‘Lockdown’ திரைப்படம் இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள திரைப்படம். இது கொரோனா லாக்டவுன் காலத்தில் நடக்கும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கதை.
அனுபமா பரமேஸ்வரன் மீது பெரிய நம்பிக்கையுடன் தொடங்கும் படம் தான் ‘லாக்டவுன்’.
2K, Gen Z ரசிகர்களிடம் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ள அனுபமா, முதல் முறையாக தமிழில் தனிக் கதாநாயகியாக நடித்து வந்த படம் இது. கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு இளம்பெண் எதிர்கொள்ளும் மன அழுத்தம், பயம், சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து படம் நகர்கிறது.
படத்தின் கதை, வேலை தேடும் பட்டதாரிப் பெண் அனிதாவைச் சுற்றி சுழல்கிறது. ஒரு தவறான முடிவுக்குப் பிறகு அவள் கர்ப்பமாக இருப்பதை அறிகிறாள். அதே நேரத்தில் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. வெளியே செல்ல முடியாத நிலை, யாரிடமும் உண்மையைச் சொல்ல முடியாத பயம், சட்டவிரோத வழிகளைத் தேட வேண்டிய சூழல் – இவையெல்லாம் அவளின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குகின்றன.

இந்த இடத்தில் தான் படத்தின் முக்கியப் பிரச்சினை தொடங்குகிறது. ஒரு படித்த, நவீன கால பெண்ணின் முடிவுகள் நம்பகமாக எழுதப்படவில்லை. பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பது, சட்டபூர்வமான மருத்துவ உதவிகளை நாடாமல் சட்டவிரோத கிளினிக்குகளைத் தேடுவது போன்ற விஷயங்கள் கதாபாத்திரத்தின் முதிர்ச்சியை கேள்விக்குள்ளாக்குகின்றன. லாக்டவுன் ஒரு வலுவான பின்னணியாக இருந்தாலும், அதை திரைக்கதையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. டம் கொரோனா காலத்தையும் சமூக சிக்கல்களையும் சொல்ல முயற்சிக்கிறது, ஆனால் விஷயங்களை நம்பகமாக சொல்லவில்லை
நடிப்பில் அனுபமா sincere-ஆக முயற்சி செய்திருக்கிறார். தனிமை, பயம், மனவேதனை போன்ற உணர்ச்சிகளை சில காட்சிகளில் அழகாக வெளிப்படுத்துகிறார். ஆனால், பலவீனமான திரைக்கதையும் முரண்பாடான பாத்திர எழுத்தும் அவரது உழைப்பை முழுமையாக வெளிக்கொணர விடவில்லை. துணைக் கதாபாத்திரங்களும் கிளைக் கதைகளும் படத்திற்கு தேவையற்ற சினிமாத்தனத்தை சேர்க்கின்றன.
மொத்தத்தில், ‘லாக்டவுன்’ ஒரு நல்ல ஐடியாவுடன் தொடங்கி, சரியான எழுத்து இல்லாததால் பாதியில் தடுமாறும் படம். அனுபமாவின் முயற்சியும், லாக்டவுன் பின்னணியும் கவனிக்கத் தகுந்தவை. ஆனால், கதாபாத்திர பொறுப்பு, யதார்த்தமான தீர்வுகள் ஆகியவை இல்லாததால் படம் மனதில் ஆழமாக பதியவில்லை.
👉 Better luck next time என்று சொல்ல வைக்கும் முயற்சி.
