கோந்தல் (Gondhal) – திரைப்பட விமர்சனம் !!

இளையராஜாவின் இசை… 25 நிமிட ஒற்றை ஷாட்… மராத்திய மண்ணின் கலாசாரத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் பேசும் அற்புதமான படைப்பு!

மராத்திய மொழியில் உருவாகி, சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து, இந்தியாவின் சார்பில் 2027 ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியிருக்கும் ‘கோந்தல்’ திரைப்படம் தற்போது தமிழிலும் வெளியாகியிருக்கிறது. இளையராஜா இசையமைத்திருப்பது இப்படத்திற்குக் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் தவாகர் இயக்கியுள்ள இப்படம், மகாராஷ்டிராவின் பாரம்பரியமான ‘கோந்தல்’ சடங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) பங்கேற்றதுடன், சிறந்த இயக்குநருக்கான சில்வர் பீகாக் விருதையும் வென்றுள்ளது.

திரைப்பட விழாக்களுக்காக உருவாக்கப்படும் படைப்புகள் என்றாலே வழக்கமான கமர்ஷியல் சினிமாவின் அம்சங்கள் குறைவாகவும், மண்ணின் கலாசாரம், மனிதர்களின் வாழ்வியல், சமூகத்தின் அடையாளங்கள், ஆழமான உணர்வுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளாகவும் இருக்கும். அந்த வகையில் ‘கோந்தல்’ ஒரு தனித்துவமான திரைப்படம். ஒரே இரவில் நடைபெறும் திருமணமும் அதைத் தொடர்ந்து நடக்கும் பாரம்பரியச் சடங்குகளும்தான் படத்தின் பின்னணி. திருமணமான இளம்பெண் சுமன், அவளுடைய காதல், ஆசைகள், பழிவாங்கும் எண்ணம், துரோகம் எனப் பல அடுக்குகளைக் கொண்ட கதையாகத் திரைப்படம் விரிகிறது. அந்தச் சடங்கின் பின்னணியில் மனிதர்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டிகளையும் உறவுகளின் சிக்கல்களையும் இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய ஆச்சரியமே அதன் தொடக்கக் காட்சிதான். சுமார் 25 நிமிடங்கள் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரியவர் நடந்து செல்வதில் தொடங்கும் அந்தக் காட்சி, திருமண வீட்டுக்குள் நுழைந்து அங்கிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தி, அந்தச் சூழலையும் மனிதர்களின் இயல்புகளையும் நமக்குக் கடத்துகிறது. இவ்வளவு நீளமான காட்சியை எந்தவிதத் தொய்வுமின்றி படமாக்கியிருப்பது இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் மிகப்பெரிய பாராட்டைத் தருகிறது. அமலேந்து சௌத்ரியின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம்.

இசையைப் பொறுத்தவரை இளையராஜா தனது அனுபவத்தையும் மேதமையையும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாகப் பல இடங்களில் இசையைவிட மௌனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பது காட்சிகளின் உணர்வுகளை இன்னும் ஆழமாகக் கடத்துகிறது. இரவு முழுவதும் நடைபெறும் கோந்தல் சடங்கும், அதில் இடம்பெறும் ஆட்டம், பாடல், கூத்து நிகழ்ச்சிகளும் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு கிராமத்தின் மனிதர்கள், அவர்களின் குணாதிசயங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறை என அனைத்தையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாகவும் இயக்குநர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்துள்ள இஷிதா தேஷ்முக், கிஷோர் கடம், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர் உள்ளிட்ட நடிகர்கள் அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் படம் கொஞ்சம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படலாம். ஆனால் கதைக்குள் நாம் நுழைந்துவிட்டால், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னணியும், அவர்களுடைய நோக்கமும், அந்த இரவில் நிகழும் சம்பவங்களும் நம்மைத் தொடர்ந்து ஈர்க்கின்றன. ஒரு சிறுகதையைப் படிப்பது போன்றும், ஒரு நாவலின் பக்கங்களுக்குள் பயணிப்பது போன்றும், ஒரு சிறந்த இலக்கியப் படைப்பைத் திரையில் பார்ப்பது போன்றும் ஓர் அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கிறது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்குப் படம் சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் நல்ல சினிமாவைத் தேடிப் பார்ப்பவர்களுக்கு ‘கோந்தல்’ நிச்சயம் ஒரு சிறந்த அனுபவம். மொத்தத்தில், மராத்திய மண்ணின் கலாசாரத்தையும் மனிதர்களின் உணர்வுகளையும் மிக அழகான திரைமொழியில் பதிவு செய்திருக்கும் அற்புதமான திரைப்படம் இந்த ‘கோந்தல்’. தவறவிடக்கூடாத ஒரு தரமான சினிமா!