கருப்பு வெள்ளை காலத்தில் கலர் ஃபுல்லான காதல் நாயகன் ஜெமினி கணேசன் பிறந்த நாள்!

வெள்ளித் திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல உருமாறி வாள் சண்டை, குஸ்தி என ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் ஹீரோவாக மாறிப்புட்டார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் கம்பீரமாக கோடம்பாக்கத்தில் தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது நெக்குருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’. 

தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியான இருதுருவ நாயகர்களின் இருப்பினை ஓரளவில் அசைத்துப் பார்த்த ஆளுமை ஜெமினி. ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகளின் இடைக்காலம் வரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவாஜி, எம்ஜிஆர் எனும் பேராளுமைகளிடையே தனக்கான ஓர் இருப்பைச் சாத்தியமாக்கிக் கொண்டவர் இவர்.சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந்த 40களில் மதுரையும் தஞ்சையும் நூற்றுக்கணக்கான கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுக்க, ஜெமினி கணேசன் வந்ததோ, தஞ்சை மதுரை கலாச்சாரங்கள் சங்கமித்த புதுக்கோட்டையிலிருந்து

மிடில் கிளாஸ் பிராமிண் ஃபேமிலியில் பிறந்த ஜெமினி கணேசன் சொந்த ஊரில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுப் பட்டப் படிப்புக்காக மதராஸப் பட்டணம் வந்தார். சென்னையில் உள்ள தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் இடம் கிடைச்சப்போது அவருக்கு வயசு பதினாறு . விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட மாணவராக இருந்ததால், அங்கே பாதிரியார்களின் கவனதுக்குரிய செல்லப்பிள்ளையாக இருந்தார் . படிப்பு முடிந்ததும் அங்கேயே சில மாதங்கள் பயிற்சி ஆசிரியராக வேலை செய்தார். ஏனோ வாத்தியார்( புரொபஸர்) ஒர்க் அவருக்குப் பிடிக்கலை. அப்போதான் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனைச் சென்று சந்திக்கும்படி சிபாரிசுக் கடுதாசு ஒன்று வீட்டிலிருந்து தபாலில் வந்து சேர்ந்துச்சு. லட்டரை வாங்கிப் பார்த்த வாசன் பிரியமா அவரை கேஸ்டிங் அசிஸ்டெண்டா நியமிச்சுப்புடுறார். அவருடைய வேலை இதுதான். தினந்தோறும், “எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம். இத்துடன் என் போட்டோவும் அனுப்பி உள்ளேன். எனக்கு தயவுசெய்து ஒரு சான்ஸ் தாருங்கள்” என்று இதுபோன்ற கடிதங்கள் வரும்.. இவைகளை அகர வரிசைப்படி அடுக்கி வைத்து, காட்சிக்குத் தகுந்தபடி, டைரக்டர்களும், புரோக்கர்களும் ஆபீஸர்களிடம் சொல்வாய்ங்க. இவர் கடிதங்களையும் போட்டோக்களையும் பார்த்து, நிர்வாக ஆபீசுக்கு அனுப்பி விடுவார். இவர் கொடுத்த விலாசங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து விடுவாய்ங்க. மேலும் 1940-ல் ஜெமினியில் பணியில் சேர்ந்த ஜெமினி கணேசன் அதன் பிறகு ஸ்டூடியோவின் எல்லாத் தளங்களிலும் சுதந்திரமாக உலா வந்தார். அப்படியாக முதலாளியின் உறவுக்காரப் பையன்’ என்ற அடைமொழியோடு வலம் வந்தவரைத் தன் கேமரா கண்களால் பார்த்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு நிர்வாகிகளுள் ஒருவராக இருந்த ஆர். ராம்நாத்.

ஜெமினி ஸ்டூடியோவில் பல உயர் பதவிகளில் ஒன்றில் கே.ராம்நாத் என்ற கேமராமேன். மேன் என்று சொல்லக்கூடாது கேமரா மேதை என்று தான் சொல்ணும். அந்தக் காலத்தில் அவர் கேமரா, டைரக்ஷன் என்று படத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு பல அற்புதமான படங்களை (ராம்நாத் சேகர் என்ற பெயர்களில்) தயாரித்து தென்னிந்திய படங்களுக்கு தனி மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். அவர்தான் மிஸ் மாலினி என்னும் படத்தில் கதாநாயகனின் உதவியாளராக ஜெமினி கணேசனை அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் கதை, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனுடையது. இப்படத்தைக் கொத்தமங்கலம் சுப்பு இயக்கிக் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சுதந்திர இந்தியாவில் வெளியான முதல் சமூகப் படமான மிஸ் மாலினி 1947 செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகி, தரமான படம் என்ற பாராட்டைப் பெற்று வெற்றிபெற்றது. ஜெமினி நிறுவனத்துக்காக ராம்நாத் தயாரித்த ஜெமினி கணேசனின் அறிமுகப் படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர்களோடு ஜெமினியின் இயற்பெயரான ராமசாமி கணேசன் என்பதன் சுருக்கமாக ‘ஆர்.ஜி’என்று டைட்டிலில் போடப்பட்டுச்சு. படத்தில் மொத்தம் இவர் வரும் காட்சிகள் நான்கிற்கு மேல் இராது என்பது தனிக் கதை. 

அப்பாலே ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு சிறு வேஷங்களில் நடிச்சுவந்தவருக்கு, 1952-ம் வருசம் கே. ராம்நாத் மறுபடியும் முக்கியத்துவம் கொடுக்கிறார். ராம்நாத் இயக்கத்தில் 1952-ல் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் நாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, அழகான இளம் வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடிச்சார். அது பெரிய வெற்றியைப் பெறலை என்றாலும் விருது பெறத்தக்க சிறந்த படமாக இருந்துச்சு. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர், பிற்காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் புகழ்பெற்றார். இதற்கு நேர்மாறாக வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் காதல் கதாநாயகனாக வலம் வர ஆரம்பிச்சார்

ஜெமினியின் தொடக்க காலத் திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அமைத்துக் கொடுத்த படம், அடுத்த ஆண்டே வெளியானமனம்போல மாங்கல்யம்’. முப்பத்து மூன்று வயதே நிரம்பியிருந்த ஜெமினி கணேசன் கவனம்பெறத் தொடங்கிய நான்காவது படத்திலேயே அவருக்கு இரட்டை வேடம் கிடைத்தது ஓர் அசாதாரணமான வாய்ப்பு. அந்நாள் தெலுங்குத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவேம்பட்டிசதாசிவ பிரம்மம் எழுதிய முழுநீள சமூக நகைச்சுவை திரைக்கதையைத் தமிழில் எழுதியவர் உமாசந்திரன். ஒரே தோற்றம் கொண்ட இருவரில் தன் காதலன் யார் எனத் தெரியாமல் பழகுகிறார் கதாநாயகி. அந்த இருவரில் ஒருவர் மனநலக் காப்பகத்திலிருந்து தப்பித்து வந்தவர். கதை எத்தனை கலாட்டாவாக இருந்திருக்கும் என்று யோசிக்க முடிகிறது அல்லவா? இந்தப் படத்தில் நடிப்பில் மட்டுமல்ல, காதல் காட்சிகளிலும் தன் தனித்த மென்னுணர்ச்சி முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் ஜெமினி கணேசன். இந்தப் படத்தில்தான் ஜெமினி கணேசன் என்று முதன்முதலாக டைட்டில் போடப்பட்டது. படம் மிகப் பெரிய வெற்றிபெற்று ஜெமினியைக் காதல் மன்னனாக உயர்த்தியது. ஜெமினியின் சொந்த வாழ்க்கையிலும் மிகப் பெரிய பங்காற்றியது. இந்தப் படத்தில் சாவித்திரியுடன் நடித்தபோது ஏற்பட்ட நட்பே பின்னர் மெல்ல மெல்ல காதலாகக் கனிந்து திருமணம் வரை வந்து நின்றது. பாசமலரில் இந்த ஜோடி காதலித்தபோது அது நிஜமென்றே ரசிகர்கள் நம்பினாய்ங்க. 

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் எனத் தான் ஏற்று மிளிராத கதாபாத்திரம் இல்லை என்று சாதித்துக் காட்டினார். ஜெமினியைக் காதல் மன்னனாகப் பார்க்கும் ரசிகர்கள் சிவபெருமான் வேடம் ஏற்ற அந்நாளின் நாயர்களில் ஜெமினிக்கே அது கச்சிதமாகப் பொருந்தியதாகச் சொன்னாய்ங்க. ஜெமினி இறுதிவரை டைரக்டர்கள் விரும்பும் நடிகரா இருந்தார். ரீசன் சிம்பிள்– தனது நடிப்புப் பொறுப்பை இயக்குநர்களிடம் விட்டுபுடுவார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த ‘வெள்ளி விழா’படத்தில் முதுமை பற்றி ‘வந்தால் வரட்டும் முதுமை உனக்கென்ன குறைச்சல்,’ என்ற பாடலை எழுதியிருப்பார் வாலி. ஆனால் பழுத்த முதுமையில் இயற்கையுடன் கலந்த ஜெமினி கணேசன் இன்றும் இளமையான ‘ காதல் மன்னனாகவேரசிகர்களின் மனதில் படிஞ்சார். அதற்கு அவரது நடிப்பாளுமையை மீறிய மற்றொரு காரணமும் உண்டு. தமிழ்த் திரையிசையின் மறக்க முடியாத கலைஞர்களாக இருக்கும் ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவரது குரலும் ஜெமினியின் குரலாகவே தமிழ் ரசிர்கள் மனதில் பதிந்துவிட்டதுதான் அந்தக் காரணம்.

ஜெமினி நாயகனாக இன்ட்ரோ ஆன ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தின் ‘மாப்பிள்ளை டோய்’ தொடங்கி ‘பாட்டுப் பாட வா, பார்த்துப் பேசவா’ (தேன் நிலவு) ஊடாக ஏராளமான பாடல்களால் ஜெமினியின் திரை இருப்பை உறுதிசெஞ்சவர். இரண்டாவது முக்கியமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ். அவரது பாடல்களை என்றும் ஜெமினியின் முகத்தோடு மட்டுமே பொருத்திக்கொள்ளும் பழகிய மனங்கள். ஜெமினியின் நல்வாய்ப்பு இந்த இருவரது குரல்களும் அவருக்கே என உருப்பெற்றதான தனித்தன்மை… அதிராத ஆண் குரல்கள். ‘காலங்களில் அவள் வசந்தம்’ (பாவ மன்னிப்பு) ‘வளர்ந்த கலை மறந்து விட்டாள்’ (காத்திருந்த கண்கள்) ‘மயக்கமா கலக்கமா’ (சுமைதாங்கி) ஆகியவை தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற இன்னொரு குரலான எஸ் பி பாலசுப்ரமணியம் முதலில் பாடிய பாடலானஇயற்கையென்னும் இளைய கன்னி’யும் (சாந்தி நிலையம்) ஜெமினிக்காகப் பாடப்பட்டது என்பது சந்தர்ப்பவசமானது இல்லைன்னே தோன்றுது. தமிழ் சினிமாவின் அழியாப் பெட்டகமான அரிய குரல்களாலும், பாடல்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் காதல் மன்னன். 

அறுபதுகளின் இறுதியில் முடிவிற்கு வந்த அவரது நாயக நடிப்பில், அவரே தயாரிச்சு நடிச்சப் படம், பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘நான் அவனில்லை.’ ஜெமினி இயக்கிய ஒரே படம் ‘இதயமலர்.’ ஆனால் சமகாலம் அவரை நினைவில் கொள்ளும்படியானவை முதிய பாத்திரங்களை ஏற்று நடிச்ச ‘உன்னால் முடியும் தம்பி’, `அவ்வை சண்முகி’, ‘மேட்டுக்குடி’ ஆகியவை. பின்னிரண்டு படங்களும் அவரது நடிப்பாளுமையின் நகைச்சுவைப் பரிமாணங்களை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியவை. ‘அவ்வை சண்முகி’க்காக முதலில் கமலஹாசன் சிவாஜியையே தொடர்பு கொண்டாராம், அவர்தான் “ஜெமினிதான் அந்தப் பாத்திரத்திற்கு சரியாக வருவான். அவனையே போடு’’ அப்படீன்னாராம்.

ஜெமினி கணேசன் முன்னணி நடிகராக இருந்தாலும் சக நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பாசமலர், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற பல படங்களில் சிவாஜியுடன் போட்டி போட்டு நடித்துள்ள இவர் முகராசி என்ற படத்தில் மட்டுமே எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடிச்சிருக்கார்.இப்படி தனது மிகச் சிறந்த நடிப்பால் பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம், நடிகர் மன்னன், காதல் மன்னன் போன்ற விருதுகளையும் பட்டங்களையும் வாங்கிய ஜெமினிகணேசன் 2005ஆம் வருசம் மார்ச் 22ஆம் தேதி காலமானார். தனது தனித்துவம் மிக்க நடிப்பால் அனைத்து வயது ரசிகர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பிறந்த நாளான இன்று ஆந்தை குழுமம் அவரை நினைவுகூர்கிறது.

படைப்பாளிகள் மறையலாம் ஆனால் அவர்களின் படைப்புகள் மறைவதில்லைதானே?

error: Content is protected !!