பறந்து போ நகரம் சிறுவவர்களுக்கு எப்படி சிறையாக இருக்கிறது எனும் கதையை மிக அழகாக பேசுகிறது.

நகரம குழந்தைகளுக்கானதல்ல.. அது ஒரு சிறை, நம் குழந்தைப் பருவம் எப்படி இருந்தது, நாம் பள்ளியில் மட்டுமா அத்தனையும் கற்றோம், வீடு காடு, மேடு, மலை, குளம் எனத்தேடி தேடி ஓடி அலைந்தது தான் அதிகம். நாம் எங்கிருக்கிறோம் என்பது வீடு வந்து சேர்ந்த பிறகு தான் அப்பா அமாவுக்குத் தெரியும்.. ஆனால் நாம் இப்போது நம் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கிறோம்.
நாம் எத்தனை அன்பு காட்டினாலும் குழந்தைக்கு அது போதாது.. அவர்களைப்பொறுத்த வரை நகரம் சிறை தான்..
பறந்து போ ஒரு அழகான குடும்பத்தின் கதை, ஒரு அப்பாவும் மகனும் செல்லும் ரோட் டிரிப் ( அது ரோட் டிரிப் இல்லை) அவர்களுக்குள்ளான புரிதலாகவும், நமக்கான புரிதாலகவும் மாறுவது தான் இந்தப்படம்..

ஃப்ரேம்கள் அத்தனையும் கொள்ளை அழகு, நாமும் கூட சேர்ந்து ரோட் டிரிப் போவது போல ஒரு மாயை. பாடல்கள் மட்டும் கொஞ்சம் துருத்திக்கொண்டு இருந்தது. அது ராமின் வாய்ஸ் போலவே இருந்தது.

ஒவ்வொரு சின்ன பாத்திரமும் அத்தனை நிறைவாய் மனதுக்குள் உட்கார்ந்து கொள்கிறார்கள்.
எந்த வடிவமுமே இல்லாத திரைக்கதை தான் இந்தப்படத்தின் அழகு..

 

சிவா இந்தப்படத்திற்காகவே செய்து வைத்தவர் போல அப்படியே ஒட்டிக்கொள்கிறார்.. அவர் பேசும் ஒன்லைனர்கள் படம் முழுக்க அனைவரையும் சிரிக்க வைக்கிறது. அஞ்சலி ஒரு ஆச்சரியம் என்றால் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நடிப்பில் கலக்கியிருக்கிறார். அவரைப்போல பாந்தமான ஒருவரை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பார்ப்பது அத்தை அழகாக இருக்கிறது. அவருடன் வரும் பெண்ணும் அத்தனை பாந்தமாக நடித்திருக்கிறார்.
அந்த சிறுவன் நம் கையைப் பிடித்து அவனது உலகிற்குள் கூட்டிக்கொண்டு போய் விடுகிறான்..
அந்த உலகை விட்டு வரத்தான் மனதே இல்லை..

படம் பார்த்தவுடன் எங்காவது குடும்பத்தோடு போய் விட்டு வர வேண்டுமெனத் தோன்றியது..
எத்தனை அழகான படம் திரையரங்கில் மிஸ் செய்து விடாதீர்கள்

error: Content is protected !!