பராசக்தி எனும் பெயருக்கே தமிழகத்தில் பெரும் வரலாறு இருக்கிறது. இப்போது அதே பெயரில் இந்தி எதிர்ப்பை மையப்படுத்தி, 1960 களின் கதைக்களத்தில் பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன் வந்திருக்கும் படம் தான் பராசக்தி.
சிவகார்த்திகேயனுக்கு 25 வது படம் கமர்ஷியல் பக்கம் ஒதுங்காமல், தன் மொழிக்காகவும் இனத்துக்காகவும் அவர் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டதக்கது.
நம் தமிழ்நாட்டில் உண்மையில் நடந்த கதை இது, பக்தவச்சலம், அண்ணா துரை, கருணாநிதி, நேரு, இந்திரா காந்தி என ரியல் லைஃப் அரசியல் தலைவர்களையும் தமிழ் மொழிக்காக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தையும் வெகு சிறப்பாக காட்டியுள்ளனர்.
கதை நாயகன் செழியன் (சிவகார்த்திகேயன்) ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒரு மாணவர் படையையே வழிநடத்துகிறார். அம்மாணவர்கள் வேறுவேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அனைவரும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், இவர்களின் போராட்டங்கள் பேசப்படுகிறது. அப்படியான சூழலில், மாணவர் சேனையை வழிநடுத்தும் செழியனுக்கு ஒரு இழப்பு ஏற்பட, அக்குழு சத்தமில்லாமல் கலைகிறது.
தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து கல்லூரி மாணவரான செழியனின் தம்பி சின்னத்துரை (அதர்வா) ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல்கொடுத்து அவர் ஒரு குழுவை வழிநடத்துகிறார். இந்த எதிர்ப்பெல்லாம் வேண்டாம் என ஒதுங்கியிருக்கும் செழியன் தம்பியின் செயலைக் கண்டிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் என்னென்ன நடக்கிறது என்பதே பராசக்தியின் கதை.

சிவகார்த்திகேயன் – முதன்மை கதாபாத்திரத்தில் கோபம் அடக்கி எதிர்காலத்திற்காக பொறுத்துப்போவதும் பின் வெகுண்டு எழுவதுமாக தன் பாத்திரத்தை, சிறப்பாக செய்துள்ளார்.
சுட்டி தம்பியாக அதர்வா அந்த கதாப்பாத்திரத்திற்குள் தன்னை அழகாக பொருத்திக்கொண்டுள்ளார்.
ஶ்ரீலீலா இப்படி அழகாக தமிழ் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை அழகாக நடிக்கவும் செய்துள்ளார்.
தன் கதப்பாத்திரத்திற்கு எழுதியதை விட அதிக பலம் சேர்த்திருக்கிறார் ரவிமோகன். வில்லனாக அவர் வரும் அத்தனை காட்சிகளிலும் மிரட்டுகிறார்.

மொத்தமாக நடிகர்கள் தான் படத்தை பெரிதும் காப்பாற்றுகிறார்கள்.
முதல் பாதி கதையில் காதல் அண்ணன் தம்பி பாசம் என உருகி, இடைவேளையில் தான் உண்மையான களத்திற்குள் நுழைகிறார்கள்.
இரண்டாம் பாதி முழுக்க தமிழகத்தில் நடந்தது என்பதால் அது எளிதாக நம்மை கவர்ந்து விடுகிறது.
1960 காலகட்டத்தை கொண்டுவருவதில் படக்குழு மிகக்கடுமையாக உழைத்திருக்கிறது. கலை இயக்கம், ஒளிப்பதிவு அத்தனையும் அற்புதம். இந்தி திணிப்பு, மத்திய அரசின் அடக்குமுறை என படத்தில் வரும் விவரங்களுடன் வசனங்களும் நல்ல ஷார்ப்.ஜீவி பிரகாஷ் இசை படத்திற்கு பெரிய பலம்.
முதல் பாதியில் வரும் காதல் காட்சிகளைக் குறைத்து, சுவாரஸ்யம் கூட்டியிருந்தால், இன்னும் பரபரப்பாக இருந்திருக்கும் ஆனாலும்
இந்த பாரசக்தி தமிழகத்தின் முக்கிய அடையாளம் தான்.
📍 Rating: ⭐⭐⭐✰☆ ( 3.75 / 5)
