சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் என்றும், இந்த விஷயத்தில் சாதகமான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார். இது தொடர்பாக சிவாஜி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவர் மாநில தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:-

அப்பாவின் (சிவாஜி) நினைவு மண்டபம் என்பது மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதாவின் மிகப் பெரிய கனவு திட்டமாகும். அவர் உயிரோடு இருந்திருந்தால் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து  சகாப்தம் படைத்த எங்களது தந்தை நடிகர் திலகத்தின் ஆன்மாவுக்கு திருப்தி அளித்திருப்பார். நாங்களும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் மிகப்பெரிய நடிகரின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் அவர் மிகப் பெரிய சேவையாற்றி உள்ளார். எனவே இந்த சிறிய விழாவில் அவருக்கு அவமரியாதை செய்யக்கூடாது என்றே நாங்கள் கருதுகிறோம்.  எனவே ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்து முதலமைச்சர் உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவரும் மகத்தான மிகப்பெரிய தமிழ் நடிகரின் நினைவகத் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும். இது எங்களது எளிய வேண்டுகோள். எங்கள் குடும்பமும் ஆயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்களும் உங்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.- இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் விதமாக அவருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். சிவாஜி கணேசன் மணி மண்டபத்துக்கான பணிகள் சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் 28,124 சதுர அடி பரப்பளவில் 2016 டிசம்பர் 19ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது. அதன்படி, தற்போது மணி மண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்த தையடுத்து, தமிழக அரசு திறப்பு விழா நடத்திட உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மணிமண்டபம் திறப்பு விழா அக்டோபர் 1ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.

இந்தத் திறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் குடும்பத்தினர், திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேலும் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி மற்றும் அவரது முழு உருவச் சிலை உள்ளிட்டவை வைக்கப்பட இருக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளதும்  மெரினா கடற்கரைச் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.