மீண்டும் திரையில் மாயாஜாலம் காட்டிய கிளாடியேட்டர் 2 !!

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த, வரலாற்றுக் காவியப்படம், கிளாடியேட்டர் ரிட்லி ஸ்காட் இயக்கி, ரஸ்ஸல் க்ரோவின் சிறப்பான நடிப்பில்2000 ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுக்க உள்ள திரை ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ரோமானிய பேரரசின் காலகட்டத்தில் மனிதர்களை மிருகங்களாக, அடிமைகளாக பயன்படுத்தி, நடந்த கிளாடியேட்டர் விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து வந்த படம் ஆஸ்கர் விருது வரை கலக்கியது.

கிளாடியேட்டராகும் வஞ்சிக்கப்பட்ட படைத்தலைவன் மேக்சிமஸ், தனது குடும்பத்தினருக்காகப் ரோமப் பேரரசை பழிவாங்க , முயற்சிப்பது தான் அப்படத்தின் மையக்கரு. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த உடை வடிவமைப்பு, சிறந்த செளண்ட் எஃபெக்ட்ஸ், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஐந்து பிரிவுகளில் 73 ஆவது அகாடெமி விருதுகளை வென்றது.

முதல் பாகம் நிகழ்ந்தேறிய 16 வருடங்களுப் பிறகு, இப்படத்தின் கதை துவங்குகிறது. மேக்சிமஸின் மகன் லூசியஸ் வெரஸ் கிளாடியேட்டர் ஆகின்றான். அவனது மனைவியை ரோமப் பேரரசின் படைத்தலைவனான மார்கஸ் அகாக்யுஸ் கொன்றுவிட, அடிமையாகும் லூசியஸ், முன்னாள் அடிமையான மேக்ரினஸின் உதவியுடன் பழிவாங்க முயல்கிறான். ஆனால் விதி வேறு விளையாட்டை ஆடுகிறது.

கதைக்களம் அதே தான் என்றாலும், கதையின் தொடர்ச்சியை அழகாக எழுதி, பரரபரப்பாக திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். படத்தை விட்ட இடத்தில் இருந்து துவங்குவதும், கதை இறுதி வரை பரபரப்பாக கொண்டு சென்றதும் அழகு.

படத்தில் வரும் முதல் போர்க் காட்சியிலேயே அந்த பிரம்மாண்ட உலகிற்குள் நம்மை அழைத்து போய் விடுகிறார்கள். படம் முழுக்க நம் கண்கள் விரியும் பிரம்மாண்டம்.

கிளாடியேட்டர் அரங்கம், அதில் நடக்கும் சண்டைக்காட்சிகள் எல்லாம் கண்களுக்கு விருந்து.

மேக்ரினஸாக டென்செல் வாஷிங்டனும், லூசியஸாக பால் மெஸ்கலும், மார்கஸ் அகாக்யூஸாக பெட்ரோ பாஸ்கலும் நடித்துள்ளனர். அதிலும் டென்செல் வாஷிங்டன் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

முதல் பாகத்தின் பெருமையை குலைத்து விடாமல் இரண்டாம் பாகத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

கிளாடியேட்டர் மிஸ் பண்ணக்கூடாத ஹாலிவுட் விருந்து !