இயக்குனர் – கௌதம் திண்ணனுறி
நடிகர்கள் – விஜய் தேவரா கொண்டா, சத்யதேவ் , பாக்ய ஶ்ரீ போஸ்
இசை – அனிருத் ரவிச்சந்திரன்
தயாரிப்பு – சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் , ஃபோர்டியூன் ஃபோர் கிரியேஷன் – கௌதம் திண்ணனுறி
விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழில் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது அந்த நம்பிக்கையில், தமிழில் டப் செய்து வந்திருக்கிறது இந்தப்படம். ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கும் விஜய் தேவரா கொண்டா ஜெயித்திருக்கிறாரா?
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது அண்ணனை தேடும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது அண்ணன் பற்றிய தகவல் ஒன்றை அவருக்கு தெரிவிக்கும் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி, அண்ணனை மீட்க வேண்டும் என்றால், இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் மாஃபியா கூட்டத்திற்குள் ரகசிய உளவாளியாக நுழைய வேண்டும் என்றும், அது மிகவும் ஆபத்தான பணி என்றும் கூறுகிறார். தனது அண்ணனை மீட்டு தனது அம்மா முன்பு நிறுத்த எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் நாயகன், ரகசிய உளவாளியாக இலங்கை மாஃபியா கூட்டத்திற்குள் நுழைகிறார். ஆனால், அங்கு நிலமை வேறு மாதிரியாக இருக்கிறது. அண்ணனை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இலங்கை செல்லும் நாயகனுக்கு, ஒரு இனத்தையே மீட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அந்த இனத்திற்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ?, தனது அண்ணனை மீட்டாரா ? இல்லையா ? என்பதை ஆக்ஷன் மற்றும் மாஸாக சொல்வதே ‘கிங்டம்’.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வந்த ரெட்ரோ மற்றும் கேஜிஎஃப் படங்களை நிறைய பிரதிபலிக்கிறது இந்தப்படம். கதை காட்சியமைப்பு என அனைத்திலும் அதே சாயல். ஆனால் அதிலிருந்த அழுத்தம் இதில் மிஸ்ஸிங்க்.

இந்தப் படத்தில் கோபக்கார காவலர், முரட்டுத்தனமான கைதி, அதிரடி காட்டும் கடத்தல்காரன், ஒரு இனத்தை காக்கும் தலைவன் என பல பரிணாமங்களில் நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒவ்வொரு பரிணாமங்களிலும் நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் இன்றி செண்டிமெண்ட் காட்சிகளிலும் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தியிருக்கிறார். ஆனால் அவர் உழைப்பு வீணாய் போய் விட்டத்து. விஜய் தேவரகொண்டாவின் அண்ணன் வேடத்தில் நடித்திருக்கும் சத்யதேவின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு மிக்கதாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் ஹீரோவுக்கான முக்கியத்துவத்தில் மூழ்கி காணாமல் போய்விடுகிறது.
நாயகியாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ போர்ஸுக்கு வசீகரமான முகம். ஆனால், அவரது காதல் காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சியில் இருந்த முத்தக் காட்சிகள் என எதுவுமே படத்தில் இல்லை. முருகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கடேஷ், தேசிய பாதுகாப்பு துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் மனிஷ் சவுத்ரி, பழங்குடி இன மக்களின் குருவாக நடித்திருக்கும் ஐயப்பா பி.சர்மா, இலங்கை மாஃபியாவாக நடித்திருக்கும் பாபுராஜ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், குறிப்பாக பின்னணி இசையும், மாஸ் காட்சிகளின் பீஜியமும் காட்சிகளுடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்கிறது. சாதாரண காட்சிகள் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் பின்னணி இசையமைத்திருக்கும் அனிருத், இசை இல்லை என்றால் படமே இல்லை என்று சொன்னாலும் மிகையாகாது. ஒளிப்பதிவாளர்கள் கிரிஸ் கங்காதரன் மற்றும் ஜோமன் டி.ஜான் ஆகியோர் படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறது. இலங்கை ராணுவத்துடானான சேசிங் உள்ளிட்ட படத்தின் அனைத்து ஆக்ஷன் காட்சிகளையும் தங்களது கேமரா மூலம் பிரமிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அண்ணனை தேடும் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் என்ற எளிமையாக தொடங்கும் கதையை, பெரும் குற்ற பின்னணி கொண்ட கும்பலின் சதி திட்டங்களை முறியடிக்கும் உளவாளி, இலங்கையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பழங்குடி இன மக்கள், அவர்களை வைத்து கடத்தல் தொழில் செய்யும் கூட்டம், என்று திரைக்கதையின் விரிவாக்கத்தை மிக பிரமாண்டமாக எழுதியிருக்கும் இயக்குநர் கௌதம் தின்னனுரி, திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்.
இடைவேளை வரை ஆர்வத்தை தூண்டி பார்க்க வைக்கும் படம் பின்னர் வழி தவறி என்ன கதை சொல்வது என்றே தெரியாமல் தட்டுத்தடுமாறி அலைகிறது. அதீத வன்முறை முகம் சுழிக்க வைக்கிறது.
படத்தில் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்து டெக்னிக்கல விசயங்கள் நன்றாக இருந்தாலும் படம் ஏமாற்றத்தைத் தருகிறது.
மொத்தத்தில், ‘கிங்டம்’ சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்சன் விருந்து.
