ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு, “When Unstoppable Force meets an Immovable Object”
இதில் Unstoppable Force ஆக அறம் என்ற ஒன்றே இல்லாமல், அனைவரையும் ஏமாற்றி, எல்லோரையும் மிதித்துவிட்டு மேலே ஏறும் ஒருவனையும், Immovable Object ஆக அவன் செய்து வைத்த தவறுகளின் ஒட்டுமொத்த சங்கம சுவரையும் எடுத்து கொண்டால், அது தான் டிராகன்.
பிரதீப் ரங்கநாதன் என்ற பெயருக்கே இப்போது பல டிக்கெட்டுகள் வித்து தீருகின்றன. ஆனால் வித்து தீரும் டிக்கெட் தகுதியானதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக தான் டிராகன் இருக்கிறது.
தான் ஒரு One film Wonder அல்ல என்பதை பிரதீப் நிரூபித்து இருக்கிறார்.
கல்லூரி காலத்தில் படிக்காமல் அரியர் வைத்து சுற்றி கொண்டு இருந்த இளைஞன் பொய் பேச்சு, போலி சான்றிதழ் என குறுக்கு வழியின் மூலமாக தனது கோட்டையை கட்டி கொண்டு செல்ல, அவன் இதுவரை செய்த தவறின் தடயம் புயலாய் அவன் முன்னால் வருகிறது.
அந்த புயலில் இருந்து நாயகன் தனது கோட்டையை எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை.
படத்தில் மொத்தமாக நான்கு டிராகன்கள் முதல் டிராகன் அஸ்வத் மாரிமுத்து.. படத்தின் டிரைலரை வைத்து மக்களை எப்படி ஏமாத்துனேன் பார்த்தியா என்ற மோடில், 2k கிட்டுகளை உள்ளே இழுத்து வந்து ஊமகுத்து குத்தி, போய் படிடா பரமா என்று பாடம் எடுத்து அனுப்பி இருக்கிறார். அன்பும், அறனும் என்ற வாக்கியத்திற்கு அடுத்தப்படியாக தமிழக மக்களின் முதுகெலும்பே படிப்பும், அறமும் தான். அதை இந்த படமும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
சமீபத்தில் வந்த படங்களில் எல்லாம் ஹீரோ பல்வேறு தவறுகளை செய்வான், ஆனால் இறுதியில் திருந்தி நல்ல வாழ்கைக்கு வருவான என்று கதையமைக்கப்பட்டு இருக்கிறது. இது வரும் தலைமுறைக்கு ஒரு மோசமான எடுத்துகாட்டாக இருக்கிறது. இது பூமர்தனமாக பேச்சா இருந்தாலும், இது தான் நிசம். டிராகன் அதில் தனித்து நிற்கிறது. நீ விதைத்தை நீ அறுத்தே ஆகவேண்டும் என உறுதியாக நிற்கிறது டிராகன்.
இரண்டாவது டிராகன் மிஷ்கின்: அவார்ட் குட்றா டிரம்பே மோட் தான் மிஷ்கின் மோட்.. அவர் வர்ற இடத்தில் சூடு பிடிக்கும் படம், எங்கேயும் நிற்கவில்லை. ஸ்வீட் ராஸ்கலாக வாழ்ந்து இருக்கிறார் மிஷ்கின். படத்தின் பாதியை அவர் தான் தாங்கி நிற்கிறார்.
மூன்றாவது டிராகன் பிரதீப், இந்த கதையோட்டத்தை சரியாக புரிந்து கொண்டு, அதை தனது இளமை துடிப்போடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகி இருக்கிறார். படத்தில் அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திர மாற்றம் இருக்கிறது, அதை நேர்த்தியாக திரையில் காட்டி இருக்கிறார்.
நான்காவது டிராகன், கடைசியாக வந்து சேர்ந்தார் வினய்க் போல, லியான் ஜேம்ஸ் இந்த படத்தின் மிகப்பெரிய பலம், பேக்ரவுண்ட் ஸ்கோர், பாடல் என அனைத்திலும் பூந்து விளையாடி இருக்கிறார். படத்தை அடிகோட்டிட்டு நமக்கு காட்டியதில் லியோனுக்கு பெரும் பங்கு உண்டு.
மொத்தத்தில் அவசியமான பூமர் பேச்சுகளை, அழகாக கோர்த்து கொடுத்து இருக்கும் நவீனகால படிடா பரமா மூவி.