அனந்தா திரை விமர்சனம் !!

 

தயாரிப்பு : கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
நடிப்பு : ஜகபதி பாபு, ஒய்.ஜி. மகேந்திரன், தலைவாசன் விஜய், நிழல்கள் ரவி, சுகாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம்
ஒளிப்பதிவு : சஞ்சய்
இசை : தேவா

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு நினைவை ஒட்டி உருவாகியுள்ள ஆன்மிக – படைப்பு தான் இந்த அனந்தா.

ஜியோ சினிமாஸ் மற்றும் சில ஓடிடி தளங்களில் வெளியான இந்த படம், பக்தி, நம்பிக்கை, மனித வாழ்க்கையில் இறை அருளின் தாக்கம் ஆகியவற்றை மென்மையான திரைக்கதையில் சொல்ல முயல்கிறது.

ஆக்ஷன், கமர்ஷியல் படங்களைத் தந்த சுரேஷ் கிருஷ்ணா, இந்த முறை முழுக்க முழுக்க ஆன்மிக அனுபவத்தை திரையில் தந்துள்ளார்.

ஐந்து பக்தர்களின் வாழ்க்கையில் நிகழும் ஐந்து விதமான சம்பவங்கள் மூலம் ஐந்து கதையாக படம் நகர்கிறது.

பணம், அதிகாரம் என்ற உலகத்தில் மூழ்கிய தொழிலதிபராக வரும் ஜகபதி பாபு, சாய்பாபா அருளால் வாழ்க்கையின் உண்மை அர்த்தத்தை உணர்ந்து மனிதநேயப் பாதைக்கு மாறுவது முதல் கதை.

மனைவியை இழந்த வேதனையில் கடவுளை வெறுக்கும் மனிதராக தொடங்கி, உண்மைகள் தெரிய வரும்போது சாய்பாபா மீது முழு நம்பிக்கை கொள்வது ஒய்.ஜி. மகேந்திரனின் கதை. அவரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் மனதை தொடுவதாகவும் அமைந்துள்ளது.

நடன கலைஞரான அபிராமி வெங்கடாசலத்திற்கு முக்கியமான நிகழ்ச்சிக்கு முன் காலில் ஏற்பட்ட காயம், அவரையும் அவரது தந்தை தலைவாசன் விஜயையும் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை மற்றொரு கதை. அபிராமியின் உணர்ச்சிகரமான நடிப்பு பாராட்டுக்குரியது.

காசியில் கங்கை நதியில் விபத்துக்குள்ளாகி மரண படுக்கையில் போராடும் மகனை காப்பாற்ற, ஒரு தாய் எப்படி முழுமையாக சரணாகதி அடைகிறார் என்பதை சுகாசினி பாத்திரம் மூலம் அழகாக பதிவு செய்கிறது படம்.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு பக்தர்கள், காட்டு தீயில் சிக்கி சாய்பாபா அருளால் உயிர் தப்புவது இறுதி கதை. இறுதியில் ஒரு சிறுமிக்கு பாபா காட்சி அளித்தாரா என்ற ஆன்மிக நம்பிக்கையுடன் படம் முடிகிறது.

இப்படி பக்தியின் பல வடிவங்களை காட்டியிருப்பது படத்தின் மிகப் பெரிய பலம்.

ஜகபதி பாபு, ஒய்.ஜி. மகேந்திரன், சுகாசினி, அபிராமி வெங்கடாசலம் என அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் முழுமையாக ஈடுபாட்டோடு நடித்துள்ளனர். குறிப்பாக சுகாசினியின் நடிப்பும், டயலாக் டெலிவரியும் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது.

காசி, புட்டபர்த்தி போன்ற இடங்களை ஒளிப்பதிவாளர் சஞ்சய் மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியுள்ளார். தேவாவின் பின்னணி இசையும், இடையிடையே வரும் இறைப் பாடல்களும் படத்திற்கு கூடுதல் ஆன்மிக வலிமை சேர்க்கின்றன.

கிளைமாக்சில் வரும் குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள், நிஜ ஸ்ரீ சத்ய சாய்பாபா வீடியோ ஃபுட்டேஜ் ஆகியவை பக்தர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மிகைப்படுத்தல் இல்லாமல், அமைதியான உணர்வோடு செல்லும் திரைக்கதை படத்தின் தனிச்சிறப்பு.

முழுக்க முழுக்க ஆன்மிக படமாக இல்லாமல், பக்தர்களுக்கும் பகவானுக்கும் இடையிலான பாசம், நம்பிக்கை, சரணாகதி ஆகியவற்றை சொல்லும் ஒரு தன்னம்பிக்கை படமாக அனந்தா திகழ்கிறது.

“பாபாவை நம்புவோர் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்” என்ற தத்துவமே படத்தின் மையம்.

அனந்தா – ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பேரருளை உணர வைக்கும், அமைதியும் நம்பிக்கையும் தரும் ஆனந்தமான அனுபவம்.