மொழி எதுவாக இருந்தாலும் சினிமா மூலம் வாழ்க்கையைக் கடக்க நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் என்றாவது நமக்கு வெற்றி வந்துவிடாதா என்று தான் போராடி வருகிறார்கள். ஒரு சிலருக்கு எளிதில் கிடைக்கும், ஒரு சிலருக்கு அது எட்டா கனியாகவே இருக்கும். அந்த வகையில் திரைத்துரைக்கு பின்னால், அப்பாஸ், அஜித் ஏன் ஜுனியர் ஆர்டிஸ்ட் முதற்கொண்டு குரல் கொடுத்து வந்தவர்தான் விக்ரம். தொடர் 20 படங்கள் தோல்வி, சினிமாவில் இதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இவர் பார்க்காத வேலைகளே இல்லை.

விக்ரம்

முன்னதாக தன் அப்பா ஆசைப்படி லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியமும், எம்.பி.ஏ-வும் படித்து முடித்தார். எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கும்போதே 1984-ல் `என் காதல் என் கண்மணி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்போது அவருக்கு ஏற்பட்ட விபத்து, மூன்று ஆண்டுகள் இவரைப் படுத்த படுக்கையாக்கியது.  தன் முயற்சியைக் கைவிடாத விக்ரம், மூன்று ஆண்டுகள் கழித்து அதே படத்தில் நடித்தார். 1990-ல் படமும் வெளியானது; படம் படுதோல்வி. தொடர் தோல்விக்கு விக்ரம் மட்டும் விதிவிலக்கா என்ன?  ஒன்றோ, இரண்டோ கிடையாது… தொடர்ந்து ஒன்பது வருடங்கள் தோல்வி.

தமிழில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் சியான். அந்தப் பக்கமும் தடுமாறிய விக்ரம், மீண்டும் தமிழில் தடம் பதிக்க வந்தார். இம்முறை புது முயற்சி, புது இயக்குநர். படத்தின் பெயர் `சேது’, இயக்குநரின் பெயர் பாலா!. பல சாதனையாளர்கள் கடந்து வந்த பாதையில் முள்ளும் கல்லும் சூழ்ந்திருப்பதைப் போல பாலா வந்த பாதையில் தடைகள் இன்னும் அதிகம். வைக்கோல் போரைக் கொளுத்தியது, காலில் வெட்டு வாங்கியது, கொலை முயற்சி, `சேது’ படம் டிராப் ஆகி மீண்டும் தொடங்கியது என பாலா சந்தித்த இன்னல்களும் ஏராளம்.

பில்டிங் கான்ட்ராக்டர் ஒருவரின் உதவியில் மீண்டும் `சேது’ வெளி வரத் தயார் நிலையில் இருந்தான். இப்படி வெவ்வேறு சோகக் கதைகள் இருவருக்குமே உண்டு. திசையெங்கும் முட்டிமோதிப் பார்த்தும் வெற்றியை மட்டும் ருசிக்காத இரு திறமைசாலிகள் கூட்டு சேர்கின்றனர். `இது எந்த ஹீரோவுக்கும் அபூர்வமாகக் கிடைக்கிற வாய்ப்பு விக்ரம். இந்தப் படத்துல ஆக்‌ஷன், பெர்ஃபாமன்ஸ் ரெண்டுக்கும் ஸ்கோப் இருக்கு. இன்டஸ்ட்ரியில் கமல் சாருக்குனு ஒரு மரியாதை இருக்குல்ல… அதை ஒரே படத்துல தட்டிரலாம். ஆனா, நீங்க ஆபீஸுக்குப் போறமாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரணும். இந்தக் கதாபாத்திரத்துக்காக இருபது கிலோ எடையையும் குறைக்கணும்’ என பாலா விக்ரமிடம் சொல்ல, `நான் பண்றேன் பாலா. உங்கள மாதிரிதான் பாலா நானும். நிறைய படங்கள் பண்ணிட்டேன் பாலா. ஆனா, சொல்லும்படியா எந்தப் படமும் அமையலை’ என்று பதிலளித்தார், விக்ரம்.

விக்ரம்

மீண்டும் ஆரம்பமானது `சேது’. ஆனால், மீண்டும் ஒரு இடி சேது மேல் விழுந்தது. இம்முறை ஃபெப்சி – படைப்பாளிகளுக்கு இடையேயான பிரச்னை. படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்போது, தமிழ்சினிமாவில் ஸ்டிரைக். இருவரும் என்ன செய்வதெனத் தெரியாது இருக்கும் வேலையில், ராதிகாவிடமிருந்து விக்ரமிற்கு போன் வருகிறது.

`குடும்பக் கஷ்டம் பாலா, ராதிகா ஒரு டெலி ஃபிலிம் பண்றாங்க. போனா கொஞ்சம் பைசா கிடைக்கும்’ என பாலாவிடம் சொல்லி அனுமதி வாங்கிவிட்டு அதில் நடிக்கக் கிளம்பினார், விக்ரம். ஷூட்டும் முடிந்தது. கிளம்பி வருகையில், ராதிகாவிடம், `நான் `சேது’னு ஒரு படம் பண்றேன். அது ஒருவேளை ஃபெயிலியர் ஆகியிருச்சுனா உங்ககூட வந்து வொர்க் பண்றேன் மேடம்’ எனச் சொல்லிவிட்டு கொடுத்த 60,000 ரூபாய் பணத்தோடு பாலாவைத் தேடி வந்திருக்கிறார். `ஷூட்டிங்ல 60,000 கொடுத்தாங்க பாலா. நீங்களும் ரொம்பக் கஷ்டப்படுறீங்க. இந்தாங்க, உங்களுக்குப் பாதி; எனக்கு மீதி’ என வலுக்கட்டாயமாக பாலாவின் கையில் பணத்தைத் திணித்திருக்கிறார் விக்ரம்.

ஏழு மாதங்கள் கழித்து வலி, வேதனைகளுடன் மீண்டும் களமிறங்குகிறான், `சேது’. இம்முறை எந்தப் பிரச்னைகளும் பதம் பார்க்கவில்லை. பிரச்னைகளின்றி பயணித்தான், சேது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே `நாம் முக்கியமான கட்டத்துக்கு ரெடியாகணும் விக்ரம்’ என பாலா விக்ரமிடம் சொல்லியிருக்கிறார். ஷூட்டிங் முடிந்து, படமும் வெளியானது. இறுதியில், சறுக்கிய இருவரும் வெற்றியின் ருசியைச் சுவைத்ததோடு, படம் பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள் விக்ரமிற்கு `சியான்’ என்ற பெயரும் சூட்டி மகிழ்ந்தனர். விக்ரம் சியான் ஆனார்.

பிறகு `விண்ணுக்கும் மண்ணுக்கும்’, `தில்’, `காசி’, `ஜெமினி’, `தூள்’, `சாமி’ எனத் தொட்டதெல்லாம் துலங்கியது. மூன்று வருடங்கள் கழித்து பாலா – விக்ரம் என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் `பிதாமகன்’ படத்தில் ஒன்று சேர்கிறது. வெற்றி என்ற மகுடத்தைத் தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, வேலை என்ற பளுவைத் தலையில் ஏற்றிக்கொண்டது. சியானின் நடிப்பில் எப்போதும் முழுமையைக் காணமுடியும். ஆனால், இவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் முழுமையான மனிதர். `பிதாமகன்’ படப்பிடிப்பு முடிந்ததும், `உன் பேரை நான் கோ-டைரக்டர் லிஸ்ட்ல போட்டுக்கவா’ என பாலா விக்ரமிடம் கேட்டிருக்கிறார். எல்லாம் முடிந்தபின் `பிதமாகன்’ வெளிவந்தான். `சேது’ வரிசையில் அவனும் வெற்றியைச் சுவைத்தான்.

என்னடா ஒரு படத்தை அவன் இவன்னு பேசுறான்னுதானே நினைக்கிறீங்க… அவர் ஏற்று நடித்த பெரும்பாலான படங்களில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அதனால்தான் அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிப் பேசும்போதும் அவன், இவன் என்று உரிமையாகப் பேசத் தோன்றுகிறது.

பாலா - விக்ரம்

விக்ரமின் மிகப்பெரிய பலம்தான், வீட்டார்களின் பலவீனமாக இருந்திருக்கக்கூடும். இவரின் படங்கள் தோல்வியைத் தழுவினாலும், பார்வையாளர்களைத் திருப்திபடுத்துவதில் சியான் என்றுமே தவறியதில்லை. அதற்கு இவரின் மெனக்கெடல், வெவ்வேறு விதமான கெட்அப் போடுவது, எடையைக் கூட்டிக் குறைப்பது, பார்வையற்றவராக நடிப்பது என இவரின் பாத்திரங்கள் அனைத்திலுமே வித்தியாசம் காட்டக்கூடியவர். பார்வையாளர்களைப் பரவசப்படுத்த இந்த மெனக்கெடல்களை இவர் செய்துவந்தாலும், வீட்டில் இருக்கும் இவர் மனைவியும், குழந்தைகளும் என்ன நினைப்பார்கள்?

நாம் நினைப்பதற்கு நேரெதினான ஆள் ஷைலா. விக்ரமுக்குச் சரியான மனைவியாக மட்டுமல்லாமல், ஆகச்சிறந்த துணைவியாகவும் முன்னின்று தன்னம்பிக்கையை அள்ளி ஊட்டுவாராம். விக்ரமின் மூளை, இதயம்… இரண்டுமே ஷைலாதான். இரண்டுக்கும் இடையில் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்னைகளையும் நிலைபடுத்துவதும் இவர்தான்.

சியான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்தாலும், ரசிகர்களை மகிழ்விப்பதில் என்றுமே தவறியதில்லை. கலைஞனின் கடமையைக் கச்சிதமாகச் செய்யும் இந்த மகா கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!