மெய்யழகன் நாஸ்டாலஜியாவை தூண்டும் அழகான சினிமா!!

 

96 படம் மூலம் மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த, இயக்குநர் பிரேம் இயக்கியிருக்கும் திரைப்படம் மெய்யழகன்.

முன்னதாக இந்தப்படத்தை ஒரு நாவலாக எழுதி வைத்திருந்தவர் நண்பர்களின் வற்புறுத்தலால் சினிமாவாக்கியிருக்கிறார். ஆனால் அதிலும் ஆச்சரியங்கள் தந்திருக்கிறார்.

மனம் தடுமாறும் ஒரு நாளில் ஒரு கடற்கரையில் அமர்ந்து, நம் வாழ்க்கை நினைவுகளை மீண்டும் திரும்பி அசை போடும்போது ஏற்படும் ஒரு உணர்வை இந்தப்படம் தந்துவிடுகிறது.

பிரேம் உலகத்தை, மனிதர்களை பார்க்கும் விதம், சம்பவங்களை உள்வாங்கும் விதம் எல்லாம் அழகின் உட்சமாக இருக்கிறது. அதை திரையில் தரும் விதம் வாவ் போட வைக்கிறது.

தன் உயிராக நினைத்த வீட்டை விட்டு, ஊரை விட்டு சின்ன வயதிலேயெ வந்தவன், 22 ஆண்டுக்கு பிறகு சொந்தக்கார தங்கை கல்யாணத்திற்கு செல்கிறான். அங்கு தன் மேல் பாசம் கொட்டும் ஒருவனை சந்திக்கிறான். அவனுக்கு அவன் பெயர் கூட தெரியவில்லை, ஆனால் அவன் இவனது மொத்த ஜாதகமும் சொல்கிறான் இவன் மீது உயிராக இருக்கிறான். அவன் பால்ய கால கதைகள் சொல்கிறான், அவன் யாரென கண்டடைவது தான் இந்தப்படம்.

பல நேரம் சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போயி, நம்ம மேல பாசத்த கொட்டி பழைய நினைவுகள பேசுறவங்க, பேர் தெரியாம முழிப்போம். இந்த சின்ன இழை தான் இந்தப்படம். ஆனா அதை அப்படியே மனச உருக வைக்கிற படமா எடுத்துருக்காரு பிரேம்..

96 எப்படி ராம் ஜானகி ரெண்டு பேரோட ஒரு இரவை அந்த பயணத்தை காட்டியதோ அதே போல், சின்ன வயதிலேயே பிரிஞ்சு போனா மாமன் மச்சான் இருவரும் சந்திக்கும் ஒரு இரவு தான் இந்தப்படம்.

ஒரு முழு இரவில் இருவரும் உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அத்தனை நாஸ்டாலஜியா கதைகள்.

அரவிந்த் சாமி படத்தில் ஹீரோ கார்த்தி சப்போர்டிங் ரோல் பண்ணிருக்காரு.. இப்படி ஒரு கதையை செய்ய முன்னணி ஹீரோவிற்கு தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் கார்த்தி.

படம் முழுக்க நிறைய இடங்களில் கண்ணீர் ததும்புகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அரவிந்த் சாமியும், காத்தியும் மாறி மாறி சிக்ஸ் அடிக்கிறார்கள்.

படம் முழுக்க தஞ்சாவூரை இரவில் சுற்றிப்பார்த்த உணர்வைத் தருகிறது கேமரா. இசை நம் பால்ய நினைவுகளைத் தூண்டுகிறது. கமல்ஹாசனின் குரலில் விரியும் அந்தப்பாடல் அற்புதம்.

இரத்தம், வெட்டு, குத்து, ரொமான்ஸ் எதுவுமே இல்ல… டிவிஸ்ட் இல்ல , எந்த பரபரப்பும் இல்ல, ஒரு இரவு அது முழுக்க பேச்சு, பேச்சு, பேச்சு… அது மூலம் நம் வாழ்வின் அழகான தருணங்களை நமக்கே எடுத்துக்காட்டுகிறது. படம் முடிந்து வரும்போது ஒரு ஆத்மார்த்தமான படம் பார்த்த உணர்வு வருகிறது.

கண்டிப்பாக தவற விடக்கூடாத சினிமா!