தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார்!


மிழ் சினிமா இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக, அரசியல் மற்றும் சமூக தளங்களில் வலுவாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சினிமா உலகம் மறந்தாலும் வரலாறு ஒருபோதும் மறக்காது. அவர்களில் மிக முக்கியமானவர், தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர். அவர் இல்லையென்றால், இன்று ஒரியா அல்லது போஜ்புரி படங்களைப் போலத்தான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியும் இருந்திருக்கும்; அவர்தான் அதை மாற்றினார்.

செட்டியார்களின் கலை உணர்வும் தொழில் பக்தியும்

பொதுவாக நகரத்தார் எனப்படும் செட்டியார்களின் இயல்பு அல்லது தர்மம் காலத்திற்கேற்ற தொழில்களை மேற்கொள்வதும், அதனை கலை உணர்வுடன் ரசிக்கும்படியாகச் செய்வதும்தான். செட்டியார்களின் பெருவாழ்வுக்குக் காரணம் தொழில்பக்தி என்றாலும், எல்லாவற்றையும் கலை உணர்வுடன் செய்வது அவர்களின் பெருமைக்கு முக்கியக் காரணம். அது வீடு, உணவு, நகை என்றல்லாமல், வழிபாட்டிலும் கோயில்களிலும் கூட ஒரு கலை ரசனை அவர்களிடம் இருந்தது. அந்தக் கலை உணர்வுதான் அவர்களை எல்லா இடத்திலும் தனித்துக் காட்டியது.

அப்படியான செட்டியார்களில் தனி ரசனை கொண்டிருந்தவர் மெய்யப்ப செட்டியார். அவரின் தந்தை ஆவிச்சி செட்டி, காரைக்குடியில் 1920 வாக்கில் அகரஹார வீடுகள் இரண்டை வாங்கி ‘சவுண்ட் சர்வீஸ்’ என இசைத்தட்டுகள் தொடர்பான கடைக்கு அடித்தளமிட்டார். செட்டிமார்களிடம் பிராமண குருக்கள் வீட்டை வாங்கக் கூடாது எனும் பெரிய கட்டுப்பாடு இருந்தது. வேதம் ஒலித்த வீடுகளில் நாம் வசிக்கக் கூடாது எனும் மரியாதை இருந்தது. அதையும் மீறி குருக்கள் வீட்டினை வாங்கி இசைக்கடையினைத் தொடங்கியவர் ஆவிச்சித்தான். ஆனால், அங்கு தெய்வபக்தி மற்றும் தேசபக்தி பாடல்கள் மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். விஞ்ஞானம் பெரிய தட்டுகளில் பாடலைப் பதிவு செய்ய வசதி செய்துகொண்டிருந்த காலம் அது.

இந்தத் தொழிலின் அடிப்படையில்தான் இசைத்தட்டுக்களை வாங்க விற்கும் தொழிலைச் செய்யத் தன் உதவியாளரோடும் பணத்தோடும் சென்னை வந்தார் மெய்யப்ப செட்டியார். ஒரு செட்டிக்குத் தேவை கொஞ்சம் பணம், உதவிக்கு ஒருவர், மனம் நிறைய வியாபாரக் கணக்கு, தனியே கொஞ்சம் ரசனைக் கணக்கு என்பதுதான். அப்படி அவரின் வியாபாரமும் ரசனையும் சேர்ந்து, சொந்தமாக நாமே இசைத்தட்டை தயாரித்தால் என்ன என்று கணக்கிட்டது.

‘சரஸ்வதி சவுண்ட்ஸ்’ முதல் ஏவி.எம். ஸ்டுடியோ வரை

‘சரஸ்வதி சவுண்ட்ஸ்’ என ஒரு இசைத்தட்டு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அவர் நடத்தியபோதுதான் சினிமா தயாரிப்புக் கலை எழுச்சி பெற்றது. பணம்போட்டு தயாரித்து வெளியிட்டால் லாபம் என்பது அங்கு அடிப்படையானது. இந்த இசைத்தட்டு தயாரிப்புத் தொழிலில்தான் ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளின் தொழில்நுட்பத்தையெல்லாம் அவர் கற்றுக்கொண்டார்.

நாடகங்கள் சினிமாவுக்கு வேகமாக மாறிய அந்தக் காலங்களில் தமிழகத்தில் சினிமா தயாரிப்பதற்கான வசதிகள் எதுவும் இல்லை. பம்பாய் (மும்பை) மற்றும் கல்கத்தா (கொல்கத்தா) என்பதுதான் சினிமா தயாரிக்கும் இடமாக இருந்தது. 1934-ல் ‘அல்லி அர்ஜூனா’ என்ற ஒரு படத்தை முதலில் எடுத்தார். வழக்கம் போல் கல்கத்தாவில் பெரும் செலவில் எடுத்தார். ஆனால், பேச்சும் காட்சியும் பொருந்தாத அத்தொழில்நுட்பம் அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. அன்றே லட்சங்கள் காலியாயின. ஆனால் மனிதர் அசரவில்லை. 1936-ல் ‘ரத்னாவளி’ எனும் படமெடுத்தார். அதுவும் நஷ்டப்படுத்தியது. ஆனாலும் மனிதர் இன்னும் வைராக்கியமாய் நின்றார்.

ஒரு தொழிலதிபருக்குத் தேவை ஆழமான உள்ளுணர்வு. “இது நிச்சயம் ஜெயிக்கும், ஆனால் சில தவறுகளைச் செய்கின்றோம், அதைத் திருத்தினால் வெற்றி” எனும் அபாரமான உள்ளுணர்வு மெய்யப்பரிடம் இருந்தது. அதனைச் சரியாகப் பிடித்த மெய்யப்பர் தன் தவறுகளை சரிசெய்து மீண்டும் முயற்சித்தார். டி.ஆர். மகாலிங்கத்தைக் கொண்டு அவர் தயாரித்த ‘நந்தகுமார்’ எனும் படம் 1938-களில் அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. அப்போதுதான் தனக்கோர் ஸ்டுடியோ அவசியம் என்பதை உணர்ந்தார்.

1940-களில் தனக்கென ஒரு ஸ்டுடியோவினை சென்னையில் உருவாக்கி வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறினார். டி.ஆர். மகாலிங்கம் வரிசையில் நடிகை ருக்மணியை அவர்தான் அறிமுகப்படுத்தினார். (ருக்மணியின் மகள் தான் நடிகை லட்சுமி). தமிழ்சினிமாவில் முதன் முதலில் நடிகைக்கு டப்பிங் குரலைக் கொண்டு வந்தது மெய்யப்பர்தான். அதுவரை நடிகர் நடிகையர்தான் வசனம் பேசினார்கள், அதை மாற்றியவர் மெய்யப்பர்.

1940-களில் ‘சபாபதி’ அவருக்கு வெற்றி கொடுத்தது. அதை அவரே இயக்கினார். பின் இரண்டாம் உலகப்போர் காலத்தில் சென்னை காலியானது. தன் ஸ்டுடியோவினை காரைக்குடிக்கு மாற்றி எதேதோ முயற்சித்தார். அது மிகக் கஷ்டமான காலம் என்றாலும் அவர் ஓயவில்லை. பாரதியார் பாடல்களை அன்றே பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி அவற்றினைக் கொண்டு இசைத்தட்டுக்கள் செய்யும் காரியத்தையும் செய்துகொண்டிருந்தார். பிரிட்டிஷாரின் மிரட்டலுக்கு அவர் அஞ்சவில்லை. 1945-ல் இரண்டாம் மகா யுத்தம் முடிந்து சென்னையில் அமைதி திரும்பியவுடன், மறுபடி திரும்பி ஆவிச்சி மெய்யப்பன் ஸ்டுடியோ எனும் ஏவிஎம் ஸ்டுடியோவினை நிறுவினார். அதன்பின் ‘பராசக்தி’ போன்ற படங்கள் அவருக்குக் கைகொடுத்தன.

தமிழ் சினிமாவின் முன்னோடி

சென்னையில் அவர்தான் முதல் ஸ்டுடியோவினை நிறுவினார். இவரைப் பின்பற்றித்தான் எஸ்.எஸ். வாசன், ஏ.எல். பிரசாத், மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிடர் எனப் பல ஸ்டுடியோக்கள் வந்தன. இங்கிருந்துதான் கண்ணதாசன், கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி எனப் பல ஜாம்பவான்கள் உருவாயினர். அவர்களுக்கெல்லாம் அடித்தளமிட்டவர் இந்த மெய்யப்பர். 1950-க்குப் பின் அவரின் வெற்றிப்பயணம் அமைந்தது. எல்லா நடிகர் நடிகையரும் அவரால் வளர்ந்தார்கள், சினிமா அவரால் வளர்ந்தது.

மெய்யப்ப செட்டியார் சினிமா துறையில் ஒரு தர்மமும் அறமும் பேணினார். தரம் கெட்ட கதைகளை அவர் அனுமதிப்பதில்லை. தேச விரோதம், இந்து விரோதக் கதைகளை அவர் ஊக்குவிப்பதில்லை. ‘பராசக்தி’ போன்ற படங்களின் வசனங்கள் மீண்டும் தன் படத்தில் வராமல் பார்த்துக்கொண்டார். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல கருத்துக்களை சொல்வதே சினிமா அறம் என்பதில் சரியாக இருந்தார். தேசபக்தி படங்கள், நல்ல கருத்துக்களை சொல்லும் குடும்பப் படங்கள் மட்டுமே ஊக்குவித்தார்.

எத்தனையோ நடிகர்களை அவர் அறிமுகப்படுத்தினார். அதில் வைஜெயந்திமாலா, கே.ஆர். விஜயா, கமலஹாசன் என ஏகப்பட்டோர் உண்டு. அவர் உருவாக்கிய அந்த ஏவிஎம் நிறுவனம் ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தது. இன்றைய தமிழ்சினிமாவின் மகாமுகியமான படங்கள் பலவும் அவர்களின் தயாரிப்பே. செட்டியார் 1979-ல் மறைந்தாலும், அவரின் மகன் சரவணன் போன்றோர் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தினார்கள். இப்போது அரசியலும் சினிமாவும் மர்ம சக்திகளும் கலந்து அந்தத் துறை ஒரு சாக்கடையான பின் இவர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.

தமிழ் சினிமா வரலாறும் அந்த மெய்யப்ப செட்டியாரின் வாழ்க்கையும் பிரிக்க முடியாதவை. பாரதியார் பாடல்களைப் பெரும் தொகை கொடுத்து வாங்கிய செட்டி, பின் அவற்றை இலவசமாக நாட்டுக்குத் தந்தார். இன்னும் தன் அறக்கட்டளை மூலம் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்தார். பல ஆலயப் பணிகள், சமூகப் பணி, கல்விப் பணி என அவரின் கொடைகள் ஏராளம்.

தமிழகம் கலைகளை ரசிக்கும் மண்; இங்கு சினிமா எனும் விஞ்ஞான நாடகம் வெற்றிபெறும் என அதனைத் தயாரிக்க வந்தவர் அவர்தான். மற்ற செட்டிகளெல்லாம் கட்டடம், வட்டித்தொழில், வியாபாரம் என கவனம் செலுத்தி, “இந்தக் கூத்தாடித் தொழில் நமக்குச் சரிவராது” என ஒதுங்கியபோது, அதை ஒரு கலையாகக் கருதி வெற்றிகரமான தொழிலாக்கியவர் அவர்தான்.

அவரின் கணக்கு சரி. அவர் நினைத்தது போலவே சினிமா இங்கு பெரும் இடம் பெற்றது. ஆனால் அது அரசியலை ஆட்டுவிக்கும் என்றோ, சினிமா அரசியலை நிர்ணயம் செய்யுமென்றோ அவர் கனவிலும் நினைத்ததில்லை. பின்னாளில் அவர் அதை நினைத்து வருந்தியிருக்கலாம், அந்த வருத்தம் இன்று எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் சினிமா வளர முடியும், இங்கு ஸ்டுடியோக்கள் அமைத்து வெற்றிபெற முடியும் என நிரூபித்துக் காட்டியவர் அவர்தான். அவ்வகையில் அவரே முன்னோடி. தமிழகமும் சினிமா ரசிகர்களும் அவரின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகின்றார்கள். சினிமா துறையில் ஒழுங்கும், அறமும், தேசாபிமானமும், கண்ணியமும் காத்த அவர் தமிழ்சினிமா இருக்கும் வரை நிலைத்திருப்பார்.


error: Content is protected !!