தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ்
இயக்கம்: கிஷோர் பாண்டுரங் பெலேகர்
நடிப்பு: விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ்
ஒளிப்பதிவு : கரண்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வெளியான தேதி: ஜனவரி 30, 2026
நேரம்: 2 மணி 12 நிமிடங்கள்
தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் மௌனப்பட வடிவில், மனித வாழ்க்கையின் ஏமாற்றம், வறுமை, இழப்பு, பணத்தின் மதிப்பு ஆகியவற்றை பேச முயற்சிக்கும் படம் காந்தி டாக்ஸ். மும்பையின் நெருக்கடியான குடியிருப்பில், நோயாளி அம்மாவுடன் வறுமையில் வாழ்கிறார் விஜய்சேதுபதி. தினமும் வேலை தேடி அலையும் வாழ்க்கை, தொடர்ச்சியான தோல்விகள், கையில் பணமில்லாத அவலம் அவரை மனதளவில் சோர்வடைய செய்கின்றன. மறுபக்கம், அதே நகரத்தில் ஒரு விபத்தில் குடும்பத்தையும், மற்றொரு விபத்தில் சொத்துகளையும் இழந்து மனநல ரீதியாக உடைந்து நிற்கிற தொழிலதிபராக அரவிந்த்சாமி. இந்த இரண்டு துருவ வாழ்க்கைகள் ஒரு பங்களாவுக்குள் மோதும் தருணமே கதையின் மையம்.
மவுனப்படத்தின் முயற்சி
மராட்டிய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர், பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மௌனப்படத்தை கொண்டு வந்திருக்கிறார். ஆரம்ப சில நிமிடங்கள் கடந்து, வசனங்கள் இல்லாத படத்துடன் ஒன்றிவிட சற்றே நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆனால் காட்சிகளின் ஓட்டம், நடிகர்களின் முகபாவனைகள், உடல் மொழிகள் கதைக்குள் இழுத்துச் செல்கின்றன. வசனங்கள் இல்லாவிட்டாலும், ஏழை, நடுத்தர, பணக்காரன் என மூன்று தரப்பினரின் மனநிலையை எளிய காட்சிகளால் புரிய வைக்கிறார் இயக்குனர். இதுவே படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
நோயாளி அம்மாவுக்காக போராடும் மகனாகவும், வேலை தேடி அவமானங்களை சந்திக்கும் இளைஞராகவும் விஜய்சேதுபதி மீண்டும் தனது நடிப்பு திறமையை நிரூபிக்கிறார். இண்டர்வியூ காட்சிகளில் தோல்வியால் உடையும் முகபாவனை, காதலியை நினைத்து கனவு காணும் தருணங்கள், கத்தி வாங்க சந்தைக்கு செல்லும் காட்சி, அம்மாவுக்காக பக்கத்து வீட்டில் உணவு திருடும் நொடி எல்லாவற்றிலும் வசனங்கள் இல்லாமலேயே உணர்வுகளை கடத்துகிறார். அரவிந்த்சாமியின் பங்களாவுக்குள் நுழைந்து திருட முயற்சிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
குடும்பம், பணம், மரியாதை எல்லாவற்றையும் இழந்து தனிமையில் தவிக்கும் மனிதராக அரவிந்த்சாமி மனதை நெகிழ வைக்கிறார். பங்களாவில் தனியாக அழும் காட்சிகளும், கார் ஓட்டும் தருணங்களும் அந்த கதாபாத்திரத்தின் உடைந்த மனநிலையை அழகாக வெளிப்படுத்துகின்றன. அதிதி ராவ் அழகான காதலியாக அவ்வப்போது வந்து போகிறார். ஆனால் அவருக்கும் விஜய்சேதுபதிக்கும் இடையிலான காதல் உறவு சற்றே செயற்கைத் தனமாகத் தெரிகிறது. பக்கத்து வீட்டுக்காரர், டிரைவர், போலீஸ்காரர், இன்னொரு திருடன் என துணை கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையான அழுத்தத்தை தருகின்றன.
கரணின் ஒளிப்பதிவு மும்பை நகரத்தை, நெருக்கடியான குடியிருப்புகளை, பிரம்மாண்டமான பங்களாவை கண் முன்னே கொண்டு வருகிறது. குறிப்பாக பங்களாவில் நடக்கும் இரண்டாம் பாதி காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. கோர்ட் சீன், பேரம் நடக்கும் விதம் ஆகியவை இயக்குனரின் சினிமா அறிவை காட்டுகின்றன. கிளைமாக்சில் “பணம் முக்கியமா, மனிதநேயம் முக்கியமா?” என்ற கேள்வியை காந்தி பாணியில் சொல்ல முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் உள்ள தொடர்பு பலருக்கு தெளிவாகப் புரியாமல் போகலாம்.
மவுனப்படத்தில் வசனங்கள் இல்லாத இடங்களை ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பெரும்பாலும் நிரப்புகிறது. இசைக்கருவிகளின் நுணுக்கமான பயன்பாடு படத்தின் உயிராக உள்ளது. அதே நேரத்தில், மவுனப்படத்தில் பாடல்கள் ஏன் என்ற கேள்வி எழுகிறது. பாடல்கள் சேர்த்ததால் இது முழுமையான மவுனப்படமா என்ற சந்தேகமும் வருகிறது. இரண்டாம் பாதியில் பங்களா காட்சிகள் நீளமாக இழுபறியாகி, “என்ன நடக்கிறது?” என்று புரிய தாமதமாகிறது. அதை குறைத்திருந்தால் படம் இன்னும் வலுவாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், காந்தி டாக்ஸ் வழக்கமான கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு பொறுமையை சோதிக்கும் படம். ஆனால் மௌனப்படங்கள், சீரியஸ் முயற்சிகள், வித்தியாசமான கதைக்களம் விரும்புபவர்களுக்கு இது ஒரு புதுமையான அனுபவம்.
